< சங்கீதம் 18 >

1 யெகோவாவின் பணியாளன் தாவீதின் சங்கீதம். யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை அவன் யெகோவாவுக்குப் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அவன் சொன்னதாவது: யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன்.
இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல். என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
2 யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார்.
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.
3 துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.
துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.
4 மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.
5 பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol h7585)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
6 என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்; அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்; என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது.
எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது.
7 பூமி நடுங்கி அதிர்ந்து, மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன; யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின.
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
8 அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.
அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
9 அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10 அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.
௧0கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்; காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
11 அவர் இருளைத் தமது போர்வையாகவும், வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார்.
௧௧இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
12 அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன.
௧௨அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
13 யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.
௧௩யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
14 அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.
௧௪தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.
15 யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் உமது கண்டிப்பினாலும் கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.
௧௫அப்பொழுது யெகோவாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
16 யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.
௧௬உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
17 அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.
௧௭என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
18 அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.
௧௮என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
19 அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
௧௯என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
20 யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
௨0யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
21 ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.
௨௧ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
22 அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.
௨௨அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
23 நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
௨௩உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
24 யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
௨௪ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
25 உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.
௨௫தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
26 தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.
௨௬புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27 நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; ஆனால் பெருமையான பார்வையுள்ளவர்களைத் தாழ்த்துகிறீர்.
௨௭தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
28 யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்; என் இறைவன் என் இருளை வெளிச்சமாக்குவார்.
௨௮தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
29 உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
௨௯உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30 இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
௩0தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
31 யெகோவாவைத்தவிர இறைவன் யார்? நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?
௩௧யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?
32 இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி, என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
௩௨என்னைப் பலத்தால் இடைகட்டி, என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
33 அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.
௩௩அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
34 யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
௩௪வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35 நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
௩௫உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
36 என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
௩௬என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37 நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களைப் பிடித்தேன்; அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.
௩௭என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.
38 அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்; அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.
௩௮அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
39 யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.
௩௯போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர்.
40 நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; நான் அவர்களை அழித்தேன்.
௪0நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41 அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.
௪௧அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
42 நான் அவர்களை காற்றில் கிளம்பும் தூசியைப்போல் நொறுக்கினேன்; நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரி எறிந்தேன்.
௪௨நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
43 நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர். நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
௪௩மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.
44 வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
௪௪அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.
45 அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, தங்கள் அரண்களிலிருந்து நடுங்கிக்கொண்டு வருகிறார்கள்.
௪௫அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.
46 யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! என் இரட்சகராகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!
௪௬யெகோவா உயிருள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
47 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே; நாடுகளை எனக்குக்கீழ் அடங்கியிருக்கச் செய்பவரும் அவரே.
௪௭அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
48 என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும் அவரே. நீர் என் பகைவர்களுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்; என்னை என் வன்முறையாளர்களிடமிருந்து தப்புவித்தீர்.
௪௮அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
49 ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
௪௯இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.
50 யெகோவா தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.
௫0தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.

< சங்கீதம் 18 >