< 2 சாமுவேல் 9 >
1 ௧ யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
இதன்பின்பு தாவீது, “யோனத்தானுக்காக நான் தயவுகாட்டும்படி, சவுலின் குடும்பத்தில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?” என்று கேட்டான்.
2 ௨ அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
அப்பொழுது சீபா என்னும் பெயருடைய சவுலின் வீட்டுப் பணியாளன் ஒருவன் இருந்தான். அவனைத் தாவீதுக்கு முன்பாக வரும்படி அழைத்தார்கள். அரசன் அவனிடம், “நீ தானா சீபா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உமது அடியானே தான்” என்றான்.
3 ௩ அப்பொழுது ராஜா: தேவனுக்காக நான் சவுலின் குடும்பத்தார்களுக்குத் தயைசெய்யும்படி அவன் குடும்பத்தார்களில் யாராவது ஒருவன் இன்னும் மீதியாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான் என்றான்.
அரசன் அவனிடம், “இறைவனுடைய தயவை நான் காட்டும்படி சவுலின் குடும்பத்தில் ஒருவரும் இல்லையா?” என்று கேட்டான். அதற்கு சீபா, “இரண்டு கால்களும் முடமான யோனத்தானின் மகன் ஒருவன் இன்னும் உயிரோடிருக்கிறான்” என்றான்.
4 ௪ அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
“அவன் எங்கே?” என அரசன் கேட்டான். அதற்கு சீபா, “அவன் லோதேபாரில் அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் இருக்கிறான்” என்றான்.
5 ௫ அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.
6 ௬ சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணக்கம் தெரிவித்தான். அப்போது தாவீது அவனிடம், “மேவிபோசேத்தே” என்றான். அதற்கு அவன், “இதோ உமது அடியேன்” என்றான்.
7 ௭ தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானுக்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான்.
தாவீது அவனிடம், “பயப்படாதே; உன் தகப்பன் யோனத்தானின் நிமித்தம் நிச்சயம் உனக்கு தயவுகாட்டுவேன். உன் பாட்டன் சவுலுக்கு சொந்தமாயிருந்த நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும் நீ எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவாய்” என்றான்.
8 ௮ அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.
இதைக் கேட்ட மேவிபோசேத் தாவீதை வணங்கி, “செத்த நாய் போன்ற என்னை நீர் கவனத்தில்கொள்வதற்கு உமது அடியவன் எம்மாத்திரம்?” என்றான்.
9 ௯ ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.
அதன்பின் அரசன் சவுலின் பணியாளனாயிருந்த சீபாவை அழைப்பித்து அவனிடம், “சவுலுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சொந்தமாயிருந்த யாவற்றையும் உன் எஜமானின் பேரனுக்குக் கொடுத்துள்ளேன்.
10 ௧0 எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் சாப்பிடுவான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்.
நீயும் உன் மகன்களும் உன் பணியாட்களும் அந்த நிலத்தை அவனுக்காகப் பயிரிடுங்கள். உன் எஜமானுடைய பேரனின் பராமரிப்புக்காக அதன் விளைச்சலைக் கொண்டுவாருங்கள். ஆனாலும் உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவான்” என்றான். சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.
11 ௧௧ சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான்.
அப்பொழுது சீபா அரசனிடம், “என் தலைவனாகிய அரசன் எனக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்” என்றான். எனவே மேவிபோசேத் அரசனின் மகன்களில் ஒருவனைப்போல் தாவீதின் பந்தியில் சாப்பிட்டு வந்தான்.
12 ௧௨ மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.
மேவிபோசேத்துக்கு மீகா என்னும் பெயருடைய வாலிபனான ஒரு மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மேவிபோசேத்துக்கு பணியாட்களாயிருந்தார்கள்.
13 ௧௩ மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.
மேவிபோசேத்துக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தபடியாலும், எப்பொழுதும் அரசனுடைய பந்தியில் சாப்பிட்டபடியாலும் எருசலேமிலேயே வாழ்ந்து வந்தான்.