< எண்ணாகமம் 18 >

1 யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “நீயும், உன் மகன்களும் உன் தகப்பனின் குடும்பமும் பரிசுத்த இடத்திற்கு விரோதமாகச் செய்யப்படும் குற்றங்களுக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆசாரியத்துவப்பணியின் குற்றங்களுக்கான பொறுப்பை நீயும், உன் மகன்களும் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பின்பு யெகோவா ஆரோனை நோக்கி: “நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உன்னுடைய தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.
2 நீயும், உன் மகன்களும் சாட்சிபகரும் கூடாரத்திற்கு முன்பாகப் பணிசெய்யும்போது, உங்களுடன் சேர்ந்து உங்களுக்கு உதவிசெய்வதற்கு உங்கள் முற்பிதாக்களின் கோத்திரத்திலிருந்து, உங்கள் உடன் ஒத்த லேவியரை கொண்டுவர வேண்டும்.
உன்னுடைய தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன்னுடைய சகோதரர்களையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன்னுடைய மகன்களுமோ சாட்சியின் கூடாரத்திற்குமுன்பு ஊழியம் செய்யவேண்டும்.
3 அவர்கள் கூடாரத்தின் கடமைகள் எல்லாவற்றையும் செய்வதில் உனக்கு உத்தரவாதமாயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பரிசுத்த இடத்தின் பணிப்பொருட்களுக்கோ, பலிபீடத்துக்கோ அருகில் போகக்கூடாது. மீறினால், அவர்களும் நீயும் சாவீர்கள்.
அவர்கள் உன்னுடைய காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கவேண்டும்; ஆனாலும் அவர்களும் நீங்களும் சாகாதபடி, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சேராமல்,
4 அவர்கள் உன்னுடன் சேர்ந்து கூடாரத்தின் எல்லா வேலைகளையும் செய்து, சபைக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருக்க வேண்டும். நீ இருக்கும் இடத்திற்கு எவனும் வரக்கூடாது.
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்தின் எல்லா வேலையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கவேண்டும்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
5 “பரிசுத்த இடத்தினுடைய பலிபீடத்தினுடைய பராமரிப்புக்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். அப்பொழுது என் கோபம் இஸ்ரயேலர்மேல் திரும்பவும் வராது.
இஸ்ரவேல் மக்கள்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடி, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கவேண்டும்.
6 நான் நானே உன் உடன் ஒத்த லேவியரை இஸ்ரயேலருள் இருந்து தெரிந்தெடுத்து, உனக்குக் கொடையாகக் கொடுத்தேன். சபைக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதற்காக அவர்கள் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆசரிப்புக்கூடாரத்தின் வேலையைச் செய்ய, யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் இஸ்ரவேல் சந்ததியாரிலிருந்து பிரித்து, உங்களுக்கு பரிசாகக் கொடுத்தேன்.
7 பலிபீடத்திலும், திரைக்குள்ளும் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளிலும், நீயும் உன் மகன்களும் மட்டுமே ஆசாரியர்களாகப் பணிசெய்யலாம். நான் ஆசாரியப்பணியை உனக்கு ஒரு கொடையாகக் கொடுக்கிறேன். பரிசுத்த இடத்திற்குக் கிட்டவரும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும்” என்றார்.
8 பின்னும் யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “எனக்குக் கொடுக்கப்படும் காணிக்கைகளுக்குப் பொறுப்பாக நானே உன்னை வைத்திருக்கிறேன். இஸ்ரயேலர் எனக்காகக் கொடுக்கும் பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும் உனக்கும், உன் மகன்களுக்கும், உங்கள் பங்காகவும், நிரந்தர பாகமாகவும் கொடுக்கிறேன்.
பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.
9 மகா பரிசுத்த காணிக்கைகளில் நெருப்பில் எரிக்கப்படாத அந்தப் பங்கு உனக்குச் சேரவேண்டும். தானிய காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை எதுவானாலும் சரி, அவர்கள் மகா பரிசுத்தமான காணிக்கையாகக் கொண்டுவரும் எல்லா கொடைகளிலுமிருந்து எரிக்கப்படாத அப்பங்கு உனக்கும், உன் மகன்களுக்கும் சொந்தமாகும்.
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாக இருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லா உணவுபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் பரிசுத்தமாக இருக்கும்.
10 அதை மகாபரிசுத்தமானதாக எண்ணி; அவற்றைச் சாப்பிடவேண்டும். ஒவ்வொரு ஆணும் அதைச் சாப்பிடவேண்டும். நீ அதைப் பரிசுத்தமானதாக மதிக்கவேண்டும்.
௧0பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைச் சாப்பிடவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாக இருப்பதாக.
11 “இஸ்ரயேலருடைய காணிக்கைகளின் கொடைகள் எல்லாவற்றிலுமிருந்து பிரித்து வைக்கப்படும் எதுவும் உங்களுக்கே உரியது. நான் இதை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும், உன் வழக்கமான பங்காகக் கொடுக்கிறேன். உன் வீட்டில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.
௧௧இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாக இருக்கும்; அவைகளை உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர பங்காகக் கொடுத்தேன்; உன்னுடைய வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லோரும் அவைகளைச் சாப்பிடலாம்.
12 “இஸ்ரயேலர் தங்கள் அறுவடையின் முதற்பலனாக யெகோவாவுக்குக் கொடுக்கும் சிறந்த ஒலிவ எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் நான் உனக்குக் கொடுத்தேன்.
௧௨அவர்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய சிறந்த எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
13 அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டுவரும் நாட்டின் முதற்பலன் முழுவதும் உனக்குரியவை. உங்கள் குடும்பத்தில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.
௧௩தங்களுடைய தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன்னுடைய வீட்டிலே சுத்தமாக இருப்பவர்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்.
14 “இஸ்ரயேலின் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே உன்னுடையவை.
௧௪இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும்.
15 யெகோவாவுக்காக கொண்டுவரப்படும் கர்ப்பத்தின் முதற்பேறான பிள்ளையும், மிருகமும் உன்னுடையவைகளே. ஆனால் ஒவ்வொரு முதற்பேறான மகனையும், அசுத்தமான மிருகங்களின் ஆண் தலையீற்றையும் நீ மீட்கவேண்டும்.
௧௫மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
16 அவை ஒரு மாதமானவுடன், பரிசுத்த இடத்தின் சேக்கல் மதிப்பின்படி மீட்பின் கிரயமான ஐந்து சேக்கலைப் பெற்றுக்கொண்டு, நீ அவற்றை மீட்கவேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.
௧௬மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன்னுடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.
17 “ஆனாலும், தலையீற்றான மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றை நீ மீட்கக்கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தில் தெளித்து அவற்றின் கொழுப்பை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாய், நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரித்துவிடு.
௧௭மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
18 அசைவாட்டும் காணிக்கையான நெஞ்சுப்பகுதியும், வலதுதொடையும் உன்னுடையவையாய் இருப்பதுபோல், அவற்றின் இறைச்சியும் உனக்கே உரியது.
௧௮அசைவாட்டும் மார்புப்பகுதியைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும்.
19 இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் கொண்டுவரும் பரிசுத்த காணிக்கைகளிலிருந்து பிரித்து எடுக்கும் எதையும் நான் உனக்கும், உன் மகன்களுக்கும், மகள்களுக்கும், உங்களுடைய நிரந்தர பாகமாகக் கொடுக்கிறேன். இது யெகோவாவுக்கு முன்பாக உனக்காகவும், உன் சந்ததியினருக்காகவும் உப்பினால் செய்யப்படும் ஒரு நிரந்தர உடன்படிக்கையாய் இருக்கும்” என்றார்.
௧௯இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; யெகோவாவுடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை” என்றார்.
20 பின்பு யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “உனக்கு அவர்கள் நாட்டில் உரிமைச்சொத்து இருக்காது. அவர்கள் மத்தியில் உனக்கு எந்தவித பங்கும் இருக்காது. இஸ்ரயேலர் மத்தியில் நானே உனது பங்கும், உரிமைச்சொத்துமாயிருக்கிறேன்.
௨0பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் மக்கள் நடுவில் நானே உன்னுடைய பங்கும் உன்னுடைய சுதந்தரமுமாக இருக்கிறேன்.
21 “லேவியர் சபைக் கூடாரத்தில் பணிசெய்கையில் அவர்கள் செய்யும் வேலைக்குக் கைமாறாக, இஸ்ரயேலிலுள்ள பத்தில் ஒன்றான காணிக்கைகளையெல்லாம் சொத்தாகக் கொடுக்கிறேன்.
௨௧“இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
22 இஸ்ரயேலர் இனிமேல் சபைக் கூடாரத்திற்கு அருகே போகக்கூடாது. மீறினால், தங்கள் பாவத்தின் விளைவுகளைத் தாங்களே அனுபவித்துச் சாவார்கள்.
௨௨இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும்.
23 சபைக் வேலைகளை லேவியர் மட்டுமே செய்யவேண்டும். அவ்வேலையில் ஏற்படும் குற்றங்களுக்கும் அவர்கள் பொறுப்பாளியாவார்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாய் இருக்கும். இஸ்ரயேலருக்குள்ளும் லேவியர் உரிமைச்சொத்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.
௨௩லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும்.
24 ஏனெனில், இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் பத்தில் ஒரு பங்கை, நான் லேவியரின் உரிமைச்சொத்தாக அவர்களுக்குக் கொடுப்பேன். அதனால்தான் நான் ‘இஸ்ரயேலர் மத்தியில் அவர்களுக்கு நிரந்தரமான உரிமைச்சொத்து இருக்காது என்று அவர்களைக் குறித்துச் சொன்னேன்’” என்றார்.
௨௪இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன்” என்றார்.
25 பின்பு யெகோவா மோசேயிடம்,
௨௫பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
26 “நீ லேவியருடன் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கை நீங்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெறும்போதெல்லாம் அந்த பத்தில் ஒரு பங்கில், பத்தில் ஒரு பங்கை, யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும்.
௨௬“நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
27 நீங்கள் கொடுக்கும் காணிக்கை சூடடிக்கும் களத்தில் பெறப்படும் தானியம்போல் அல்லது திராட்சை ஆலையிலிருந்து வரும் திராட்சை இரசம்போல் உங்களுக்குக் கருதப்படும்.
௨௭நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
28 அவ்வாறு நீங்களும், இஸ்ரயேலரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் எல்லா பத்தில் ஒரு பங்கிலுமிருந்தும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுப்பீர்கள். அந்த பத்தில் ஒரு பங்கிலிருந்து நீங்கள் யெகோவாவின் பங்கை ஆசாரியன் ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.
௨௮இப்படியே நீங்கள் இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்களுடைய பங்குகளிலெல்லாம் நீங்களும் யெகோவாவுக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.
29 நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் எல்லாவற்றிலுமிருந்தும் மிகத் திறமையானதையும், மிகப் பரிசுத்தமானதையும் யெகோவாவின் பாகமாகக் கொடுக்கவேண்டும்.’
௨௯உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள சிறந்த பரிசுத்த பங்கையெல்லாம் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
30 “நீ லேவியருக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் திறமையான பங்கைக் கொடுக்கும்போது, அது சூடடிக்கும் களத்திலுள்ள விளைபொருள்போல் அல்லது திராட்சை ஆலையில் இருந்து பெறப்படும் திராட்சை இரசம்போல் உங்களுக்கு கருதப்படும்.
௩0ஆதலால் நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் சிறந்ததை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியர்களுக்கு எண்ணப்படும்.
31 அவற்றின் மிகுதியை நீங்களும், உங்கள் குடும்பமும் எந்த இடத்திலும் சாப்பிடலாம். ஏனெனில் அவை சபைக் கூடாரத்தில் உங்கள் பணிக்காக கொடுக்கப்படும் கூலியாகும்.
௩௧அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் சாப்பிடலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.
32 இவ்வாறு மிகத் திறமையானவற்றை நீங்கள் கொடுப்பதால் காணிக்கைபற்றிய விஷயத்தில் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் இஸ்ரயேலரின் பரிசுத்த காணிக்கையை அசுத்தப்படுத்தவுமாட்டீர்கள்; நீங்கள் சாகவுமாட்டீர்கள் என்று சொல்’” என்றார்.
௩௨இப்படி அதில் சிறந்ததை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதற்காக பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படி, இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று சொல்” என்றார்.

< எண்ணாகமம் 18 >