< லேவியராகமம் 4 >
1 மேலும் யெகோவா மோசேயிடம்,
2 “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், ‘யாராவது தவறுதலாகப் பாவம் செய்து, யெகோவாவினுடைய கட்டளைகளால் தடைசெய்யப்பட்ட எதையேனும் செய்தால், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாவன:
3 “‘அபிஷேகம் பண்ணப்பட்ட தலைமை ஆசாரியன் மக்கள்மேல் குற்றம் சுமரும்படி பாவஞ்செய்தால், அவன் தான் செய்த பாவத்திற்கான பாவநிவாரண காணிக்கையாக, குறைபாடற்ற ஒரு இளங்காளையை யெகோவாவிடம் கொண்டுவர வேண்டும்.
4 அவன் அந்தக் காளையைச் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவன் அதன் தலையின்மேல் தன் கையை வைத்து, யெகோவா முன்பாக அதை வெட்டிக் கொல்லவேண்டும்.
5 பின்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன், பலியிடப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும்.
6 அவன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த இடத்தில் இருக்கும் திரைச்சீலைக்கு முன்பாக, யெகோவாவின் முன்னிலையில் அதில் கொஞ்சத்தை ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
7 பின்பு சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் நறுமண தூபபீடத்தின் கொம்புகளின்மேல், ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைப் பூசவேண்டும். காளையின் மீதமுள்ள இரத்தத்தை, சபைக்கூடார வாசலில் இருக்கும் தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும்.
8 அவன் பாவநிவாரண காணிக்கைக்கான காளையிலிருந்து கொழுப்பு முழுவதையும் அகற்றவேண்டும்: உள்ளுறுப்புகளை மூடியிருக்கிற அல்லது அவற்றை இணைத்திருக்கிற கொழுப்பையும்,
9 விலாவுக்குக் கீழ்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் அகற்றவேண்டும்.
10 சமாதான காணிக்கையாகச் செலுத்தப்பட்ட மாட்டிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, இதிலிருந்தும் அகற்றப்படவேண்டும். பின்பு ஆசாரியன் அவற்றைத் தகன பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
11 ஆனாலும் அக்காளையின் தோலையும், இறைச்சி முழுவதையும், தலையையும், கால்களையும், உள்ளுறுப்புகளையும், குடலையும்,
12 அதாவது, காளையின் மீதமுள்ள பாகங்கள் யாவற்றையும் அவன் முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமாக எண்ணப்படுகிற சாம்பல் கொட்டுகிற இடத்திற்கு கொண்டுவந்து, சாம்பல் குவியலின்மேல், விறகினால் எரிக்கப்பட்ட நெருப்பில்போட்டு எரிக்கவேண்டும்.
13 “‘இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரும் தவறுதலாகப் பாவஞ்செய்து, யெகோவாவினுடைய கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாகிலும் செய்யக்கூடும். அப்படிச் செய்திருந்தால் அந்தச் செயலைக்குறித்து அச்சமுதாயத்தினர் அறியாதிருந்தாலும், அவர்கள் குற்றவாளிகளே.
14 தாங்கள் செய்த பாவத்தை அவர்கள் அறியவரும்போது, சபையார் ஒரு இளங்காளையைப் பாவநிவாரண காணிக்கையாக சபைக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
15 சபையின் தலைவர்கள் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையின்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும். பின்பு அந்தக் காளை யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும்.
16 பின்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை சபைக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும்.
17 ஆசாரியன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, திரைச்சீலைக்கு எதிரே யெகோவாவின் முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
18 அவன் அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளில் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை அவன் சபைக்கூடார வாசலில் உள்ள தகன பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
19 அவன் அதிலிருந்து எல்லா கொழுப்பையும் அகற்றி, அதைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
20 தனது பாவநிவாரண காணிக்கைக்கான காளைக்குச் செய்ததுபோலவே, இந்தக் காளைக்கும் செய்யவேண்டும். இவ்விதமாய், ஆசாரியர் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
21 பின்பு காளையின் மீதமுள்ள பாகங்களை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், அங்கே ஆசாரியனின் பாவநிவாரணப் பலியைச் சுட்டெரித்ததுபோல் இதையும் எரிக்கவேண்டும். இதுவே சமுதாயத்தினருக்கான பாவநிவாரண காணிக்கை.
22 “‘ஒரு தலைவன் தவறுதலாகப் பாவஞ்செய்து, தன் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் குற்றவாளி.
23 அவன் செய்த பாவத்தை அவனுக்குத் தெரிவிக்கும்போது, அவன் குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவை தன் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.
24 அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவின் தலையில் தன் கையை வைத்து, யெகோவா முன்னிலையில் தகன காணிக்கை வெட்டப்படும் இடத்தில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். இது ஒரு பாவநிவாரண காணிக்கை.
25 பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை, அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
26 சமாதான காணிக்கையின் கொழுப்பை எரித்ததுபோலவே, கொழுப்பு முழுவதையும் அவன் பீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இவ்விதமாய், ஆசாரியன் அந்த மனிதனின் பாவத்திற்கான பாவநிவிர்த்தியைச் செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
27 “‘சமுதாய அங்கத்தினரில் ஒருவன் தவறுதலாகப் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் குற்றவாளி.
28 அவன் செய்த பாவத்தை அவனுக்குத் தெரிவிக்கும்போது, அவன் தான் செய்த பாவத்திற்கான தன் காணிக்கையாக குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டு பெண்குட்டியைக் கொண்டுவர வேண்டும்.
29 அவன் தன் கையைப் பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் தலைமேல் வைத்து, தகன காணிக்கைக்கான இடத்தில் அதை வெட்டிக் கொல்லவேண்டும்.
30 பின்பு ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
31 சமாதான காணிக்கையின் கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, அதன் கொழுப்பு முழுவதையும் அகற்றவேண்டும். ஆசாரியன் அதைப் பலிபீடத்தில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக எரிக்கவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
32 “‘அவன் பாவநிவாரண காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொண்டுவருவானேயாகில், அவன் குறைபாடற்ற பெண்ணாட்டுக்குட்டியையே கொண்டுவர வேண்டும்.
33 அவன் அதன் தலைமேல் தன் கையை வைத்து, தகன காணிக்கை வெட்டப்படும் இடத்தில் பாவநிவாரண காணிக்கையாக அதை வெட்டிக் கொல்லவேண்டும்.
34 பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, தகன பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அதைப் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
35 சமாதான பலியின் செம்மறியாட்டுக் குட்டியிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, கொழுப்பு முழுவதையும் அவன் அகற்றவேண்டும். ஆசாரியன் அதைப் பலிபீடத்தில் நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் வைத்து எரிக்கவேண்டும். இவ்விதமாய், ஆசாரியன் அவன் செய்த பாவத்திற்காக, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.