< சகரியா 5 >
1 மீண்டும் நான் பார்த்தபோது, அங்கே பறக்கும் புத்தகச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
௧நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.
2 அந்தத் தூதன் என்னிடம், “நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டான். நான், “பறக்கும் புத்தகச்சுருள் ஒன்றைக் காண்கிறேன், அது முப்பது அடி நீளமும், பதினைந்து அடி அகலமுமாயிருக்கிறது என்றேன்.”
௨தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
3 அப்பொழுது அவன் என்னிடம், “நாடெங்கும் பரவுகிற சாபமே அது; அதன் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, திருடுகிற ஒவ்வொருவனும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவான். மறுபக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, பொய் ஆணையிடுகிற ஒவ்வொருவனும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவான்.
௩அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
4 சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘நான் இந்த சாபத்தை வெளியே அனுப்புவேன், அப்பொழுது அது திருடன் வீட்டிலும், என் பெயரில் பொய் ஆணையிடுகிறவன் வீட்டிலும் நுழையும். அது அவன் வீட்டில் தங்கியிருந்து, அந்த வீட்டை அழிக்கும். அதன் மரவேலைப்பாடுகளும் கற்களுங்கூட முற்றிலும் அழிந்துவிடும் என்றான்.’”
௪அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.
5 பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம் வந்து, “அங்கே தோன்றுவது என்ன என்று நீ நோக்கிப்பார் என்றான்.”
௫பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.
6 “அது என்ன?” என்று நான் அந்தத் தூதனைக் கேட்டேன். அதற்கு அவன், “அது அளக்கும் ஒரு கூடை” என்றான். மேலும் அவன், “நாடெங்கும் உள்ள மக்களின் அக்கிரமமே இது” என்றும் சொன்னான்.
௬அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
7 அதற்குப் பின்பு அதன் ஈயமூடி திறக்கப்பட்டது. அந்த கூடைக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
௭இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
8 அப்பொழுது அவன், “இவளே அந்த அக்கிரமம்” எனக்கூறி, அவளைத் திரும்பவும் கூடைக்குள் தள்ளி, அதன் வாயை ஈயமூடியால் அடைத்தான்.
௮அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
9 அதன்பின் நான் மேலே பார்த்தேன். அங்கே எனக்குமுன் இரண்டு பெண்கள் தங்கள் சிறகுகளை விரித்துக் காற்றுடன் வருவதைக் கண்டேன். நாரையின் சிறகுகளைப்போன்ற சிறகுகள் அவர்களுக்கு இருந்தன; அவர்கள் அந்த கூடையை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் உயரத் தூக்கினார்கள்.
௯அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
10 “கூடையை எங்கே அவர்கள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்?” என்று என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம் நான் கேட்டேன்.
௧0நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
11 அதற்கு அவன், “சிநெயார் நாட்டில் அதற்கு ஒரு கோயில் கட்டப்போகிறார்கள். அது கட்டப்பட்டதும், கூடை அதற்குரிய இடத்தில் வைக்கப்படும் என்றான்.”
௧௧அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.