< நாகூம் 1 >

1 நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம்.
நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம்.
2 யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர்.
3 யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்; அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது. மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.
யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.
4 அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்; ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார். பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன. லெபனோனின் பூக்கள் வாடுகின்றன.
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
5 அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்; குன்றுகள் உருகிப்போகும். அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும். உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள்.
அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.
6 அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்? அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது; அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.
அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய கடுங்கோபத்திலே நிலைநிற்பவன் யார்? அவருடைய எரிச்சல் நெருப்பைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பெயர்க்கப்படும்.
7 யெகோவா நல்லவர், அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர். அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார்.
யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
8 ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால் நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.
ஆனாலும் நினிவேயின் நிலையை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிப்பார்; இருள் அவருடைய எதிரிகளைப் பின்தொடரும்.
9 அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும் அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; துன்பம் இரண்டாம் முறையும் வராது.
நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது.
10 அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு, தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள். அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்.
௧0அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள்.
11 நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து, கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன், உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான்.
௧௧யெகோவாவுக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற தீய ஆலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.
12 யெகோவா சொல்வது இதுவே: அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன. “அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள். யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும், இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன்.
௧௨யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
13 நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன். உன் விலங்குகளையும் உடைப்பேன்.”
௧௩இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன்.
14 நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார். “உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள். உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன். நீ வெறுப்புக்குரியவனானபடியால், நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”
௧௪உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
15 யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள், உன் மலைகள்மேல் வருகின்றன. உன் பண்டிகைகளைக் கொண்டாடு. உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று. கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை; அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.
௧௫இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.

< நாகூம் 1 >