< லூக்கா 17 >
1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ.
௧பின்பு இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி: இடறல்கள் வராமல் இருக்கமுடியாது, ஆனாலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
2 இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும்.
௨அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறதைவிட, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் கடலில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாக இருக்கும்.
3 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். “உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு.
௩உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக.
4 அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.
௪அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
5 அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.
௫அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள்.
6 அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
௬அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7 “உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா?
௭உங்களில் ஒருவனுடைய வேலைக்காரன் உழுது அல்லது மந்தையை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்புபோய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
8 மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா?
௮நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, பரிமாறும் உடை அணிந்துக்கொண்டு, ஆகாரம் உட்கொள்ளும்வரை எனக்கு வேலைச்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
9 கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா?
௯தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு நன்றி சொல்லுவானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10 எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
௧0அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் பயனற்ற வேலைக்காரர்கள், செய்யவேண்டிய கடமையைமட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
11 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார்.
௧௧பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார்.
12 அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே,
௧௨அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
13 “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
௧௩இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
14 இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
௧௪அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள்.
15 அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான்.
௧௫அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி,
16 அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
௧௬அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான்.
17 அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
௧௭அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18 இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார்.
௧௮தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
19 பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
௧௯அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
20 ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை.
௨0தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது.
21 ‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது” என்றார்.
௨௧இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
22 பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள்.
௨௨பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
23 ‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்.
௨௩இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24 வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன்.
௨௪மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
25 ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
௨௫அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது.
26 “நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும்.
௨௬நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
27 நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
௨௭நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது.
28 “லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
௨௮லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29 ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
௨௯லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது.
30 “மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும்.
௩0மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31 அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது.
௩௧அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும்.
32 லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
௩௨லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
33 தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
௩௩தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
34 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
௩௪அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35 இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள்.
௩௫மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36 இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.” என்றார்.
௩௬வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
37 அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.
௩௭அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.