< 1 சாமுவேல் 1 >
1 ௧ எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன்.
எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள ராமதாயீமைச் சேர்ந்த சோப்பீம் ஊரிலே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய பெயர் எல்க்கானா. இவன் எரோகாமின் மகன். எரோகாம் எலிகூவின் மகன். எலிகூ தோகுவின் மகன். தோகு எப்பிராயீமியனான சூப்பின் மகன்.
2 ௨ அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தியின் பெயர் அன்னாள்; மற்றவளின் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை.
3 ௩ அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் யெகோவாவை தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே யெகோவாவின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள்.
எல்க்கானா ஒவ்வொரு வருடமும் சேனைகளின் யெகோவாவுக்குப் பலி செலுத்தவும், அவரை வழிபடவும் தன் ஊரிலிருந்து சீலோவுக்குப் போய்வருவான். அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் யெகோவாவின் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
4 ௪ அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான்.
எல்க்கானா பலிசெலுத்தும் நாள் வரும்போதெல்லாம் இறைச்சியின் பங்குகளை மனைவி பெனின்னாளுக்கும் அவளுடைய எல்லா மகன்களுக்கும், மகள்களுக்கும் கொடுப்பான்.
5 ௫ அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான்; யெகோவாவோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
ஆனால் எல்க்கானா அன்னாளின்மேல் அன்பு செலுத்தியபடியால் அவளுக்கு இரண்டு மடங்கு பங்கைக் கொடுத்தான். யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுத்திருக்கவில்லை.
6 ௬ யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.
யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுக்காதபடியால், பெனின்னாள் அவள் மனம் வருந்தும்படி அவளுக்குச் சினமூட்டிக் கொண்டிருந்தாள்.
7 ௭ அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
இவ்விதமாக ஒவ்வொரு வருடமும் நடந்தது. அன்னாள் யெகோவாவினுடைய ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் பெனின்னாள் அவளுக்குச் சினமூட்டினாள். இதனால் அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
8 ௮ அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.
இதைக் கண்டவுடன் அவள் கணவன் எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களிலும் பார்க்க நான் உனக்கு மேலானவன் அல்லவா?” என்று கேட்பான்.
9 ௯ சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி யெகோவாவுடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான்.
ஒருமுறை சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின், அன்னாள் எழுந்தாள். அந்நேரம் ஆசாரியன் ஏலி, யெகோவாவினுடைய ஆலயத்தின் கதவு நிலையருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.
10 ௧0 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள்.
11 ௧௧ சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.
அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள்.
12 ௧௨ அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான்.
13 ௧௩ அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான்.
14 ௧௪ அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.
அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான்.
15 ௧௫ அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன்.
16 ௧௬ உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள்.
உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண் என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள்.
17 ௧௭ அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
அப்பொழுது ஏலி அவளிடம், “நீ சமாதானத்தோடே போ. இஸ்ரயேலின் இறைவனிடம் நீ கேட்டுக்கொண்டதை அவர் உனக்குத் தருவாராக” என்றான்.
18 ௧௮ அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.
அதற்கு அவள், “உமது அடியாளுக்கு உமது கண்களில் தயவு கிடைப்பதாக” என்றாள். அன்னாள் அவ்விடமிருந்து போய் சிறிது உணவு சாப்பிட்டாள். அதன்பின் அவள் முகம் துக்கமுகமாக இருக்கவில்லை.
19 ௧௯ அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார்.
அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து யெகோவாவுக்கு முன்பாக வழிபட்டபின், அவ்விடத்தைவிட்டு ராமாவிலுள்ள தங்கள் வீட்டுக்குப் போனார்கள். எல்க்கானா, தன் மனைவி அன்னாளை நேசித்து, அவளோடு இணைந்தான். ஆண்டவர் அன்னாளின் வேண்டுதலை நினைத்தார்.
20 ௨0 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.
சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவாவிடமிருந்து அவனைக் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி அவனுக்கு, சாமுயேல் என்று பெயரிட்டாள்.
21 ௨௧ எல்க்கானா என்பவன் யெகோவாவுக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான்.
எல்க்கானா யெகோவாவுக்கு வருடாந்த பலியைச் செலுத்தவும், நேர்த்திக்கடனைச் செலுத்தவும் போனான்.
22 ௨௨ அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.
அப்பொழுது அன்னாள் அவர்களுடன் போகவில்லை. அவள் தன் கணவன் எல்க்கானாவிடம், “பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின் அவனைக் கொண்டுபோய் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் எப்பொழுதும் அங்கேயே இருப்பான்” என்றாள்.
23 ௨௩ அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள்.
அதற்கு எல்க்கானா, “உன் விருப்பப்படியே உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படி செய், பிள்ளை பால்குடிப்பதை மறக்கும்வரை இங்கேயே இரு. யெகோவா தன் வார்த்தையை நிறைவேற்றுவாராக” என்றான். எனவே அவள் மகன் பால்குடிப்பதை மறக்குமட்டும் அந்தப் பெண் வீட்டிலேயே வைத்து, பாலூட்டினாள்.
24 ௨௪ அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.
அவன் பால்குடிப்பதை மறந்தபின் அவன், குழந்தையாய் இருந்தும் அவனைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு, சீலோவிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு அன்னாள் போனாள். அவனுடன் மூன்று வயது காளையையும், ஒரு எப்பா அளவு மாவையும், ஒரு குடுவை திராட்சை இரசத்தையும் தன்னுடன் கொண்டுபோனாள்.
25 ௨௫ அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.
அங்கே அவர்கள் காளையைப் பலியிட்டபின், பிள்ளையை ஏலியிடம் கொண்டுபோனார்கள்.
26 ௨௬ அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
அப்பொழுது அன்னாள் ஏலியிடம், “ஐயா நீர் வாழ்வது நிச்சயம்போல், அன்றொருநாள் உமக்கு அருகே நின்று யெகோவாவிடம் வேண்டுதல் செய்த பெண் நான்தான் என்பதும் நிச்சயம்.
27 ௨௭ இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் யெகோவாவிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
இந்தப் பிள்ளைக்காகவே நான் மன்றாடினேன். யெகோவாவும் நான் அவரிடம் கேட்டதை எனக்குக் கொடுத்தார்.
28 ௨௮ எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான்.
ஆகவே அவனை இப்பொழுது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அவன் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பான்” என்றாள். அவர்கள் அங்கே யெகோவாவை வழிபட்டார்கள்.