< சங்கீதம் 83 >
1 ஆசாபின் பாட்டாகிய சங்கீதம். இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; செவிகொடாமல் இருக்கவேண்டாம்; இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம்.
௧ஆசாபின் பாடல். தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம்.
2 பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்.
௨இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
3 அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்; நீர் காக்கிறவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
௩உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள்.
4 “அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்; இஸ்ரயேலின் பெயரை இனி எவரும் நினைக்காதவாறு செய்திடுவோம்” என்று சொல்கிறார்கள்.
௪அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
5 அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; அவர்கள் உமக்கு விரோதமாக தங்களிடையே ஒரு நட்புடன்படிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
௫இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும்,
6 அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மயேலர், மோவாபியர், ஆகாரியர்,
௬கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,
7 கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும், தீருவின் மக்களும் இணைந்திருக்கிறார்கள்.
௭ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
8 லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க அசீரியாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டது.
௮அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
9 இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் அவர்களுக்கும் செய்யும்.
௯மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
10 அவர்கள் எந்தோரில் அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே.
௧0நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
11 அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும்.
௧௧அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
12 “அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” என்று சொன்னார்களே.
௧௨தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
13 என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும்.
௧௩என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
14 காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும்,
௧௪நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
15 அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும்.
௧௫நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
16 யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும்.
௧௬யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
17 அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக.
௧௭யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி,
18 யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக.
௧௮அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.