< மல்கியா 3 >
1 “பாருங்கள், நான் என் தூதுவனை அனுப்புவேன், அவன் எனக்கு முன்பாக எனக்கு ஒரு வழியை ஆயத்தம் செய்வான்; நீங்கள் தேடுகிற யெகோவா தம்முடைய ஆலயத்திற்கு திடீரென வருவார்; நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின், தூதுவனானவர் வருவார்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
௧இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
2 ஆனால் அவர் வரும் நாளைச் சகிக்க யாரால் முடியும்? அவர் தோன்றுகையில் அவர்முன் யாரால் நிற்கமுடியும்? ஏனெனில் அவர் கொல்லனின் நெருப்பைப்போல் இருப்பார், துணிதுவைப்போரின் சலவைக்கட்டியைப்போலவும் இருப்பார்.
௨ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
3 அவர் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிக்கிற கொல்லனைப்போல் உட்கார்ந்து, லேவியின் மக்களைச் சுத்தமாக்குவார்; அவர் தங்கத்தைப்போலவும், வெள்ளியைப்போலவும் அவர்களைச் சுத்திகரிப்பார். அப்பொழுது யெகோவாவுக்கு நீதியுடன் தங்கள் காணிக்கையை கொண்டுவரும் மனிதர்கள் இருப்பார்கள்.
௩அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் சந்ததியைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாக இருப்பதற்காகவும், நீதியாகக் காணிக்கையைச் செலுத்துவதற்காகவும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
4 எனவே சென்ற நாட்களிலும், முந்திய வருடங்களிலும் நடந்ததுபோல, யூதாவின் காணிக்கைகளும் எருசலேமின் காணிக்கைகளும் யெகோவாவுக்கு பிரியமானவைகளாயிருக்கும்.
௪அப்பொழுது ஆரம்பநாட்களிலும் கடந்த வருடங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கும்.
5 “அப்பொழுது நியாயந்தீர்க்கும்படி நான் உங்கள் மத்தியில் வருவேன். சூனியக்காரருக்கும், விபசாரிகளுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும் எதிராக சாட்சி சொல்வேன், எனக்குப் பயப்படாமல் வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காது ஏமாற்றுகிறவர்களுக்கும், விதவைகளையும் தந்தையற்றவர்களையும் ஒடுக்குகிறவர்களுக்கும், அயல்நாட்டினரை நீதியாக நடத்தத் தவறுகிறவர்களுக்கும் எதிராக நான் விரைந்துவந்து சாட்சி சொல்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
௫நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரர்களுக்கும், விபசாரக்காரர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரர்களின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக முக்கிய சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
6 “யெகோவாவாகிய நான் மாறாதவர். எனவேதான் யாக்கோபின் சந்ததியாகிய நீங்கள் அழிக்கப்படாதிருக்கிறீர்கள்.
௬நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் மக்களாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
7 உங்கள் முற்பிதாக்களின் காலத்திலிருந்து நீங்கள் என் விதிமுறைகளைவிட்டு விலகி, அவற்றைக் கைக்கொள்ளாமல் இருந்தீர்கள். இப்பொழுதோ என்னிடத்திற்குத் திரும்புங்கள், நானும் உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்களோ, ‘நாங்கள் எவ்விதம் திரும்பவேண்டும்?’ என கேட்கிறீர்கள்?
௭நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் நாட்கள் துவங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; நாங்கள் எந்த காரியத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.
8 “ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையிடுவானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள். “ஆனால் நீங்களோ, ‘உம்மிடமிருந்து எப்படி நாங்கள் கொள்ளையடித்தோம்?’ என கேட்கிறீர்கள். “பத்தில் ஒரு பங்கிலும், காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்.
௮மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே.
9 நீங்கள் சாபத்துக்கு உட்பட்டவர்கள்; என்னிடமிருந்து கொள்ளையடிப்பதால் உங்கள் முழு தேசமும் சபிக்கப்பட்டதாகும்.
௯நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள்.
10 என் ஆலயத்தில் உணவு இருக்கும்படி, உங்கள் பத்தில் ஒரு பாகம் முழுவதையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழியமாட்டேனோ என்று பாருங்கள்.
௧0என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
11 உங்கள் பயிர்களைப் பூச்சி புழுக்கள் தின்று விடாமலும், உங்கள் தோட்டங்களிலுள்ள திராட்சைக் கொடிகளிலிருந்து காய்கள் உதிராமலும் காத்துக்கொள்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
௧௧பூமியின் கனியை அழித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சைக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
12 “அப்பொழுது எல்லா நாடுகளும், உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என அழைப்பார்கள். ஏனெனில் உங்கள் நாடு ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்கும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
௧௨அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
13 “அத்துடன் நீங்கள் எனக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்” என யெகோவா சொல்கிறார். “ஆயினும் நீங்கள், ‘நாங்கள் உமக்கு எதிராக என்ன சொல்லியிருக்கிறோம்?’ எனக் கேட்கிறீர்கள்.
௧௩நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள்.
14 “நீங்களோ, ‘இறைவனுக்குப் பணிசெய்வது வீணானது. அவருடைய கட்டளைகளை நிறைவேற்றி, சேனைகளின் யெகோவாவின் முன்பாக துக்கங்கொண்டாடுகிறவர்களாய் திரிந்து என்ன பயன் அடைந்தோம்? என்று சொல்கிறீர்கள்.
௧௪தேவனைச் சேவிப்பது வீண், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பயன்?
15 அத்துடன் நீங்கள், அகந்தையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், தீமை செய்கிறவர்கள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்றும், இறைவனை எதிர்க்கிறவர்கள்கூட தண்டனை பெறாமல் தப்பிக்கிறார்கள்’ என்றும் சொல்கிறீர்கள்.”
௧௫இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.
16 அதன்பின் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அதை யெகோவா செவிகொடுத்துக் கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையும், அவரது பெயரை கனம்பண்ணியவர்களையும் குறித்து, அவர் சமுகத்தில் ஒரு ஞாபகப் புத்தகச்சுருள் எழுதப்பட்டது.
௧௬அப்பொழுது யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; யெகோவா கவனித்துக் கேட்பார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புத்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
17 “எனக்கு அருமையான சொத்தை நான் சேர்க்கும் நாளில், அவர்கள் எனக்கொரு தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஒருவன் தனக்குப் பணிசெய்யும் தன் சொந்த மகனை மனமிரங்கி காப்பாற்றுவது போல, நானும் அவர்களைக் காப்பாற்றுவேன்.
௧௭என் செல்வத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஒரு மனிதன் தனக்கு வேலைசெய்கிற தன்னுடைய மகனுக்கு இரக்கம்காட்டுவதுபோல நான் அவர்களுக்கு இரக்கம்காட்டுவேன்.
18 அப்பொழுது நீங்கள் நீதியானவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும், இறைவனுக்குப் பணி செய்கிறவர்களுக்கும் பணி செய்யாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் மறுபடியும் காண்பீர்கள்.
௧௮அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்.