< மத்தேயு 12 >

1 அக்காலத்தில் ஓய்வுநாளில், இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். அவருடைய சீடர்கள் பசியாயிருந்ததினால், அவர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.
2 பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் இயேசுவிடம், “இதோ, உமது சீடர்கள் ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தைச் செய்கிறார்களே” என்றார்கள்.
பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
3 இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
4 அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவனும் அவனோடிருந்தவர்களும் மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்தது மோசேயின் சட்டத்திற்கு முரணாயிருந்தது.
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.
5 மேலும், ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையா?
அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
6 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 ஆனால், ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்கமாட்டீர்கள்.
பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8 ஏனெனில், மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார்.
அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார்.
10 அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
௧0அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
11 இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா?
௧௧அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
12 ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார்.
௧௨ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார்.
13 அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது.
௧௩பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
14 அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள்.
௧௪அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
15 இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார்.
௧௫இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
16 அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார்.
௧௬தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
17 இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது:
௧௭ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது:
18 “இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார்.
௧௮“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19 இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள்.
௧௯வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
20 நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை, அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்.
௨0அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
21 இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.”
௨௧அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
22 அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது.
௨௨அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.
23 மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள்.
௨௩மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
24 ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள்.
௨௪பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது.
௨௫இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
26 சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்?
௨௬சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
27 நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? எனவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள்.
௨௭நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
28 ஆனால் நானோ, பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
௨௮நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.
29 “மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும்.
௨௯அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
30 “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
௩0என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
31 நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது.
௩௧ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32 மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn g165)
௩௨எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
33 “ஒரு நல்ல மரத்தை நடுங்கள், அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும். ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால், அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரம், அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது.
௩௩மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
34 விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.
௩௪விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
35 நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான். தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான்.
௩௫நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
36 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்.
௩௬மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37 உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”
௩௭ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
38 அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள்.
௩௮அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
39 அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
௩௯அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
40 யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும்.
௪0யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
41 நியாயத்தீர்ப்பின்போது, நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று, இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள்; ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்.
௪௧யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
42 நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
௪௨தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
43 “தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது. ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால்,
௪௩அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
44 ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அங்கு போகிறபோது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும், ஒழுங்காக இருப்பதைக் காணும்.
௪௪நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து,
45 அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும். இவ்விதமாகவே, இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார்.
௪௫திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.
46 இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள்.
௪௬இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
47 அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான்.
௪௭அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48 இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார்.
௪௮தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,
49 பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்.
௪௯தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
50 எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
௫0பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.

< மத்தேயு 12 >