< நீதிமொழிகள் 31 >
1 அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு.
௧ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:
2 என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே! நேர்த்திக்கடன் மூலம் நான் பெற்ற மகனே! கேள்,
௨என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
3 நீ பெண்களிடம் உன் பெலனைக் கொடுக்காதே, அரசர்களை அழிப்பவர்களிடம் சேராதே.
௩பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.
4 லேமுயேலே, திராட்சைமது அருந்துவது அரசர்களுக்கு உகந்ததல்ல, அது அரசர்களுக்குத் தகுந்ததல்ல, ஆளுநர்கள் மதுபானத்தை விரும்புவது நல்லதல்ல.
௪திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
5 அரசர்கள் குடிப்பதினால் சட்டத்தை மறந்து போவார்கள் ஒடுக்கப்பட்டவர்களின் சட்ட உரிமைகளை வழங்க மறுப்பார்கள்.
௫மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
6 அழிந்து போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடு, வேதனையிலுள்ளவர்களுக்கு திராட்சை மதுவைக் கொடு!
௬மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
7 அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும், தங்கள் துயரத்தை ஒருபோதும் நினையாதிருக்கட்டும்.
௭அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
8 தங்களுக்காகப் பேச முடியாதவர்களுக்காகப் பேசு, ஆதரவற்றோர்களின் உரிமைகளுக்காகப் பேசு.
௮ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் உன்னுடைய வாயைத் திற.
9 அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு; ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் உரிமைகளைக் காப்பாற்று.
௯உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.
10 நற்குணமுடைய மனைவியை யாரால் கண்டடைய முடியும்? அவள் மதிப்போ பவளக்கற்களைவிட மிகவும் உயர்ந்தது.
௧0குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.
11 அவளின் கணவன் அவளில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறான்; அவனுக்கு செல்வாக்கு குறையாது.
௧௧அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது.
12 அவள் தன் வாழ்நாட்கள் முழுவதும் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே கொண்டுவருகிறாள்.
௧௨அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்.
13 அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து, மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள்.
௧௩ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.
14 அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.
௧௪அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
15 அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.
௧௫இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
16 அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.
௧௬ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
17 மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.
௧௭தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
18 தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்; அவளுடைய விளக்கு இரவிலும் அணைவதில்லை.
௧௮தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.
19 அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.
௧௯தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
20 அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து, தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள்.
௨0சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.
21 அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால், உறைபனிக்காலம் வரும்போது அவள் பயப்படமாட்டாள்.
௨௧தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
22 அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்; சிறந்த பட்டாடை மற்றும் பலவண்ண உடைகளையும் உடுத்திக்கொள்கிறாள்.
௨௨இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
23 அவளுடைய கணவன் பட்டண வாசலில், குடிமக்களின் தலைவர்களோடு உட்கார்ந்திருக்கையில் மதிக்கப்படுகிறான்.
௨௩அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான்.
24 அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள், அவள் இடைக் கச்சைகளையும் செய்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கிறாள்.
௨௪மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
25 அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்; வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள்.
௨௫அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
26 அவள் ஞானமாய்ப் பேசுகிறாள், அவளுடைய நாவில் தயவான அறிவுரைகள் இருக்கின்றன.
௨௬தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.
27 அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்; அவள் சோம்பலாயிருந்து உணவுக்காக எதிர்பார்த்து இருப்பதில்லை.
௨௭அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.
28 அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்கள்; அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்:
௨௮அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:
29 “அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள், ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்.”
௨௯அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.
30 கவர்ச்சித் தோற்றம் வஞ்சகமானது, அழகும் அழிந்துபோகும்; ஆனால் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்ணே புகழப்படத்தக்கவள்.
௩0செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
31 அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.
௩௧அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.