< சங்கீதம் 112 >
1 அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
௧அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
2 அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
௨அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3 செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
௩செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4 நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
௪செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
5 தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
௫இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
6 நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
௬அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
7 துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
௭துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
8 அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
௮அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
9 அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
௯வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
10 கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.
௧0துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.