< சங்கீதம் 2 >

1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?
2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:
யெகோவாவுக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
3 “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.
4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; யெகோவா அவர்களை இகழ்கிறார்.
பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:
அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.
6 “நான் எனது அரசனை என் பரிசுத்த மலையாகிய சீயோனில் அமர்த்தியிருக்கிறேன்.”
நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;
8 என்னிடம் கேளும், நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.
என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; மண்பாண்டத்தை உடைப்பதுபோல், நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.
௧0இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.
௧௧பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.
12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
௧௨தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, தேவனை முத்தம்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

< சங்கீதம் 2 >