< 1 தீமோத்தேயு 6 >

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
அடிமைத்தன நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை முழு மதிப்புக்குரியவர்களாக எண்ணவேண்டும். அப்பொழுதே நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் போதித்தலுக்கும் அவதூறு ஏற்படாது.
2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
விசுவாசிகளான எஜமான்களின்கீழ் இருக்கும் அடிமைகளும் தங்கள் எஜமான்கள் சகோதரர்களானபடியால், அவர்களுக்குக் குறைவான மதிப்பைக் கொடுக்கக்கூடாது. மாறாக தங்கள் பணியினால் இலாபம் பெறுபவர்கள், விசுவாசிகளும் தங்களுக்கு அன்பானவர்களுமாய் இருப்பதனால், அவர்கள் இன்னும் சிறப்பாய் பணிசெய்ய வேண்டும். நீ அவர்களுக்கு போதித்து, வற்புறுத்திக் கூறவேண்டிய காரியங்கள் இவையே.
3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
யாராவது தவறான கோட்பாடுகளை போதிக்கிறவனாகவும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நலமான அறிவுறுத்தல்களுக்கும், இறை பக்திக்கு உகந்த போதித்தலுக்கும் உடன்படாதவனாகவும் இருந்தால்,
4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,
அவன் ஆணவம் உள்ளவனும், ஒன்றும் புரியாதவனாய் இருக்கிறான். அவன் எரிச்சல், சண்டை, அவதூறான பேச்சுகள், தீமையான சந்தேகங்கள் ஆகியவற்றை உண்டாக்கும் வார்த்தைகளைக் கொண்ட சண்டை சச்சரவுகளிலும், எதிர்வாதம் செய்வதிலும் மிதமிஞ்சிய விருப்பம் கொண்டவன்.
5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.
அத்துடன், சீர்கெட்ட மனங்கொண்ட மனிதருக்கிடையில் உண்டாகும் முரண்பாடான பேச்சுகளிலும் அவனுக்கு விருப்பமுண்டு. இம்மனிதரோ சத்தியத்தை இழந்துபோனவர்களாய், இறை பக்தியை பணம் சம்பாதிக்கும் இலாபத்திற்கான ஒரு வழி என எண்ணுகிறார்கள்.
6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறை பக்தியே பெரும் இலாபம்.
7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
ஏனெனில், நாம் இந்த உலகத்திற்கு ஒன்றையும் கொண்டுவரவுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை.
8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம்.
9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன.
10 ௧0 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள்.
11 ௧௧ நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு.
12 ௧௨ விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios g166)
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,
எல்லாவற்றிற்கும் உயிர் கொடுக்கிற இறைவனுக்கு முன்பாகவும், பொந்தியு பிலாத்துவின் முன்னால் தனது சாட்சியில் நல்ல அறிக்கை செய்த கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும் நான் உனக்குப் பொறுப்புக் கொடுக்கிறேன்.
14 ௧௪ எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் தோன்றுமளவும், எவ்வித மாசும் மறுவுமின்றி இந்தக் கட்டளைகளைக் கைக்கொள்.
15 ௧௫ இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
இறைவனே தமக்குரிய காலத்தில் கிறிஸ்துவை தோன்றப்பண்ணுவார். இறைவனே துதிக்கப்படத்தக்க ஒரே ஆளுநரும், அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர் ஆனவர்.
16 ௧௬ அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios g166)
17 ௧௭ இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn g165)
18 ௧௮ நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
அவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து நன்மை செய்யவேண்டும் என்றும், நற்செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாய் இருக்கவேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாயும், மனமுவந்து தங்களுக்குள்ளவற்றை பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாயும் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிடு.
19 ௧௯ நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
இவ்விதமாகவே, அவர்கள் வருங்காலத்திற்கான உறுதியான அஸ்திபாரமாக தங்களுக்குத் திரவியத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். இதனால், அவர்கள் உண்மையான வாழ்வை அடைய முடியும்.
20 ௨0 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
தீமோத்தேயுவே, இறைவன் உன்னிடத்தில் ஒப்படைத்தவற்றைக் கவனமாகக் காத்துக்கொள். பக்தியில்லாத பேச்சுக்களையும், பொய்யாகவே அறிவு எனக்கூறும் முரண்பாடான நோக்கங்களையும் விட்டு விலகியிரு.
21 ௨௧ சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.
சிலர் இவற்றை அறிக்கைசெய்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபை உன்னோடு இருப்பதாக.

< 1 தீமோத்தேயு 6 >