< சங்கீதம் 53 >
1 மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள்; அவர்களுடைய வழிகள் இழிவானவை; அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
௧தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 இறைவன் பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
௨தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை.
௩அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.
௪அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
5 பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
௫உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!
௬சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.