< அப்போஸ்தலர் 11 >
1 ௧ யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள்.
2 ௨ பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
3 ௩ விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள்.
4 ௪ அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லத்தொடங்கி:
5 ௫ நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அது என்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
6 ௬ அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன்.
7 ௭ அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
8 ௮ அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதுவும் எப்போதும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
9 ௯ இரண்டாவதுமுறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம் என்று சொல்லியது.
10 ௧0 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
11 ௧௧ உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்குமுன்னே வந்துநின்றார்கள்.
12 ௧௨ நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரர்களாகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தோம்.
13 ௧௩ அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதைப் பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை அழைத்துவரும்படி மனிதர்களை அந்த இடத்திற்கு அனுப்பு;
14 ௧௪ நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான்.
15 ௧௫ நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
16 ௧௬ யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப்பார்த்தேன்.
17 ௧௭ எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான்.
18 ௧௮ இவைகளை அவர்கள் கேட்டபொழுது உட்கார்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதவர்களுக்கும் கொடுத்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
19 ௧௯ ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
20 ௨0 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள்.
21 ௨௧ கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள்.
22 ௨௨ எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள்.
23 ௨௩ அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான்.
24 ௨௪ அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
25 ௨௫ பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவிற்குப் புறப்பட்டுப்போய், அவனைப் பார்த்து, அந்தியோகியாவிற்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
26 ௨௬ அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது.
27 ௨௭ அந்த நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
28 ௨௮ அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே நடந்தது.
29 ௨௯ அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
30 ௩0 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.