< லூக்கா 20 >
1 ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தபோது தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், யூதரின் தலைவர்களும், அவரிடம் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,
2 “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறீர். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
3 அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.
4 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
5 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
6 ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”
7 எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
8 அதற்கு இயேசு, அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
9 இயேசு தொடர்ந்து மக்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டான்.
10 அறுவடைக் காலத்தின்போது, திராட்சைத் தோட்டத்திலிருந்து குத்தகைக்காரர் தனக்குக் கொடுக்கவேண்டிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை அனுப்பினான். ஆனால் அந்தக் குத்தகைக்காரரோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.
11 தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையுங்கூட அவர்கள் அடித்து, அவனை அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
12 அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
13 “அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கிற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
14 “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு உரியவன், இவனைக் கொலைசெய்வோம்; அப்பொழுது, இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
15 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்?
16 அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
17 அப்பொழுது இயேசு, “அவர்களை உற்றுநோக்கி, அப்படியானால், எழுதியிருக்கிறதன் பொருள் என்ன? “‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.’
18 அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
19 மோசேயின் சட்ட ஆசிரியரும், தலைமை ஆசாரியர்களும், உடனே அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
20 இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள்.
21 எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம்.
22 ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
23 இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம்,
24 “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
25 இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
26 மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.
27 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
28 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
29 ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான்.
30 இரண்டாவது சகோதரனும்,
31 பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள்.
32 கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
33 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
34 இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
35 ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
36 அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள்.
37 இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார்.
38 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
39 மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள்.
40 அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
41 இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி?
42 சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
43 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.”’
44 தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
45 மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம்,
46 “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
47 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.