< சங்கீதம் 132 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, தாவீதையும் அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
௧ஆரோகண பாடல். யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
2 அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:
௨அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை,
3 “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.
௩என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
4 என் கண்களுக்கு நித்திரையையும், கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.
௪என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
5 யெகோவாவுக்காக ஒரு இடத்தை, யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை இவற்றைச் செய்யமாட்டேன்.”
௫யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.
6 எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:
௬இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.
7 “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.
௭அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.
8 ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.
௮யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும்.
9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’”
௯உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.
10 உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
௧0நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும்.
11 யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: “உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன்.
௧௧உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,
12 உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், அவர்களுடைய மகன்களும் என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.”
௧௨உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:
௧௩யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.
14 “இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன்.
௧௪இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.
15 நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன்.
௧௫அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
16 அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
௧௬அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
17 “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.
௧௭அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.
18 அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”
௧௮அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.