< சங்கீதம் 23 >
1 தாவீதின் சங்கீதம். யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது.
௧தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
2 அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.
௨அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3 அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். தமது பெயருக்காக அவர் என்னை, நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
௩அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4 மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே நான் நடந்தாலும் நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன், ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும், எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
௪நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5 என் பகைவர்களின் சமுகத்தில் நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
௫என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், நான் யெகோவாவினுடைய வீட்டில் என்றென்றுமாய் வாழ்வேன்.
௬என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.