< மீகா 5 >
1 இராணுவவீரர்களின் நகரமே, உன் இராணுவவீரர்களைக் கூட்டிச்சேர்; ஏனெனில் நமக்கு எதிராக முற்றுகையிடப் பட்டிருக்கிறது. அவர்கள் இஸ்ரயேலின் ஆளுநரை, கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள்.
௧சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
2 “ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதாவின் வம்சங்களில் சிறிதாயிருப்பினும் இஸ்ரயேலின்மேல் என் சார்பாக ஆளுநராக வரப்போகிறவர், உன்னிலிருந்து தோன்றுவார். அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான முந்திய காலத்தினுடையது.”
௨எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
3 பிரசவ வேதனைப்படுபவள் பிள்ளை பெற்றெடுக்கும் வரைக்கும் யெகோவா தம் மக்களை கைவிடுவார். அதன்பின் அவருடைய சகோதரரில் மீதியாயிருப்பவர்கள் இஸ்ரயேலருடன் சேரும்படி திரும்பி வருவார்கள்.
௩ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள்.
4 அந்த ஆளுநர் வரும்போது, அவர் யெகோவாவின் வல்லமையுடனும், தமது இறைவனாகிய யெகோவாவின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார். அப்பொழுது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள். அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும்.
௪அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார்.
5 அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார். நமது நாட்டின்மேல் அசீரியன் படையெடுத்து, நமது அரண்மனைகளை மிதிக்கும்போது, நாங்கள் அவனுக்கு எதிராக ஏழு மேய்ப்பர்களையும், எட்டு தலைவர்களையும் எழுப்புவோம்.
௫இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
6 அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள். நிம்ரோத் நாட்டை, உருவிய வாளினால் ஆளுகை செய்வார்கள். அசீரியன் எங்கள் நாட்டின்மேல் படையெடுத்து, எங்கள் எல்லைகளில் அணிவகுத்து வரும்போது, அவர் எங்களை விடுவிப்பார்.
௬இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர், மக்கள் கூட்டங்களிடையே யெகோவாவிடமிருந்து வரும் பனியைப்போல் இருப்பார்கள், அவர்கள் மனிதனுக்காகக் காத்திராமலும், மனுக்குலத்துக்காகத் தாமதியாமலும் புல்லின்மேல் பெய்யும் மழையைப்போல் இருப்பார்கள்.
௭யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
8 எனவே, யாக்கோபில் மீதியானோர், நாடுகளின் மத்தியில் திரளான மக்களின் நடுவிலே இருப்பார்கள். அவர்கள் காட்டு மிருகங்களின் நடுவில் இருக்கும் சிங்கம் போலவும், செம்மறியாட்டு மந்தைகளுக்கிடையில் புகுந்து கிழித்துச் சிதைக்கிற, சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பார்கள். ஒருவனாலும் அந்நாடுகளைக் காப்பாற்ற முடியாதிருக்கும்.
௮யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
9 அவர்களுடைய கை அவர்கள் பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும். அவர்களுடைய எதிரிகள் எல்லோருமே அழிக்கப்படுவார்கள்.
௯உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
10 யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது: “அந்த நாளில் உன் மத்தியிலிருந்து போர்க் குதிரைகளை அழிப்பேன். உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன்.
௧0அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து,
11 உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும், உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன்.
௧௧உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,
12 உன் மாயவித்தையை அழிப்பேன். மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்படமாட்டாது.
௧௨சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.
13 நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், புனித கற்களையும் உன் மத்தியிலிருந்து அழிப்பேன். நீ இனிமேலும் உன் கைகளின் வேலையான விக்கிரகங்களை விழுந்து வணங்கமாட்டாய்.
௧௩உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய்.
14 உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன்.
௧௪நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
15 அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத எல்லா மக்களையும் கோபத்தோடும், கடுஞ்சினத்தோடும் பழிவாங்குவேன்.”
௧௫செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.