< சகரியா 9 >
1 ஒரு இறைவாக்கு: யெகோவாவின் வார்த்தை ஹதெராக் நாட்டுக்கு விரோதமாய் இருக்கிறது. அவரது தண்டனை தமஸ்கு நகரத்தின்மேல் வரும். ஏனெனில் எல்லா மக்களினுடைய, இஸ்ரயேல் வம்சம் முழுவதினுடைய கண்கள் யெகோவாவையே நோக்கிக் கொண்டிருக்கின்றன.
௧ஆதிராக் தேசத்திற்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான யெகோவாவுடைய வார்த்தையாகிய செய்தி; மனிதர்களின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் யெகோவாவை பார்த்துக்கொண்டிருக்கும்.
2 தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும், தீரு, சீதோன் பட்டணங்கள் திறமைமிக்கதாய் இருந்தபோதும், அவற்றின்மேலும் அவரது தண்டனை வரும்.
௨ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும், சீதோனும் அதின் எல்லைக்குள்ளாக இருக்கும்.
3 தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள்.
௩தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
4 ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார். அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள்.
௪இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும்.
5 அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்; காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும். எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப்போகும். காசா தன் அரசனை இழப்பாள். அஸ்கலோன் பாழாய்ப்போகும்.
௫அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும்.
6 வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள். நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாமல் ஒழிப்பேன்.
௬அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் தங்கியிருப்பார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
7 இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும் அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்; மீதியான பெலிஸ்தியரோ நம் இறைவனுக்கு உரியவராவார்கள். அவர்கள் யூதாவின் தலைவர்களாவார்கள். எக்ரோன் எபூசியரைப்போல் ஆகும். எனவே பெலிஸ்திய நாடு இஸ்ரயேலில் ஒரு பங்காகும்.
௭அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
8 ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து, என் ஆலயத்தைப் பாதுகாப்பேன்; நான் என் மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால், ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ளமாட்டார்கள்.
௮சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
9 சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு. எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி. இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் வருகிறார், தாழ்மையுள்ள அவர், கழுதையின்மேலும், கழுதைக் குட்டியான மறியின்மேலும் ஏறி வருகிறார்.
௯மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
10 எப்பிராயீமிலிருந்து தேர்களையும், எருசலேமிலிருந்து போர்க் குதிரைகளையும் அகற்றிவிடுவேன். யுத்த வில்லும் முறிக்கப்படும். உன் அரசர் நாடுகளுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் தொடங்கி, மறுகடல் வரையும், ஐபிராத்து நதிதொடங்கி, பூமியின் எல்லைகள் வரைக்கும் பரந்திருக்கும்.
௧0எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும்.
11 சீயோனே உனக்கோவெனில், உன்னுடன் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையின் இரத்தத்தின் நிமித்தம், தண்ணீரில்லாத குழியில் அடைபட்டுள்ள உன் கைதிகளை விடுதலை செய்வேன்.
௧௧உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன்.
12 நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் கோட்டைக்குத் திரும்புங்கள். நீங்கள் இழந்தவற்றை இரண்டு மடங்காகத் திரும்பவும் தருவேன் என நான் இப்பொழுதும் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
௧௨நம்பிக்கையுடைய சிறைகளே, பாதுகாப்பிற்குள் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
13 நான் எனது வில்லை வளைப்பது போல், யூதாவை வளைத்து, எப்பிராயீமை அதன் அம்பாக வைப்பேன்; சீயோனே, உன் மகன்களை நான் எழுப்புவேன். கிரேக்க நாடே, அவர்களை உன் மகன்களுக்கு விரோதமாய் அனுப்புவேன். என் மக்களைப் போர்வீரனின் வாளைப்போல் ஆக்குவேன்.
௧௩நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன்.
14 அப்பொழுது யெகோவா தமது மக்களுக்கு மேலாகக் காட்சியளிப்பார்; அவரது அம்பு மின்னலைப்போல் விரையும். ஆண்டவராகிய யெகோவா எக்காளத் தொனியை எழுப்புவார். அவர் தென்திசைச் சுழல் காற்றில் கெம்பீரமாய் வருவார்.
௧௪அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
15 சேனைகளின் யெகோவா தன் மக்களின் கேடகமாய் நின்று பாதுகாப்பார். அவர்கள் தமது பகைவர்களை அழித்து, கவண் கற்களால் தாக்கி வெற்றி பெறுவார்கள். அப்பொழுது அவர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டவர்களைப்போல் ஆரவாரிப்பார்கள். பலிபீடத்தின் மூலைகளில் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கிண்ணத்தைப்போல் அவர்கள் நிரம்பியிருப்பார்கள்.
௧௫சேனைகளின் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் அழித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் மதுமயக்கத்தினால் ஆரவாரம் செய்வார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
16 தமது மக்களின் மந்தையைப்போல, அந்த நாளில், அவர்களுடைய இறைவனாகிய யெகோவா அவர்களைப் பாதுகாப்பார். கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப்போல, அவரது நாட்டில் அவர்கள் மின்னுவார்கள்.
௧௬அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
17 அவர்கள் எவ்வளவு கவர்ச்சியும் அழகுமாய் இருப்பார்கள்! தானியமும், புதிய திராட்சை இரசமும் வாலிபரையும் இளம்பெண்களையும் ஊக்கமாய் வளர்க்கும்.
௧௭அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.