< சகரியா 10 >
1 யூதா மக்களே, யெகோவாவிடம் வசந்தகாலத்தில் மழைக்காக மன்றாடுங்கள்; யெகோவாவே மழைமேகங்களை உண்டாக்குகிறவர். அவர் மனிதர்களுக்கு மழையைப் பொழியச்செய்து, அனைவருக்காகவும் வயலின் பயிர்களை விளையச் செய்கிறவர்.
௧பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது யெகோவா மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.
2 விக்கிரகங்கள் வஞ்சனை பேசுகின்றன. குறிசொல்கிறவர்கள் பொய்யான காட்சிகளைக் காண்கிறார்கள். உண்மையற்ற கனவுகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஆறுதலும் பயனற்றது. ஆகவே மக்கள் செம்மறியாடுகளைப்போல் வழிதப்பி, மேய்ப்பன் இல்லாதபடியால் ஒடுக்கப்படுகிறார்கள்.
௨சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.
3 “மேய்ப்பர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, தலைவர்களை நான் தண்டிப்பேன்; சேனைகளின் யெகோவா, யூதா குடும்பத்தாராகிய தமது மந்தையைப் பராமரிப்பார், அவர்களை யுத்த களத்தின் கம்பீரமான குதிரையைப் போலாக்குவார்.
௩மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் யெகோவா யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.
4 மூலைக்கல்லும் கூடாரத்திற்கான முளையும், யுத்த வில்லும், யூதாவிலிருந்தே தோன்றும். யூதாவிலிருந்தே எல்லா ஆளுநர்களும் தோன்றுவார்கள்.
௪அவர்களிலிருந்து மூலைக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற அனைவரும் ஒன்றாகப் புறப்படுவார்கள்.
5 யுத்தத்தில் வீதிகளின் சேற்றில் எதிரியை மிதிக்கும் வலிமையான மனிதர்போல், அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பார்கள். யெகோவா அவர்களோடிருப்பதால் அவர்கள் போரிட்டு, குதிரைவீரரையும் முறியடிப்பார்கள்.
௫அவர்கள் போரிலே தங்கள் எதிரிகளை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து போர் செய்வார்கள்; யெகோவா அவர்களுடன் இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.
6 “நான் யூதா குடும்பத்தாரைப் பெலப்படுத்துவேன். யோசேப்பு குடும்பத்தாரைக் காப்பாற்றுவேன். நான் அவர்கள்மேல் இரக்கங்கொண்டபடியால், நான் அவர்களை முந்திய நிலைக்குக் கொண்டுவருவேன். அவர்கள் என்னால் புறக்கணிக்கப்படாதவர்கள்போல் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே. நான் அவர்களின் வேண்டுதலுக்கு விடையளிப்பேன்.
௬நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை காப்பாற்றி, அவர்களைத் திரும்ப நிலைக்கச்செய்வேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா, நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.
7 எப்பிராயீமியர் வலிமைமிக்க மனிதரைப் போலாவார்கள். திராட்சை இரசம் குடித்தவர்களைப்போல் அவர்கள் உள்ளத்தில் மகிழ்வார்கள். அவர்களுடைய பிள்ளைகள் அதைக்கண்டு களிகூருவார்கள்; அவர்களின் உள்ளம் யெகோவாவிடம் மகிழும்.
௭எப்பிராயீம் மக்கள் திறமையானவர்களைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் யெகோவாவுக்குள் களிகூரும்.
8 நான் சைகை காட்டி அவர்களை ஒன்றுகூட்டுவேன். நிச்சயமாய் நான் அவர்களை மீட்பேன். அவர்கள் முன்போல் எண்ணற்றவர்களாய் இருப்பார்கள்.
௮நான் அவர்களைப் பார்த்து சைகைகாட்டி அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகுவார்கள்.
9 மக்கள் கூட்டங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தூரதேசங்களிலும் இன்னும் அவர்கள் என்னை நினைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் தப்பிப் பிழைப்பார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள்.
௯நான் அவர்களை மக்களுக்குள்ளே சிதறடித்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளுடன் பிழைத்துத் திரும்புவார்கள்.
10 அவர்களை நான் எகிப்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்து, அசீரியாவிலிருந்த அவர்களை ஒன்றுகூட்டி, கீலேயாத், லெபனோன் நாடுகளுக்குக் கொண்டுவருவேன். அவர்களுக்கு அங்கே போதுமான இடம் இருக்காது.
௧0நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத் தேசத்திற்கும் லீபனோனுக்கும் வரச்செய்வேன்; அவர்களுக்கு இடம் போதாமலிருக்கும்.
11 தொல்லை என்னும் கடலைக் கடந்து செல்வார்கள்; ஏனெனில் கொந்தளிக்கும் கடல் அமைதியாக்கப்படும். நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் அகந்தை தாழ்த்தப்படும். எகிப்தின் செங்கோலும் அதைவிட்டு எடுபடும்.
௧௧இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கும்போது அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.
12 நான் அவர்களை யெகோவாவிடம் பெலப்படுத்துவேன்” அவருடைய பெயரில் அவர்கள் நடப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
௧௨நான் அவர்களைக் யெகோவாவுக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.