< சங்கீதம் 74 >
1 மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்? உமது கோபம் உமது மேய்ச்சல் நிலத்தின் செம்மறியாடுகளுக்கு விரோதமாக ஏன் புகைகிறது?
௧ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல். தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும், நீர் மீட்டுக்கொண்ட உமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் நினைவிற்கொள்ளும்; உமது தங்குமிடமான சீயோன் மலையையும் நினைவிற்கொள்ளும்.
௨நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும்.
3 என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்; எதிரி பரிசுத்த இடத்திற்குள் அனைத்தையும் பாழாக்கிவிட்டான்.
௩நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்; பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
4 நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்; அவர்கள் தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள்.
௪உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
5 அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு கோடாரிகளைக் கையாளும் மனிதரைப்போல் அவர்கள் நடந்துகொண்டார்கள்.
௫கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான்.
6 அவர்கள் தங்கள் கோடாரிகளாலும், கைக்கோடரிகளாலும் சித்திரவேலைகள் எல்லாவற்றையும் அழித்தார்கள்.
௬இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
7 அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய தங்குமிடத்தை அசுத்தமாக்கினார்கள்.
௭உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
8 அவர்கள் தங்கள் இருதயங்களில், “நாங்கள் அவர்களை அடியோடு அழித்துவிடுவோம்!” என்றார்கள்; நாட்டில் இறைவனை வழிபட்ட எல்லா இடங்களையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள்.
௮அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
9 எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை; இறைவாக்கினரும் இல்லை; இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் எங்களில் யாருக்கும் தெரியாது.
௯எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
10 இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்? எதிரி உமது பெயரை என்றென்றும் உதறித் தள்ளிவிடுவானோ?
௧0தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
11 நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்? மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும்.
௧௧உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
12 ஆனால் பூர்வகாலத்திலிருந்து இறைவனே நீரே என் அரசர்; அவர் பூமியின்மேல் இரட்சிப்பைச் செய்துவருகிறார்.
௧௨பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
13 உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே; நீரே கடலிலுள்ள இராட்சத விலங்கின் தலைகளையும் உடைத்தீர்.
௧௩தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
14 லிவியாதான் தலைகளை நசுக்கி, அதைப் பாலைவனப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுத்தவரும் நீரே.
௧௪தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
15 ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே; எப்பொழுதும் நிரம்பி வழிந்தோடும் ஆறுகளை வற்றப் பண்ணினவரும் நீரே.
௧௫ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர்.
16 பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.
௧௬பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
17 பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே; நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர்.
௧௭பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
18 யெகோவாவே, பகைவன் எவ்வளவாய் உம்மை ஏளனம் செய்தான் என்பதையும், மூடர்கள் உமது பெயரை எப்படி நிந்தித்தார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும்.
௧௮யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
19 உமது புறாவின் உயிரை காட்டு மிருகங்களுக்கு ஒப்புக்கொடாதிரும்; துன்புறுத்தப்பட்ட உமது மக்களின் வாழ்வை என்றென்றும் மறவாதிரும்.
௧௯உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும்.
20 உமது உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்; ஏனெனில் வன்முறையின் இருப்பிடங்கள் நாட்டின் இருண்ட பகுதிகளை நிரப்புகின்றன.
௨0உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
21 ஒடுக்கப்பட்டவர்கள் அவமானத்துடன் பின்னடைய விடாதிரும்; ஏழைகளும் எளியவர்களும் உமது பெயரைத் துதிப்பார்களாக.
௨௧துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும்.
22 இறைவனே, எழுந்தருளும்; உமது சார்பாக நீரே வாதாடும்; நாள்தோறும் மூடர்கள் உம்மை எவ்வளவாய் நிந்திக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளும்.
௨௨தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
23 உமது விரோதிகளின் கூக்குரலையும், தொடர்ந்தெழும் உமது பகைவரின் ஆரவாரத்தையும் அசட்டை பண்ணாதிரும்.
௨௩உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.