< மத்தேயு 3 >
1 அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்து,
2 “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான்.
3 “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்’ என்று பாலைவனத்தில் ஒரு குரல் கூப்பிடுகிறது,” என்று இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்டவன் இவனே.
4 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால், செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
5 மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள்.
6 அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள்.
7 அப்பொழுது, அநேக பரிசேயரும் சதுசேயரும் திருமுழுக்கு கொடுக்கும் இடத்திற்கு வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்?
8 நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள்.
9 ‘ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாக இருக்கிறார்’ என்று உங்களால் சொல்லமுடியும் என நினைக்கவேண்டாம். இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
11 “நான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் என்னிலும் வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். அவரது பாதரட்சைகளைச் சுமக்கக்கூட நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார்.
12 அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான்.
13 அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார்.
14 ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வருகிறீரா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான்.
15 அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது” எனப் பதிலளித்தார். அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான்.
16 இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி, அவர்மேல் அமர்வதைக் கண்டார்.
17 அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.