< 2 நாளாகமம் 4 >

1 அன்றியும் இருபது முழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் செய்தான்.
சாலொமோன் இருபதுமுழ நீளம், முப்பதுமுழ அகலம், பத்துமுழ உயரமுடைய ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான்.
2 வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; வட்டவடிவமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புவரை பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
அவன் வார்ப்பிக்கப்பட்ட உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
3 அதின் கீழ்ப்புறமாக காளைகளின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்தக் காளைகளின் இரண்டு வரிசைகள் இருந்தது.
அதன் விளிம்பின் கீழ்ப்பகுதியில் ஒரு முழத்திற்கு பத்து காளைகளின் உருவங்கள் இருக்கும்படி சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன.
4 அது பன்னிரண்டு காளைகளின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயரமாக இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாக இருந்தது.
வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன.
5 அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 60,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
6 கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்செய்துகொள்ளுகிறதற்காக இருந்தது.
அதன்பின் அவன், கழுவுவதற்காக பத்து தண்ணீர்த் தொட்டிகளையும் செய்து, ஐந்து தொட்டிகளை தெற்குப் பக்கத்திலும் ஐந்து தொட்டிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அவைகளிலேயே தகன காணிக்கைக்குரிய பொருட்கள் கழுவப்பட்டன. ஆனால் அந்தப் பெரிய தொட்டியோ ஆசாரியர்கள் கழுவுவதற்கென இருந்தது.
7 பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய முறையின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
அவன் பத்து தங்க விளக்குத் தாங்கிகளைக் குறிக்கப்பட்ட விதிப்படி செய்தான். அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான்.
8 பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் செய்தான்.
அவன் பத்து மேஜைகளையும் செய்து, அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அத்துடன் தங்கத்தினால் நூறு தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான்.
9 மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
அவன் ஆசாரியருக்கான முற்றத்தையும், பெரிய முற்றத்தையும், அந்த முற்றங்களுக்குரிய கதவுகளையும் செய்து, கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினான்.
10 ௧0 கடல்தொட்டியைக் கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான்.
அவன் அந்தப் பெரிய தொட்டியைத் தெற்கு பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் வைத்தான்.
11 ௧௧ ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இந்தவிதமாக ஈராம் யெகோவாவுடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான்.
அத்துடன் ஈராம் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, இறைவனின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்:
12 ௧௨ அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,
இரண்டு தூண்கள், தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள், தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்,
13 ௧௩ தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதுளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னல்களிலும் இருக்கிற நானூறு மாதுளம்பழங்களுமே.
தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள்,
14 ௧௪ ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
தாங்கும் கால்களுடன் அதன் தொட்டிகள்;
15 ௧௫ ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகளையும்,
பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள்,
16 ௧௬ செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம் அபி, ராஜாவாகிய சாலொமோனுக்குக் யெகோவாவின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் செய்தான்.
பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், இறைச்சி குத்தும் முட்கரண்டிகள் இன்னும் தேவையான மற்றும் எல்லாப் பொருட்களுமே. யெகோவாவினுடைய ஆலயத்தின் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் அபி என்பவன் அரசன் சாலொமோனுக்கு பளபளக்கும் வெண்கலத்தினால் செய்துமுடித்தான்.
17 ௧௭ யோர்தானைச்சார்ந்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சேரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான்.
18 ௧௮ இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாக உண்டாக்கினான்; வெண்கலத்தின் எடை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
இப்பொருட்களைச் செய்வதற்கு சாலொமோன் பயன்படுத்திய வெண்கலம் மிக அதிகமாய் இருந்தபடியால் அதன் எடை எவ்வளவு எனத் தீர்மானிக்கப்படவில்லை.
19 ௧௯ தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும்,
அத்துடன் இன்னும் இறைவனின் ஆலயத்திலுள்ள பொருட்களை சாலொமோன் செய்தான். அவையாவன: தங்க பலிபீடம், இறைசமுகத்து அப்பங்களை வைப்பதற்கான மேஜைகள்,
20 ௨0 முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
உட்புற பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் நிர்ணயித்த முறைப்படி எரிப்பதற்கு, சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகளுடன் அதன் விளக்குகள்,
21 ௨௧ சுத்தத் தங்கத்தால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
கட்டித் தங்கத்தினாலான பூ வேலைப்பாடுகள், அகல்விளக்குகள், இடுக்கிகள்.
22 ௨௨ பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் செய்தான்; மகா பரிசுத்தஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் அனைத்தும் பொன்னாயிருந்தது.
சுத்தத் தங்கத்தினாலான திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், அகப்பைகள், தூப கலசங்கள், ஆலயத்திற்கு தங்கக் கதவுகள், அதாவது மகா பரிசுத்த இடத்தின் உட்புறக் கதவுகள், பிரதான மண்டபத்தின் கதவுகள் ஆகியனவாகும்.

< 2 நாளாகமம் 4 >