< எண்ணாகமம் 26 >
1 கொள்ளைநோய் நீங்கியபின் யெகோவா மோசேயிடமும் ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடமும் கூறியதாவது,
௧அந்த வாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
2 “நீங்கள் முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் குடும்பம் குடும்பமாக குடிமதிப்பிடுங்கள். இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் கணக்கிடுங்கள்” என்றார்.
௨“இஸ்ரவேல் மக்களின் எல்லா சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் எண்ணுங்கள்” என்றார்.
3 எனவே மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யோர்தானுக்கு அருகே, எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் அவர்களுடன் பேசினார்கள்.
௩அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமவெளிகளிலே அவர்களோடு பேசி:
4 “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி உங்களில் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களைக் குடிமதிப்பிடுங்கள்” என்றார்கள். எகிப்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேலர் இவர்களே:
௪“யெகோவா மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயது முதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள்” என்றார்கள்.
5 இஸ்ரயேலின் மூத்த மகனான ரூபனின் சந்ததிகளாவன, ஆனோக் மூலமாக ஆனோக்கிய வம்சமும், பல்லூ மூலமாக பல்லூவிய வம்சமும் வந்தன.
௫ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்: ரூபனுடைய மகன்கள், ஆனோக்கியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர்கள் குடும்பத்திற்குத் தகப்பனான பல்லூவும்,
6 எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், கர்மீயின் மூலமாக கர்மீய வம்சமும் வந்தன.
௬எஸ்ரோனியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான கர்மீயுமே.
7 ரூபனின் வம்சங்கள் இவைகளே: 43,730 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௭இவைகளே ரூபனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர்.
8 பல்லூவின் மகன் எலியாப்,
௮பல்லூவின் மகன் எலியாப்.
9 எலியாபின் மகன்கள் நெமுயேல், தாத்தான், அபிராம் என்பவர்கள். இஸ்ரயேல் சமுதாயத்திற்கு அதிகாரிகளாயிருந்த தாத்தானும் அபிராமுமே மோசேயையும் ஆரோனையும் எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். கோராகைப் பின்பற்றியவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியபோது இவர்களும் அவர்களோடிருந்தார்கள்.
௯எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, யெகோவாவுக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள்.
10 பூமி பிளவுண்டு கோராகுடன் சேர்த்து அவர்களை விழுங்கிப்போட்டது. நெருப்பு 250 பேரை சுட்டெரித்தபோது, கோராகைப் பின்பற்றியவர்களும் செத்தார்கள். அந்த நிகழ்ச்சி இஸ்ரயேலுக்கு ஒரு எச்சரிப்பின் அடையாளமாய் இருந்தது.
௧0பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி 250 பேரை எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
11 ஆனாலும், கோராகின் சந்ததிகள் எல்லோருமே சாகவில்லை.
௧௧கோராகின் மகன்களோ சாகவில்லை.
12 வம்சம் வம்சமாக சிமியோனின் சந்ததிகளாவன. நெமுயேல் மூலமாக நெமுயேலின் வம்சமும், யாமின் மூலமாக யாமினிய வம்சமும், யாகீன் மூலமாக யாகீனிய வம்சமும் வந்தன.
௧௨சிமியோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலர்களின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியர்களின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியர்களின் குடும்பமும்,
13 சேராகின் மூலமாக சேராகிய வம்சமும், சாவூலின் மூலமாக சாவூலிய வம்சமும் வந்தன.
௧௩சேராகின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியர்களின் குடும்பமுமே.
14 சிமியோனின் வம்சங்கள் இவையே. 22,200 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௧௪இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் 22,200 பேர்.
15 வம்சம் வம்சமாக காத்தின் சந்ததிகளாவன: சிப்போனின் மூலமாக சிப்போனிய வம்சமும், அகியின் மூலமாக அகியரின் வம்சமும், சூனியின் மூலமாக சூனியரின் வம்சமும் வந்தன.
௧௫காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,
16 ஒஸ்னியின் மூலமாக ஒஸ்னிய வம்சமும், ஏரியின் மூலமாக ஏரிய வம்சமும் வந்தன.
௧௬ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியர்களின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியர்களின் குடும்பமும்,
17 ஆரோதியின் மூலமாக ஆரோதிய வம்சமும், அரேலியின் மூலமாக அரேலிய வம்சமும் வந்தன.
௧௭ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே.
18 காத்தின் வம்சங்கள் இவையே. 40,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௧௮இவைகளே காத் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
19 ஏர், ஓனான் ஆகியோர் யூதாவின் மகன்கள். ஆனால் அவர்கள் கானான் நாட்டில் இறந்துபோனார்கள்.
௧௯யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.
20 வம்சம் வம்சமாக யூதாவின் சந்ததிகளாவன: சேலாவின் மூலமாக சேலாவிய வம்சமும், பாரேஸின் மூலமாக பாரேஸிய வம்சமும், சேராவின் மூலமாக, சேராவிய வம்சமும் வந்தன.
௨0யூதாவுடைய மற்ற மகன்களின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியர்களின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியர்களின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமுமே.
21 பாரேஸின் சந்ததிகளாவன: எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், ஆமூலின் மூலமாக ஆமூலிய வம்சமும் வந்தன.
௨௧பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.
22 யூதாவின் வம்சங்கள் இவையே. 76,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௨௨இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர்.
23 வம்சம் வம்சமாக இசக்காரின் சந்ததிகளாவன: தோலாவின் மூலமாக தோலாவிய வம்சமும், பூவாவின் மூலமாக பூவாவிய வம்சமும் உண்டாயின.
௨௩இசக்காருடைய மகன்களின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியர்களின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியர்களின் குடும்பமும்,
24 யாசூபின் மூலமாக யாசூபிய வம்சமும், சிம்ரோனின் மூலமாக சிம்ரோனிய வம்சமும் உண்டாயின.
௨௪யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே.
25 இசக்காரின் வம்சங்கள் இவையே. 64,300 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௨௫இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து 64,300 பேர்.
26 வம்சம் வம்சமாக செபுலோன் சந்ததிகளாவன: சேரேத்தின் மூலமாக செரேத்திய வம்சமும், ஏலோனின் மூலமாக ஏலோனிய வம்சமும், யாலயேலின் மூலமாக யாலயேலிய வம்சமும் வந்தன.
௨௬செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே.
27 செபுலோனின் வம்சங்கள் இவையே. 60,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௨௭இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர்.
28 வம்சம் வம்சமாக மனாசே, எப்பிராயீம் வழியாக வந்த யோசேப்பின் சந்ததிகளாவன:
௨௮யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
29 மனாசேயின் சந்ததிகள்: மாக்கீரின் மூலமாக மாகீரிய வம்சம் வந்தது. மாகீர், கீலேயாத்தின் தகப்பன் கீலேயாத்தின் வழியாக கீலேயாத்திய வம்சம் வந்தது.
௨௯மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கீலேயாத்தின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும்,
30 கீலேயாத்தின் சந்ததிகளாவன: ஈயேசேரின் மூலமாக ஈயேசேரியரின் வம்சமும், ஏலேக்கின் மூலமாக ஏலேக்கிய வம்சமும் வந்தன.
௩0கீலேயாத் பெற்ற ஈயேசேர்களின் சந்ததியான ஈயேசேரியர்களின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியர்களின் குடும்பமும்,
31 அஸ்ரியேலின் மூலமாக அஸ்ரியேலிய வம்சமும், சீகேமின் மூலமாக சீகேமிய வம்சமும் வந்தன.
௩௧அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலர்களின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியர்களின் குடும்பமும்,
32 செமிதாவின் மூலமாக செமிதாவிய வம்சமும், எப்பேரின் மூலமாக ஏப்பேரிய வம்சமும் வந்தன.
௩௨செமீதாவின் சந்ததியான செமீதாவியர்களின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான எப்பேரியர்களின் குடும்பமுமே.
33 எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை. அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும்.
௩௩எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லாமல், மகள்கள் மட்டும் இருந்தார்கள்; இவர்கள் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
34 மனாசேயின் வம்சங்கள் இவைகளே: 52,700 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௩௪இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 52,700 பேர்.
35 வம்சம் வம்சமாக எப்பிராயீம் சந்ததிகளாவன: சுத்தெலாகின் மூலமாக சுத்தெலாகிய வம்சமும், பெகேரின் மூலமாக பெகேரிய வம்சமும், தாகானின் மூலமாக தாகானிய வம்சமும் வந்தன.
௩௫எப்பிராயீமுடைய மகன்களின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியர்களின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியர்களின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியர்களின் குடும்பமும்,
36 சுத்தெலாதின் சந்ததிகளாவன: ஏரானின் மூலமாக ஏரானிய வம்சம் வந்தது.
௩௬சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியர்களின் குடும்பமுமே.
37 எப்பிராயீமின் வம்சங்கள் இவைகளே. 32,500 பேர் அவர்களில் எண்ணப்பட்டார்கள். வம்சம் வம்சமாக இவர்கள் யோசேப்பின் சந்ததிகளாவர்.
௩௭இவைகளே எப்பிராயீம் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 32,500 பேர்; இவர்களே யோசேப்பு சந்ததியின் குடும்பங்கள்.
38 வம்சம் வம்சமாக பென்யமீன் சந்ததிகளாவன: பேலாவின் மூலமாக பேலாவிய வம்சமும், அஸ்பேலின் மூலமாக அஸ்பேலின் வம்சமும், அகிராமின் மூலமாக அகிராமிய வம்சமும் வந்தன.
௩௮பென்யமீனுடைய மகன்களின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியர்களின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியர்களின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியர்களின் குடும்பமும்,
39 சுப்பாமின் மூலமாக சுப்பாமிய வம்சமும், உப்பாமின் மூலமாக உப்பாமிய வம்சமும் வந்தன.
௩௯சுப்பாமின் சந்ததியான சுப்பாமியர்களின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியர்களின் குடும்பமும்,
40 ஆர்த், நாகமான் மூலமாக வந்த பேலாவின் சந்ததிகளாவன: ஆரேதின் மூலமாக ஆரேதிய வம்சமும், நாகமானின் மூலமாக நாகமானிய வம்சமும் வந்தன.
௪0பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.
41 பென்யமீனின் வம்சங்கள் இவையே: 45,600 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௪௧இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர்.
42 வம்சம் வம்சமாக தாணின் சந்ததிகளாவன: சூகாமின் மூலமாக சூகாமிய வம்சம் உண்டாயிற்று. தாணின் வம்சங்களாவன;
௪௨தாணுடைய மகன்களின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
43 அவர்கள் அனைவரும் சூகாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 64,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௪௩சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 64,400 பேர்.
44 வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்; இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்; பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;
௪௪ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும்,
45 பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்: ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும், மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.
௪௫பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
46 ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.
௪௬ஆசேருடைய மகளின் பெயர் சேராள்.
47 ஆசேரின் வம்சங்கள் இவைகளே: 53,400 பேர். அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௪௭இவைகளே ஆசேர் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
48 வம்சம் வம்சமாக நப்தலியின் சந்ததிகளாவன: யாத்சியேலின் மூலமாக யாத்சியேலிய வம்சமும்; கூனியின் மூலமாக கூனியரின் சந்ததியும் வந்தன;
௪௮நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும்,
49 எத்செரின் மூலமாக எத்சேரிய வம்சமும், சில்லேமின் மூலமாக சில்லேமிய வம்சமும் உண்டாயின.
௪௯எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே.
50 நப்தலியின் வம்சங்கள் இவையே. 45,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
௫0இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,400 பேர்.
51 இஸ்ரயேலிய மனிதர்களின் மொத்த எண்ணிக்கை 6,01,730 பேர்.
௫௧இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் 6,01,730 பேராக இருந்தார்கள்.
52 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
௫௨யெகோவா மோசேயை நோக்கி:
53 “பெயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடு அவர்களுக்கு உரிமைச்சொத்தாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
௫௩“இவர்களுடைய பேர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.
54 கணக்கிடப்பட்டவர்களில் பெரிய குழுவினருக்கு பெரிதான உரிமைச்சொத்தும், சிறிய குழுவிற்குச் சிறிதான உரிமைச்சொத்தும் கொடு. கணக்கிடப்பட்டவர்களின் எண்ணிக்கையின்படியே ஒவ்வொரு குழுவும் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
௫௪அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கவேண்டும்; அவர்களில் எண்ணப்பட்ட எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்.
55 சீட்டுப்போடுவதன் மூலமே நாடு பங்கிடப்படவேண்டும் என்பதில் கவனமாயிரு. ஒவ்வொரு குழுவும் உரிமையாக்கிக்கொள்ளும் நிலம் அவர்களின் முற்பிதாக்களின் கோத்திரப் பெயர்களின் எண்ணிக்கைப்படியே இருக்கவேண்டும்.
௫௫ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய பெயர்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.
56 ஒவ்வொரு உரிமைச்சொத்து நிலமும் பெரிய குழுக்களுக்குள்ளும், சிறிய குழுக்களுக்குள்ளும் சீட்டுப்போட்டே பங்கிடப்படவேண்டும்” என்றார்.
௫௬அநேகம்பேரோ கொஞ்சம்பேர்களோ சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும்” என்றார்.
57 வம்சம் வம்சமாக எண்ணப்பட்ட லேவியர்கள் இவர்களே. கெர்சோனின் மூலமாக கெர்சோனிய வம்சமும், கோகாத்தின் மூலமாக கோகாத்திய வம்சமும், மெராரியின் மூலமாக மெராரிய வம்சமும் வந்தன.
௫௭எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்;
58 லேவியின் மற்ற வம்சங்களாவன: லிப்னீய வம்சம், எப்ரோனிய வம்சம், மகலிய வம்சம், மூசிய வம்சம், கோராகிய வம்சம் என்பவைகளே. அம்ராமின் முற்பிதா கோகாத்;
௫௮லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
59 அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். அவள் லேவிய சந்ததியைச் சேர்ந்தவள். அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். அவள், ஆரோன், மோசே ஆகியோரையும் அவர்களின் சகோதரியான மிரியாமையும் அம்ராமுக்குப் பெற்றாள்.
௫௯அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
60 நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தகப்பன் ஆரோன்.
௬0ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
61 நாதாபும், அபியூவும் அங்கீகரிக்கப்படாத நெருப்பினால் யெகோவாவுக்கு முன்பாகக் காணிக்கையைச் செலுத்தியபோது இறந்துபோனார்கள்.
௬௧நாதாபும் அபியூவும் யெகோவாவுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
62 கணக்கிடப்பட்டபடி, ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களான லேவிய ஆசாரியர்களின் மொத்தத்தொகை 23,000 பேர். இவர்களுக்கு மற்ற இஸ்ரயேலருக்குள் உரிமைச்சொத்து கிடைக்காதபடியால், லேவியர் அவர்களுடன் சேர்த்து எண்ணப்படவில்லை.
௬௨அவர்களில் ஒரு மாத ஆண்பிள்ளையிலிருந்து எண்ணப்பட்டவர்கள் 23,000 பேர்; இஸ்ரவேல் சந்ததியின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கைக்கு உட்படவில்லை.
63 யோர்தானுக்கு அருகே எரிகோவுக்கு எதிராகவுள்ள மோவாப் சமவெளியில் மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் இஸ்ரயேலரைக் கணக்கெடுத்தபோது கணக்கிடப்பட்டவர்கள் இவர்களே.
௬௩மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகிலிருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் மக்களை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
64 ஆனால் முன்பு மோசேயினாலும், ஆசாரியன் ஆரோனாலும் சீனாய் வனாந்திரத்தில் கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்களில் ஒருவனும் இவர்கள் மத்தியில் இருக்கவில்லை.
௬௪முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
65 ஏனெனில், “அந்த இஸ்ரயேலர் பாலைவனத்தில் நிச்சயம் சாவார்கள்” என யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார். அவ்வாறே எப்புன்னேயின் மகன் காலேபையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறு ஒருவரும் உயிரோடிருக்கவில்லை.
௬௫வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று யெகோவா அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.