< நீதிமொழிகள் 20 >

1 திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல.
திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
2 அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள்.
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.
3 சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
4 சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை.
சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
5 மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
6 அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?
7 நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.
8 நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.
9 “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்?
என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?
10 பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
௧0வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
11 சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.
௧௧பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.
12 கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார்.
௧௨கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார்.
13 தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
௧௩தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
14 பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.
௧௪வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
15 தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.
௧௫பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.
16 பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.
௧௬அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
17 மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.
௧௭வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
18 நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.
௧௮ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய்.
19 புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
௧௯தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.
20 ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும்.
௨0தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
21 ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது.
௨௧ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
22 “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
௨௨தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
23 போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.
௨௩வெவ்வேறான நிறைகற்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
24 மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
௨௪யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?
25 முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும்.
௨௫பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.
26 ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான்.
௨௬ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
27 மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
௨௭மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
28 அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.
௨௮தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.
29 வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
௨௯வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
30 அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.
௩0காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.

< நீதிமொழிகள் 20 >