< சங்கீதம் 11 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, நீதிமான் என்ன செய்வான்?
4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார்.
யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; நெருப்பும், கந்தகமும், அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7 யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.
யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

< சங்கீதம் 11 >