< உன்னதப்பாட்டு 5 >
1 என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்; என் நறுமணப் பொருட்களுடன் என் வெள்ளைப்போளத்தையும் சேர்த்துக்கொண்டேன். என்னுடைய தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; நான் என்னுடைய திராட்சை இரசத்தையும் என் பாலையும் குடித்தேன். தோழியர் நண்பர்களே, சாப்பிடுங்கள், குடியுங்கள்; அன்பர்களே, திருப்தியாய்க் குடியுங்கள்.
௧என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்திற்கு வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். மணவாளி
2 நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது. கேளுங்கள், என் காதலர் கதவைத் தட்டுகிறார்: “என் சகோதரியே, என் அன்பே, என் புறாவே, என் உத்தமியே, கதவைத்திற. என் தலை பனியால் நனைந்திருக்கிறது, என் தலைமுடி இரவின் தூறலினால் நனைந்திருக்கிறது” என்கிறார்.
௨நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
3 நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்; அவற்றைத் திரும்பவும் நான் உடுக்க வேண்டுமோ? நான் என் கால்களைக் கழுவிவிட்டேன்; அவற்றைத் திரும்பவும் நான் அழுக்காக்க வேண்டுமோ?
௩என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
4 என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்; என் உள்ளம் அவரைக்காண துடித்தது.
௪என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
5 நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன், என் கையிலிருந்து வெள்ளைப்போளம் வடிந்தது; கதவின் பிடியில் என் கைவிரல்கள் வெள்ளைப்போளத்தைச் சிந்தின.
௫என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
6 நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன், ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார். அதினால் என் உள்ளம் ஏங்கியது. நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை. நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை.
௬என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.
7 காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது, என்னைக் கண்டார்கள். அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர், என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்; அவர்கள் அரணைக் காவல் செய்வோர்!
௭நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
8 எருசலேம் மங்கையரே, நான் உங்களுக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்; நீங்கள் என் காதலரைக் காண்பீர்களானால் என்னத்தைச் சொல்வீர்கள்? காதலினால் மயங்கியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.
௮எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள்
9 பெண்களுள் பேரழகியே, உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?
௯பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி
10 என் காதலர் பிரகாசமான சிவந்த தோற்றமுள்ளவர், பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர்.
௧0என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
11 அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது; தலைமயிரோ சுருள் சுருளாகவும் காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
௧௧அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
12 அவருடைய கண்களோ பாலில் குளித்து, நீரூற்றருகே தங்கும் புறாக்களைப்போலவும், பதிக்கப்பட்டக் கற்களைப்போலவும் இருக்கின்றன.
௧௨அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.
13 அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் பாத்திகள்போல் இருக்கின்றன. அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன.
௧௩அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
14 அவருடைய புயங்களோ கோமேதகம் பதித்த தங்க வளையல்களைப்போல் இருக்கின்றன. அவருடைய வயிறு நீலக்கற்களினால் அலங்கரிக்கப்பட்ட, துலக்கிய தந்தம்போல் இருக்கின்றது.
௧௪அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
15 அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால் அடித்தளமிடப்பட்ட பளிங்குத் தூண்களாய் இருக்கின்றன. அவருடைய தோற்றமோ லெபனோனைப்போலவும் அது சிறந்த கேதுரு மரங்களைப் போலவும் இருக்கிறது.
௧௫அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
16 அவருடைய வாய் இனிமையானது; அவர் முற்றிலும் அழகானவர். எருசலேமின் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்.
௧௬அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.