< உன்னதப்பாட்டு 4 >
1 என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்; முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்; உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.
௧நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.
2 உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு, குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.
௨உன்னுடைய பற்கள், ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
3 உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை; உன் வாய் அழகானது. உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.
௩உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாய் இன்பமுமாக இருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
4 உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது, அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன; அவைகளெல்லாம் போர் வீரர்களுடைய ஆயுதங்களே.
௪உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.
5 உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, அவை லில்லிகள் நடுவில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.
௫உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
6 பொழுது சாய்வதற்குள், நிழல் மறைவதற்குள், நான் வெள்ளைப்போள மலைக்கும், சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன்.
௬பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன்.
7 என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; உன்னில் குறைபாடு எதுவும் இல்லை.
௭என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; உன்னில் குறையொன்றும் இல்லை.
8 லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே, லெபனோனில் இருந்து என்னுடன் வா. அமனா மலைச் சிகரத்திலிருந்தும், சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும், சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா.
௮லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் உச்சியிலிருந்தும், சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா.
9 என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; உன் கண்களின் ஒரு பார்வையினாலே, உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
௯என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.
10 என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது! உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது; உனது வாசனைத் தைலத்தின் நறுமணம் எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது!
௧0உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
11 என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன; உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன. உன் உடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது.
௧௧என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.
12 என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம், நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு.
௧௨என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.
13 மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்; அங்கே சிறந்த கனிகளுண்டு, மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு.
௧௩உன் தோட்டம் மாதுளம்செடிகளும், அருமையான பழமரங்களும், மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும்,
14 அங்கே நளதம், குங்குமம், வசம்பு, இலவங்கம், எல்லாவித நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் சந்தனமும், எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது.
௧௪நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது.
15 நீ தோட்டத்திலுள்ள நீரூற்று, ஜீவத்தண்ணீரின் கிணறு, லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை.
௧௫தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. மணவாளி
16 வாடைக்காற்றே எழும்பு, தென்றல் காற்றே வா! வாசனை நிரம்பிப் பரவும்படி என் தோட்டத்தில் வீசு. என் காதலர் தமது தோட்டத்திற்குள் வந்து அதின் சிறந்த பழங்களைச் சுவைக்கட்டும்.
௧௬வாடைக்காற்றே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.