< 2 நாளாகமம் 13 >

1 ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருடத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான்.
2 மூன்று வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் போர் நடந்தது.
அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.
3 அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நான்குலட்சம்பேராகிய பலசாலிகளான படைவீரர்களைப் போருக்கு ஆயத்தம்செய்தான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய மிகவும் பலம்வாய்ந்த படைவீரர்களை அவனுக்கு எதிராக போருக்கு நிறுத்தினான்.
அபியா தேர்ந்தெடுக்கப்பட்ட 4,00,000 வலிமையான போர்வீரர்களுடன் போருக்குப் போனான்; அது போன்றே யெரொபெயாமும் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,00,000 வலிமையான போர்வீரர்களுடன் அவனுக்கு எதிராக அணிவகுத்து நின்றான்.
4 அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
அபியா எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள செமராயீம் குன்றுமேல் ஏறி நின்று சொன்னதாவது: “யெரொபெயாமே, இஸ்ரயேலரே, நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள்.
5 இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் அரசாட்சியை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் மாறாத உடன்படிக்கையாகக் கட்டளையிட்டதை நீங்கள் அறியவில்லையா?
இஸ்ரயேலின் அரச பதவியை இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தாவீதுக்கும், அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர உடன்படிக்கையினால் என்றென்றைக்குமாக கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா?
6 ஆகிலும் தாவீதின் மகனாகிய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் மகன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
ஆனாலும் தாவீதின் மகனான சாலொமோனின் அதிகாரியான நேபாத்தின் மகன் யெரொபெயாம், தனது தலைவனுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறான்.
7 துன்மார்க்க மக்களாகிய வீணர்கள் அவனோடுகூடி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கமுடியாமல் இளவயதும் உறுதியற்ற மனமுள்ளவனாக இருக்கும்போது, அவனுக்கு விரோதமாகத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
ஒன்றுக்கும் உதவாத சில வீணர்கள் யெரொபெயாமுடன் ஒன்றுசேர்ந்து, சாலொமோனின் மகன் ரெகொபெயாமை எதிர்த்தார்கள்; அப்பொழுது ரெகொபெயாம் மனவலிமையற்ற வாலிபனும் எதிர்ப்பதற்கு பெலனற்றவனுமாயிருந்தான்.
8 இப்போதும் தாவீதுடைய மகன் கையிலிருக்கிற யெகோவாவுடைய ராஜ்ஜியத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தெய்வங்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.
“இப்பொழுது நீங்கள் தாவீதின் சந்ததிகளின் கைகளில் யெகோவா கொடுத்த அரசாட்சியை எதிர்த்து நிற்கத் திட்டமிட்டுள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே பெருங்கூட்டமாய் இருக்கிறீர்கள்; யெரொபெயாம் உங்களுக்குத் தெய்வங்களாயிருக்கும்படி செய்த தங்கக் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் உண்டு.
9 நீங்கள் ஆரோனின் மகன்களாகிய யெகோவாவுடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் மக்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டை செய்துகொள்ள வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
ஆனால் நீங்கள் ஆரோனின் மகன்களான யெகோவாவின் ஆசாரியர்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு, மற்ற நாட்டு மக்கள் செய்ததுபோல் உங்களுக்குள்ளேயே நீங்கள் ஆசாரியர்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லையா? தன்னை அர்ப்பணிக்கும்படி ஒரு இளங்காளையையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவருகிற எவனும் தெய்வங்கள் அல்லாதவற்றிற்கு ஆசாரியர்களாய் இருக்கமுடிந்ததே.
10 ௧0 எங்களுக்கோ யெகோவாவே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்கு ஊழியம்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
“எங்களுக்கோவெனில் யெகோவாவே எங்கள் இறைவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை. யெகோவாவுக்குப் பணிசெய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களாயிருக்கிறார்கள்; லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்கிறார்கள்.
11 ௧௧ அவர்கள் தினந்தோறும் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்து அப்பங்களை அடுக்கிவைத்து, பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளை மாலைதோறும் ஏற்றுகிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவின் நியமங்களைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.
ஒவ்வொரு காலையும் மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், நறுமணத் தூபங்களையும் செலுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாலை வேளையிலும் தூய்மையான மேஜையில் அப்பங்களை அடுக்கிவைத்து, தங்கக் குத்துவிளக்குகளின் மேலுள்ள அகல் விளக்குகளையும் ஏற்றுவார்கள். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவா செய்யும்படி சொன்னவற்றை நிறைவேற்றினோம். ஆனால் நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள்.
12 ௧௨ இதோ, தேவன் எங்கள் சேனாபதியாக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாக முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக போர்செய்யாதீர்கள்; செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்றான்.
இறைவன் எங்களோடிருக்கிறார்; அவரே எங்கள் தலைவராயிருக்கிறார். எக்காளங்களுடன் நிற்கும் அவருடைய ஆசாரியர்கள் உங்களுக்கெதிராக போர் முழக்கமிடுவார்கள். இஸ்ரயேல் மக்களே, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் போரிடாதீர்கள்; ஏனெனில் நீங்கள் வெற்றிபெறமாட்டீர்கள்” என்றான்.
13 ௧௩ யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு இரகசியப் படையை சுற்றிப்போகச் செய்தான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த இரகசியப் படை அவர்களுக்குப்பின் இருந்தது.
யெரொபெயாமோ படைகளை யூதாவைச் சுற்றிப் பின்பக்கமாய்ப் போகும்படி அனுப்பினான். இவ்விதமாக அவன் யூதாவுக்கு முன்னால் நின்றான். மறைந்திருந்து தாக்குவோர் அவர்களுக்கு பின்னால் இருந்தனர்.
14 ௧௪ யூதா மக்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் போர் நடக்கிறதைக் கண்டு, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.
யூதா மக்கள் திரும்பிப் பார்த்துத் தாங்கள் முன்னும் பின்னும் தாக்கப்படுவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை ஊதினார்கள்.
15 ௧௫ யூதா மனிதர்கள் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனிதர்கள் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்தார்.
யூதாவின் மனிதர்கள் போர் முழக்கமிட்டார்கள். அவர்களுடைய போர் முழக்கத்தின்போது இறைவன் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக யெரொபெயாமையும் எல்லா இஸ்ரயேலரையும் முறியடித்தார்.
16 ௧௬ இஸ்ரவேல் மக்கள் யூதாவுக்கு முன்பாகத் தோற்று ஓடினார்கள்; தேவன் அவர்களை யூதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
இஸ்ரயேலர் யூதாவுக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். இறைவன் அவர்களை யூதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
17 ௧௭ அபியாவும் அவனுடைய மக்களும் அவர்களில் பெரும்பகுதியை அழித்தார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலில் வெட்டுண்டு விழுந்தார்கள்.
அபியாவும் அவனுடைய மனிதர்களும் இஸ்ரயேலர்களில் பெருமளவில் வெட்டி வீழ்த்தினார்கள். எனவே அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5,00,000 வலிமைமிக்க போர்வீரர்கள் இறந்தார்கள்.
18 ௧௮ அப்படியே இஸ்ரவேல் மக்கள் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா மனிதர்களோ தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொண்டதால் மேற்கொண்டார்கள்.
இஸ்ரயேல் மனிதர் அந்த சந்தர்ப்பத்தில் யூதாவுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள். யூதாவின் மனிதர் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்ததினால் வெற்றியடைந்தார்கள்.
19 ௧௯ அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து துரத்தி, அவனிடமிருந்து பெத்தேல், எஷானா, எப்ரோன் ஆகிய பட்டணங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினான்.
20 ௨0 பிறகு அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலப்படமுடியாமற்போனது. யெகோவா அவனை அடித்ததால் மரணமடைந்தான்.
அபியாவின் நாட்களில் யெரொபெயாம் திரும்பவும் வலிமை அடையவில்லை. யெகோவா அவனை அடித்தார், அவன் இறந்துபோனான்.
21 ௨௧ அபியா பலத்துப்போனான்; அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து, இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்.
ஆனால் அபியா மேலும் வலிமையடைந்தான். அவன் பதினான்கு பெண்களைத் திருமணம் செய்தான். இருபத்து இரண்டு மகன்களும், பதினாறு மகள்களும் அவனுக்கு இருந்தார்கள்.
22 ௨௨ அபியாவின் மற்ற செயல்களும், நடத்தைகளும், வார்த்தைகளும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அபியா செய்தவைகளும் சொன்னவைகளுமான அவனுடைய ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் இறைவாக்கினனான இத்தோவின் விளக்கவுரையில் எழுதப்பட்டுள்ளன.

< 2 நாளாகமம் 13 >