< நீதிமொழிகள் 1 >
1 இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்:
௧தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
2 இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம்.
௨இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,
3 இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது.
௩விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
4 இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன.
௪இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
5 ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும்.
௫புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;
6 இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும்.
௬நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.
7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.
௭யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.
8 என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே.
௮என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.
9 அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும்.
௯அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.
10 என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், அவர்களுடன் இழுப்புண்டு போகாதே.
௧0என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் நீ சம்மதிக்காதே.
11 அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம், அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்;
௧௧எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, குற்றமில்லாமல் இருக்கிறவர்களை காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்;
12 பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
௧௨பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol )
13 பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்;
௧௩விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
14 எங்களுடன் பங்காளியாயிரு; நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால்,
௧௪எங்களோடு பங்காளியாக இரு; நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்;
15 என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே.
௧௫என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.
16 ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன.
௧௬அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தம் சிந்த விரைகிறது.
17 பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா.
௧௭எவ்வகையான பறவையானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.
18 ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே,
௧௮இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
19 தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும்.
௧௯பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.
20 ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது, பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது;
௨0ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
21 அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது.
௨௧அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:
22 “அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்? மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்?
௨௨பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23 நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
௨௩என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து, எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும்,
௨௪நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25 நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு, எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும்
௨௫என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26 உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன், பேரழிவு உங்களை மேற்கொள்கையில் ஏளனம் செய்வேன்;
௨௬ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன்.
27 பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும், பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும், துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன்.
௨௭நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.
28 “அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்; அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடையமாட்டார்கள்.
௨௮அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29 ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து, யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள்.
௨௯அவர்கள் அறிவை வெறுத்தார்கள், யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30 அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால்,
௩0என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள்.
31 அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள், அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள்.
௩௧ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32 அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும், மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்;
௩௨அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்;
33 ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள், அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.”
௩௩எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.