< நீதிமொழிகள் 19 >
1 வஞ்சக உதடுகளுள்ள மூடரைப் பார்க்கிலும், குற்றமற்றவராய் நடக்கிற ஏழையே சிறந்தவர்.
௧மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
2 அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல; அவசரப்பட்டால் வழிதவறி விடுவது எவ்வளவு நிச்சயம்!
௨ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
3 ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது; ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது.
௩மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
4 செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்; ஆனால் ஏழைகளை நெருங்கிய நண்பரும் கைவிடுவார்கள்.
௪செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
5 பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது.
௫பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
6 ஆளுநரின் தயவைப் பெற அநேகர் நாடுகின்றனர்; அன்பளிப்பு கொடுப்பவருக்கு அனைவரும் நண்பர்கள்.
௬பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
7 ஏழைகளின் உறவினர்கள் அவர்களை வெறுக்கிறார்கள், அவர்களுடைய சிநேகிதர்கள் எவ்வளவு அதிகமாய் அவர்களைப் புறக்கணிப்பார்கள்! ஏழைகளோ அவர்களிடம் கெஞ்சினாலும், அவர்களுடைய நண்பர்கள் போய்விடுகிறார்கள்.
௭தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
8 ஞானத்தைப் பெறுகிறவர் தன் வாழ்வை நேசிக்கிறார்கள், புரிந்துகொள்ளுதலைக் காப்பவர்கள் நன்மையடைவார்கள்.
௮ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
9 பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது.
௯பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
10 ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல; ஒரு அடிமை இளவரசர்களை ஆட்சி செய்வது எவ்வளவு மோசமானது!
௧0மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
11 ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது; குற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு மகிமை.
௧௧மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
12 அரசனின் கடுங்கோபம் ஒரு சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; ஆனால் அவனுடைய தயவோ புல்லின்மேலுள்ள பனியைப்போலிருக்கும்.
௧௨ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
13 மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு; வாக்குவாதம் செய்யும் மனைவி, ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள்.
௧௩மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
14 வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன; ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள்.
௧௪வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
15 சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும். வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள்.
௧௫சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
16 கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்; ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள்.
௧௬கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
17 ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள், அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார்.
௧௭ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
18 உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து; இல்லாவிட்டால் நீ அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விடுவாய்.
௧௮நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
19 முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்; அவரைத் தப்புவித்தால், திரும்பவும் தப்புவிக்க வேண்டிவரும்.
௧௯கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
20 ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்; முடிவில் நீ ஞானமுள்ளவராவாய்.
௨0உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
21 மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது.
௨௧மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
22 எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது.
௨௨நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
23 யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்; அவ்வாறு இருந்தால் பிரச்சனை இல்லாமல், மனநிறைவுடன் இருக்கலாம்.
௨௩யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
24 சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள்.
௨௪சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
25 ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்; பகுத்தறிவுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள்மேலும் அறிவைப் பெறுவார்கள்.
௨௫பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
26 தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து, தங்கள் தாயைத் துரத்திவிடுகிறார்கள் வெட்கமும் அவமானமும் கொண்டுவருகிற பிள்ளைகள்.
௨௬தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
27 என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால், அறிவுள்ள வார்த்தைகளிலிருந்து விலகிப்போவாய்.
௨௭என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே.
28 சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது.
௨௮அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
29 ஏளனம் செய்வோருக்கு தண்டனையும், மூடருடைய முதுகிற்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
௨௯பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.