< நெகேமியா 2 >

1 அர்தசஷ்டா அரசனின் ஆட்சியின் இருபதாம் வருடம் நிசான் மாதத்தில் அரசனுக்குத் திராட்சை இரசம் கொண்டுவரப்பட்டபோது, நான் அந்த திராட்சை இரசத்தை எடுத்து அரசனுக்குக் கொடுத்தேன். முன்னொருபோதும் நான் அவர்முன் துக்கமாயிருந்ததில்லை.
அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருட ஆட்சியின் நிசான் மாதத்திலே, திராட்சைரசம் ராஜாவிற்கு முன்பாக வைத்திருக்கும்போது, நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன்பு ஒருபோதும் அவருக்கு முன்பாக துக்கமாக இருந்ததில்லை.
2 எனவே அரசன் என்னிடம், “நீ வியாதி இல்லாமல் இருக்கும்போது ஏன் உனது முகம் துக்கமாய் காணப்படுகிறது? இது மனதின் துக்கமே தவிர வேறு எதுவும் இல்லை” என்றான். அப்பொழுது நான் பயமடைந்து,
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாக இருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
3 அரசனிடம், “அரசர் என்றைக்கும் வாழ்வாராக! எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் அழிக்கப்பட்டனவாய் கிடக்கும்போது, எனது முகம் துக்கமுடையதாய் காணப்படாதோ?” என்று கேட்டேன்.
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் இடமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இல்லாமல் இருப்பது எப்படி என்றேன்.
4 அதற்கு அரசன், “அப்படியானால், உனக்கு வேண்டியது என்ன?” என்று கேட்டான். அப்பொழுது நான் பரலோகத்தின் இறைவனை நோக்கி மன்றாடினேன்,
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்செய்து,
5 பின் நான் அரசனைப் பார்த்து, “அரசர் விரும்பினால், உமது அடியவனுக்கு உமது கண்களில் தயவு கிடைக்குமானால், எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட யூதாவிலுள்ள அந்த நகரத்தைத் திரும்பவும் கட்டுவதற்கு அரசர் என்னை அனுப்பவேண்டும்” என்று பதிலளித்தேன்.
ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்து, அடியேனுக்கு உமது முன்னிலையில் தயவு கிடைத்ததானால், என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் பட்டணத்தைக் கட்டுவதற்கு, யூதா தேசத்திற்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
6 அந்த நேரத்தில் அரசனின் பக்கத்தில் அரசியும் அமர்ந்திருந்தாள்; அப்போது அரசன் என்னிடம், “உனது பிரயாணம் எவ்வளவு காலம் எடுக்கும்? எப்போது திரும்புவாய்?” என்று கேட்டான். என்னை அனுப்புவதற்கு அரசனுக்கு விருப்பமிருந்ததினால் நான் இவ்வளவு காலமாகுமென்று ஒரு நேரத்தைக் குறித்தேன்.
அப்பொழுது ராணியும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன்னுடைய பிரயாணத்திற்கு எத்தனை நாட்கள் ஆகும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுநாட்கள் ஆகுமென்று நான் ராஜாவிற்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்கு விருப்பமானது.
7 மேலும் நான் அரசனிடம், “அரசர் விரும்பினால் ஐபிராத்து நதிக்கு மறுகரையிலுள்ள யூதாவுக்கு நான் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி ஆளுநர்களுக்குக் கடிதங்கள் தாரும்.
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்தால், நான் யூதா தேசத்திற்குப்போய்ச் சேரும்வரை, நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்கள் நான் போக அனுமதியளிக்கவும் அவர்களுக்கு நான் கடிதங்கள் கொடுப்பதற்காகவும்,
8 அதைவிட ஆலயத்தின் அருகேயுள்ள கோட்டையின் வாசல் கதவுகளுக்கு மரச்சட்டங்கள் செய்வதற்கும், நகர மதிலுக்கும், நான் வசிக்கப்போகும் வீட்டுக்கும் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி அரசனுடைய காடுகளைப் பராமரிப்பவனான ஆசாபுக்கும் ஒரு கடிதம் தாரும்” என்று கேட்டேன். இறைவனின் கிருபையுள்ள கரம் என்மேல் இருந்ததினால், நான் கேட்டபடியே அரசன் என் வேண்டுகோளை எனக்குக் கொடுத்தான்.
தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
9 அப்படியே நான் ஐபிராத்து நதியின் மறுபுறமாய் உள்ள மாகாணங்களுக்குப் போனபோது, அங்கிருந்த ஆளுநர்களிடம் அரசனின் கடிதங்களைக் கொடுத்தேன். அரசன் இராணுவ அதிகாரிகளையும், குதிரைப் படைகளையும் எனது பாதுகாப்புக்காக என்னுடன் அனுப்பியிருந்தான்.
அப்படியே நான் நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்களிடத்திற்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடு இராணுவ அதிகாரிகளையும், குதிரைவீரர்களையும் அனுப்பியிருந்தார்.
10 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அதிகாரியான தொபியாவும் இதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரயேலரின் நலனை மேம்படுத்துவதற்காக ஒருவன் முன்வந்ததைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தார்கள்.
௧0இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது.
11 எருசலேமுக்கு நான் போய், அங்கு மூன்று நாட்கள் தங்கினேன்.
௧௧நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,
12 அதன்பின்பு ஒருசில மனிதர்களுடன் இரவுவேளையில் மதிலைப் பார்வையிட நான் சென்றேன். ஆனால் என் இறைவன் எருசலேமுக்காகச் செய்யும்படி எனது இருதயத்தில் தூண்டிய எதையும் நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மிருகமும் அங்கு இருக்கவில்லை.
௧௨நான் சில மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் எழுந்து நகரத்தைச் சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமிற்காகச் செய்யவேண்டிய காரியத்தை என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகத்தைத் தவிர வேறொரு மிருகமும் என்னுடன் இருந்ததில்லை.
13 அன்றிரவே அங்கிருந்து பள்ளத்தாக்கு வாசல் வழியே வெளியே போய் வலுசர்ப்பத்தின் துரவையும், குப்பைமேட்டு வாசலையும் நோக்கிப் போய், உடைந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், நெருப்பால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல் கதவுகளையும் பார்வையிட்டேன்.
௧௩நான் அன்று இரவு பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் புறப்பட்டு, வலுசர்ப்பக் கிணற்றைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன மதிலையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
14 அதன்பின் ஊற்று வாசலையும், அரசனின் குளத்தையும் நோக்கிப் போனேன்; ஆனால் நான் ஏறிச்சென்ற மிருகம் அதன் வழியாகச் செல்வதற்கு இடம் போதாமலிருந்தது.
௧௪அந்த இடத்தைவிட்டு ஊற்றுவாசல் அருகிலும், ராஜாவின் குளத்தின் அருகிலும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோவதற்கு வழி இல்லாதிருந்தது.
15 அதனால் நகரை இரவில் சுற்றி, பள்ளத்தாக்கு வழியாக மேலே வந்து, மேலும் மதிலைப் பார்வையிட்டேன். கடைசியாக பள்ளத்தாக்கு வாசல் வழியாய் திரும்பவும் உள்ளே வந்தேன்.
௧௫அன்று இரவிலேயே நான் ஆற்றோரமாகப் போய், மதிலைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாக வந்துவிட்டேன்.
16 நான் எங்கே போயிருந்தேன் என்றோ, என்ன செய்துகொண்டிருந்தேன் என்றோ அதிகாரிகளுக்குத் தெரியாதிருந்தது; ஏனெனில் நான் யூதா மக்களுக்கோ, ஆசாரியருக்கோ, உயர்குடி மக்களுக்கோ, மற்ற எந்த அதிகாரிகளுக்கோ அல்லது வேலைசெய்யப்போகிற வேறு எவருக்குமோ ஒன்றுமே கூறவில்லை.
௧௬நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காவது, ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காவது, வேலைசெய்கிற மற்றவர்களுக்காவது ஒன்றும் தெரிவிக்கவில்லை.
17 பின்பு நான் அவர்களிடம், “நாங்கள் படும் கஷ்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களே, எருசலேம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் எரிக்கப்பட்டுள்ளன. வாருங்கள், எருசலேமின் மதிலைத் திரும்பவும் கட்டுவோம். அப்பொழுது நாம் இனிமேலும் அவமானத்துடன் இருக்கமாட்டோம்” என்று கூறினேன்.
௧௭பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருப்பதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடப்பதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி அவமானம் அடையாமலிருக்க, எருசலேமின் மதிலைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
18 அத்துடன் நான் அவர்களுக்கு இறைவனின் கிருபையின்கரம் என்மேல் இருக்கிறதையும், அரசன் எனக்குச் சொன்னதைப்பற்றியும் கூறினேன். உடனே அவர்கள், “நாங்கள் மதிலைத் திரும்பவும் கட்டத் தொடங்குவோம்” எனப் பதிலளித்து, இந்த நல்ல வேலையைச் செய்யத் தொடங்கினார்கள்.
௧௮என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள்.
19 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அலுவலகனான தொபியாவும், அரபியனான கேஷேமும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, எங்களை அவமதித்து, கேலி செய்தார்கள். அவர்கள், “நீங்கள் செய்யும் செயல் என்ன? அரசனுக்கு விரோதமாகக் கலகம் உண்டாக்குகிறீர்களோ?” என்று கேட்டார்கள்.
௧௯ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களை கேலிசெய்து, எங்களை அவமதித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்யப்போகிறீர்களோ என்றார்கள்.
20 அதற்கு நான் அவர்களிடம், “பரலோகத்தின் இறைவன் எங்களுக்கு வெற்றி கொடுப்பார். அவருடைய அடியாராகிய நாங்கள் இதைத் திருப்பிக் கட்டத் தொடங்குவோம். ஆனால் உங்களுக்கோவெனில் எருசலேமில் பங்கோ, உரிமை கோரிக்கையோ, சரித்திரப் பூர்வமான உரிமையோ இல்லை” என்று கூறினேன்.
௨0அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்வார்; அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பெயர்சொல்லப்பட ஒன்றும் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன்.

< நெகேமியா 2 >