< லூக்கா 24 >
1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
௧வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
௨கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து,
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
௩உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
௪அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
௫அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
௬அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
௭மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
௮அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி,
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
௯கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள்.
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
௧0இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
௧௧இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
௧௨பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
௧௩அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
௧௪போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
௧௫இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார்.
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
௧௬ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
௧௭அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
௧௮அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான்.
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
௧௯அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார்.
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
௨0நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
௨௧அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது.
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
௨௨ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
௨௩அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள்.
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
௨௪அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
௨௫அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
௨௬கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
௨௭மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
௨௮அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார்.
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
௨௯அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
௩0அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
௩௧அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
௩௨அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
௩௩அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
௩௪கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
௩௫வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
௩௬இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
௩௭அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
௩௮அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
௩௯நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
௪0தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
௪௧ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
௪௨அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
௪௩அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
௪௪அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார்.
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
௪௫அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து:
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
௪௬எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
௪௭அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
௪௮நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
௪௯என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
௫0பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
௫௧அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
௫௨அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
௫௩நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.