< நீதிமொழிகள் 6 >

1 என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால்,
என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, அந்நியனுக்கு உறுதியளித்தால்,
2 நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய்.
நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
3 என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால், நீ உன்னை விடுவித்துக்கொள்ள நீ போய் உன்னைத் தாழ்த்தி, உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள்.
இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
4 அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே.
உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
5 வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு.
வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
6 சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு!
சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
7 அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, அதிகாரியோ இல்லை.
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும்,
8 அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது.
கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
9 சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்?
சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
10 கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,
௧0இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
11 வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.
௧௧உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
12 வீணனும் கயவனுமானவன், வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான்.
௧௨வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
13 அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, தனது விரல்களால் சைகை காட்டுகிறான்.
௧௩அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
14 அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்; அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான்.
௧௪அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான்.
15 அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான்.
௧௫ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
16 யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு, இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது:
௧௬ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17 கர்வமுள்ள கண்கள், பொய்பேசும் நாவு, குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள்,
௧௭அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை,
18 கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம், தீமைசெய்ய விரையும் கால்கள்,
௧௮மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,
19 பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர்.
௧௯பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
20 என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.
௨0என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
21 அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.
௨௧அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
22 நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்; நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும்.
௨௨நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.
23 ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, இந்த போதனை ஒரு வெளிச்சம், நற்கட்டுப்பாடும் கண்டித்தலும் வாழ்வுக்கு வழி.
௨௩கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.
24 இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும்.
௨௪அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும்.
25 நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே.
௨௫உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
26 ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள்.
௨௬விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
27 ஒருவன் தன் உடைகள் எரியாமல் தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ?
௨௭தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா?
28 அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ?
௨௮தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
29 அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான்.
௨௯பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான்.
30 ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை.
௩0திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;
31 ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும்.
௩௧அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
32 ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
௩௨பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
33 அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.
௩௩வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; அவனுடைய நிந்தை ஒழியாது.
34 ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.
௩௪பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.
35 அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.
௩௫அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

< நீதிமொழிகள் 6 >