< சங்கீதம் 9 >
1 “மகனின் மரணம்” என்ற இராகத்தில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
௧முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
2 நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
௨உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
3 என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்; அவர்கள் உமக்கு முன்பாக இடறிவிழுந்து அழிந்துபோகிறார்கள்.
௩என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
4 நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்.
௪நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
5 நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்; அவர்களுடைய பெயரை என்றென்றுமாய் அழித்து விட்டீர்.
௫தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர்.
6 முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு, நீர் அவர்களுடைய பட்டணங்களை முற்றிலும் அழித்துப்போட்டீர்; அவை பற்றிய ஞாபகமும் ஒழிந்துபோயிற்று.
௬எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
7 யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்; நியாயந்தீர்க்கும்படியாக தமது சிங்காசனத்தை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.
௭யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.
8 அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.
௮அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
9 ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்; இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
௯சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
10 உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
௧0யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.
11 சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி, அவர் செய்தவற்றை நாடுகளுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
௧௧சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.
12 ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை; அவர் துன்புற்றவர்களின் கதறுதலை அசட்டை செய்வதில்லை.
௧௨ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.
13 யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்! என்மேல் இரக்கங்கொண்டு, மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடும்.
௧௩மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,
14 அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில் உமது துதிகளைப் பிரசித்தப்படுத்தி, அங்கே உமது இரட்சிப்பில் களிகூருவேன்.
௧௪தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
15 நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்; அவர்கள் மறைத்துவைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டன.
௧௫தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
16 யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்; கொடியவர்கள் தங்கள் கைகளின் செயலினாலேயே சிக்கியிருக்கிறார்கள்.
௧௬யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், (சேலா)
17 கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
௧௭துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol )
18 ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்; துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை.
௧௮எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
19 யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும்.
௧௯எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
20 யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.
௨0தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா)