< நீதிமொழிகள் 12 >
1 அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள், ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள்.
௧புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
2 நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார்.
௨நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
3 தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது.
௩துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
4 நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள்.
௪குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.
5 நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை.
௫நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
6 கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும்.
௬துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
7 கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும்.
௭துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
8 ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார்.
௮தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
9 உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல்.
௯உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
10 நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை.
௧0நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.
11 தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள்.
௧௧தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
12 தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும்.
௧௨துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
13 தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள்.
௧௩துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
14 ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார்.
௧௪அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
15 மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.
௧௫மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
16 மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
௧௬மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
17 நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.
௧௭சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
18 முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.
௧௮பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.
19 உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
௧௯சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
20 தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு, ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு.
௨0தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.
21 நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள்.
௨௧நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
22 பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
௨௨பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
23 விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.
௨௩விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
24 சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்; ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும்.
௨௪ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
25 கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
௨௫மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
26 நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.
௨௬நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
27 சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்; ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள்.
௨௭சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அப்பாதையில் மரணம் இல்லை.
௨௮நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.