< 1 தெசலோனிக்கேயர் 2 >
1 ௧ சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாயிருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
2 ௨ உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
நாங்கள் உங்களிடம் வரும் முன்பதாக, பிலிப்பி பட்டணத்திலே துன்புறுத்தப்பட்டோம். அவமானப்படுத்தப்பட்டோம் என்பதும் உங்களுக்கும் தெரியும். பலத்த எதிர்ப்பு இருந்தபோதுங்கூட, நமது இறைவனுடைய உதவியினாலே அவருடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நாங்கள் துணிவு பெற்றோம்.
3 ௩ எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை.
ஏனெனில், எங்களுடைய போதனை பிழைகளிலிருந்தோ, கெட்ட நோக்கங்களிலிருந்தோ உருவாகவில்லை அல்லது உங்களை ஏமாற்றுவதற்காகவோ செய்யப்படவில்லை.
4 ௪ தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
மாறாக, நற்செய்தி ஒப்படைக்கப்படுவதற்கு, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகிறோம். நாங்கள் மனிதரை அல்ல, எங்கள் உள்ளங்களை சோதித்து அறிகிற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம்.
5 ௫ உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி.
நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாக புகழ்ந்து பேசவோ, மறைக்கப்பட்ட முகமூடி போட்டு பேராசையுடன் நடந்துகொள்ளவோ இல்லை. இதற்கு இறைவனே எங்களுக்கு சாட்சி.
6 ௬ நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
உங்களிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தோ, நாங்கள் மனிதனால் வரும் புகழ்ச்சியைத் தேடவுமில்லை. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர் என்ற முறையில், உங்களுக்கு ஒரு சுமையாய் இருந்திருக்கலாம்.
7 ௭ பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;
ஆனால், நாங்கள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதுபோல, உங்களுடனே கனிவாய் நடந்து கொண்டோம்.
8 ௮ நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம்.
நாங்கள் உங்களில் அதிக அன்பாய் இருந்ததினால், உங்களுடன் இறைவனுடைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமல்ல, எங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொண்டோம்; ஏனெனில், நீங்கள் எங்களின் அன்புக்குரியவர்களானீர்கள்.
9 ௯ சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.
பிரியமானவர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் கஷ்டமும் உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே; இறைவனுடைய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்தபோது யாருக்கும் நாங்கள் சுமையாய் இராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்தோம்.
10 ௧0 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடையே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், குற்றம் காணப்படாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சியாய் இருக்கிறார்.
11 ௧௧ மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று,
ஒரு தந்தை தனது பிள்ளைகளை நடத்துவதுபோலவே, நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.
12 ௧௨ தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
நாங்கள் உங்களை உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தினோம். தம்முடைய அரசுக்குள்ளும் மகிமைக்குள்ளும் உங்களை அழைக்கிற இறைவனுக்கேற்ற வாழ்க்கையை வாழுங்கள் என்று உங்களை ஊக்குவித்தோம்.
13 ௧௩ ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.
நாங்கள் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், நீங்கள் எங்களிடமிருந்து கேட்ட இறைவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாய் ஏற்றுக்கொள்ளாமல், உண்மையாய் உள்ளபடியே அதை இறைவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். விசுவாசிக்கிறவர்களாகிய உங்களுக்குள்ளே அந்த வார்த்தை செயலாற்றுகிறது.
14 ௧௪ எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள்.
பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற யூதேயாவிலுள்ள இறைவனுடைய திருச்சபைகளை நீங்கள் பின்பற்றினீர்கள்: அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டதுபோலவே, நீங்களும் உங்கள் நாட்டு மக்களால் துன்பப்பட்டீர்கள்.
15 ௧௫ அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,
இந்த யூதரே கர்த்தராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் வெளியே துரத்தினார்கள். அவர்கள் இறைவனின் விருப்பத்திற்கு விரோதமாய் நடந்து, அநேகருக்கு பகைவர்களாய் இருக்கிறார்கள்.
16 ௧௬ யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.
ஏனெனில், யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி, நாங்கள் அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதைத் தடைபண்ணுகிறார்கள். இவ்விதமாக, அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவத்தின் அளவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக, இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் வரப்போகிறது.
17 ௧௭ சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.
ஆனாலும் பிரியமானவர்களே, நாங்கள் சிறிதுகாலம் உங்களைவிட்டுப் பிரிக்கப்பட்டிருந்தோம். எங்கள் உடல்தான் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததே தவிர, எங்கள் உள்ளம் உங்களைவிட்டுப் பிரிந்திருக்கவில்லை. பிரிந்திருந்தக் காலத்தில் உங்களை நேரில் காண மிகுந்த ஆவலுடையவர்களாய் இருந்தபடியால், நாங்கள் உங்களைப் பார்ப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் எடுத்தோம்.
18 ௧௮ ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.
உண்மையிலேயே உங்களிடம் வருவதற்கு நாங்கள் விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும், மீண்டும் முயற்சிசெய்தேன். ஆனாலும், சாத்தான் எங்களைத் தடை செய்தான்.
19 ௧௯ எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
நம்முடைய கர்த்தராகிய இயேசு வரும்போது, எங்களுடைய எதிர்பார்ப்பாயும் மகிழ்ச்சியாயும், எங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும் கிரீடமாயும் அவருக்கு முன்னிலையில் இருக்கப்போவது யார்? அது நீங்கள் அல்லவா?
20 ௨0 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.
உண்மையாக நீங்களே எங்கள் மகிமையும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறீர்கள்.