< லேவியராகமம் 13 >
1 மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா கூறியதாவது:
௧பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 “ஒருவனுக்கு உடம்பில் வீக்கமோ, கொப்பளமோ அல்லது தோலில் வெண்புள்ளிகளோ இருந்து, அது தொற்றும் தோல்வியாதியானால், அவன் ஆசாரியனான ஆரோனிடம் அல்லது ஆசாரியராய் இருக்கும் அவனுடைய மகன்களில் ஒருவனிடம் அழைத்துச்செல்லப்பட வேண்டும்.
௨“ஒரு மனிதனுடைய உடலின்மேல் தொழுநோயைப்போலிருக்கிற ஒரு தடிப்பாவது, புண்ணின் தோலாவது, வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியர்களாகிய அவனுடைய மகன்களில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
3 ஆசாரியன் அவனுடைய தோலில் உள்ள புண்ணைச் சோதித்துப் பார்க்கவேண்டும். புண்ணிலுள்ள உரோமம் வெண்மையாக மாறி, அந்தப்புண் தோலின் கீழ் ஆழமாகக் காணப்படுமானால், அது தொற்றும் தோல்வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனைப் பரிசோதிக்கிறபோது, அவனை சம்பிரதாயப்படி அசுத்தமானவன் என தீர்க்கவேண்டும்.
௩அப்பொழுது ஆசாரியன் அவனுடைய உடலின்மேல் இருக்கிற வியாதியைப் பார்க்கவேண்டும்; வியாதியுள்ள இடத்தில் முடி வெளுத்தும், வியாதியுள்ள இடம் அவனுடைய உடலின் மற்ற பகுதியைவிட அதிகமாகக் குழிந்தும் இருந்தால் அது தொழுநோய்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
4 ஆனால் தோலிலுள்ள புண் வெண்மையாக இருந்து, தோலைவிட ஆழமாகக் காணப்படாமலும், அதில் இருக்கும் உரோமம் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் நோயுள்ளவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
௪அவனுடைய உடலின்மேல் வெள்ளைப்படர்ந்திருந்தாலும், அந்த இடம் அவனுடைய மற்றத் தோலைவிட அதிக பள்ளமாக இல்லாமலும், அதின் முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
5 ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைத் திரும்பவும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்தப்புண் மாறாமலும், தோலில் பரவாமலும் இருக்கக் கண்டால், இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமையிலேயே வைக்கவேண்டும்.
௫ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல், அவன் பார்வைக்கு வியாதி நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
6 திரும்பவும் ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது புண் ஆறி, தோலில் பரவாமல் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு சிரங்கு மட்டுமே. அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
௬இரண்டாவதுமுறை அவனை ஏழாம் நாளில் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தேமல்; அவன் தன் உடைகளைத் துவைத்துச் சுத்தமாக இருப்பானாக.
7 ஆனாலும், அவன் ஆசாரியனிடம் தன்னைக் காண்பித்து சுத்தமானவன் என தீர்க்கப்பட்டபின், அச்சிரங்கு தோலில் பரவுமானால், அவன் திரும்பவும் ஆசாரியனுக்கு முன்பாக வரவேண்டும்.
௭தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, தோலில் தேமல் அதிகமாகப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
8 ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த சிரங்கு தோலில் பரவியிருந்தால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு தொற்று வியாதியாகும்.
௮அப்பொழுது தோலிலே தேமல் படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
9 “எவனுக்காவது தொற்றும் தோல்வியாதி இருக்குமானால், அவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்பட வேண்டும்.
௯“ஒரு மனிதனுக்கு தொழுநோய் இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
10 ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் தோலில் வெண்மையான வீக்கம் காணப்பட்டு, அது உரோமத்தையும் வெண்மையாக்கி, அந்த வீக்கத்தில் வெடிப்பு ஏற்பட்டு சதை காணப்பட்டால்,
௧0அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது முடியை வெண்மையாக மாறச்செய்தது என்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே புண் உண்டென்றும் கண்டால்,
11 அது நாள்பட்ட ஒரு தோல்வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என தீர்க்கவேண்டும். ஆசாரியன் அவனைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில், அவன் ஏற்கெனவே அசுத்தமானவன்.
௧௧அது அவனுடைய உடலிலுள்ள நாள்பட்ட தொழுநோய்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
12 “ஆனால் ஆசாரியன் பார்க்கக்கூடிய அளவு அந்த வியாதி நோயுற்றவனின் தலைமுதல் கால்வரை, தோல் முழுவதும் பரவியிருக்குமானால்,
௧௨ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே தொழுநோய் தோன்றி, அந்த வியாதியுள்ளவனுடைய தலைமுதல் கால்வரை அது உடல்முழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
13 ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோய் அவனுடைய உடல் முழுவதும் பரவியிருந்தால், அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட வேண்டும். அவன் உடல் முழுவதும் வெண்மையாக மாறியிருந்தால் அவன் சுத்தமாவான்.
௧௩அப்பொழுது ஆசாரியன் பார்த்து, தொழுநோய் அவன் உடல் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் உடல்முழுவதும் வெண்மையாகிவிட்டதால், அவன் சுத்தமுள்ளவன்.
14 எப்பொழுதாவது அவனுடைய தோல் வெடித்துச் சதை காணப்பட்டால் அவன் அசுத்தமானவனாய் இருப்பான்.
௧௪ஆனாலும், புண் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
15 ஆசாரியன் சதை தெரிவதைக் காணும்போது, அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். சதை தெரிவது அசுத்தமாகும்; அவனுக்கு இருப்பது தொற்று வியாதியாகும்.
௧௫ஆகையால், புண்ணை ஆசாரியன் பார்க்கும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; புண் தீட்டுள்ளது; அது தொழுநோய்.
16 அந்த தெரியும் சதை மாறி வெண்மையாகினால், அவன் ஆசாரியனிடம் போகவேண்டும்.
௧௬அல்லது புண் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்திற்கு வரவேண்டும்.
17 ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப்புண் வெண்மையாக மாறியிருந்தால், நோயுற்றவன் சுத்தமானவன் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
௧௭ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
18 “ஒரு மனிதனின் தோலில் கட்டி உண்டாகி, அது குணமடையும்போது,
௧௮“உடலின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
19 அந்தக் கட்டி இருந்த இடத்தில் வெண்மையான வீக்கமோ அல்லது சிவப்பும் வெண்மையுமான புள்ளியோ தோன்றினால், அவன் தன்னை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும்.
௧௯அந்த இடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக் கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
20 ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலைவிட ஆழமாகவும், அதிலுள்ள உரோமம் வெண்மையாகவும் மாறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அந்த மனிதனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். இதுவும் கட்டி இருந்த இடத்தில் தோன்றிய தொற்றும் தோல்வியாதியாகும்.
௨0ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட குழிந்திருக்கவும், அதின் முடி வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கவேண்டும்; அது புண்ணில் உண்டான தொழுநோய்.
21 ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அதில் வெண்மையான உரோமம் இல்லாமலும், தோலைவிட ஆழமில்லாமலும், புண் ஆறியுமிருந்தால், அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
௨௧ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
22 அது தோலில் பரவுகிறதாய் இருந்தால் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும்.
௨௨அது தோலில் அதிகமாகப் படர்ந்திருக்கக்கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.
23 ஆனால் புள்ளி மாறாமலும் பரவாமலும் இருந்தால், அது கொப்பளத்திலிருந்து உண்டான தழும்பு மாத்திரமே. ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
௨௩அந்த வெள்ளைப்படர் அதிகமாகாமல், அந்த அளவில் நின்றிருக்குமானால், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
24 “ஒருவனது தோல் வெந்து, வெந்ததினால் வெடித்தசதையில் வெண்சிவப்பான அல்லது வெண்மையான புள்ளி தோன்றினால்,
௨௪“ஒருவனுடைய உடலின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த தீக்காயம் ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
25 ஆசாரியன் அந்தப் புள்ளியைப் பரிசோதிக்க வேண்டும். அதிலுள்ள உரோமம் வெண்மையாகி, அந்தப்புண் தோலைவிட ஆழமாகக் காணப்பட்டால், அதுவும் வெந்துபோனதிலிருந்து தோன்றிய தொற்று வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதி ஆகும்.
௨௫ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே முடி வெண்மையாக மாறி, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தால், அது தீக்காயத்தினால் உண்டான தொழுநோய்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.
26 ஆனால் ஆசாரியன் அதைப் பரிசோதித்துப் பார்த்து, அந்தப் புள்ளியில் வெண்மையான உரோமம் இல்லாமலும், அது தோலைவிட ஆழமில்லாமலிருந்து, புண் ஆறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
௨௬ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
27 ஏழாம்நாளில் ஆசாரியன் அவனை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்த வியாதி தோலில் பரவியிருக்குமானால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும்.
௨௭ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாகப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
28 ஆனாலும் அந்தப் புள்ளி மாறாமலும், தோலில் படராமலும் புண் ஆறியிருந்தால், அது வெந்துபோனதினால் உண்டான ஒரு வீக்கமாகும். ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். ஏனெனில், அது வெந்துபோனதினால் உண்டான தழும்பு மாத்திரமே.
௨௮படரானது தோலில் அதிகமாகாமல், அந்த அளவில் நின்று சுருங்கியிருந்ததானால், அது தீக்காயத்தினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது சூட்டினால் வந்த தீக்காயம்.
29 “ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தலையில் அல்லது நாடியில் புண் ஏற்பட்டால்,
௨௯“ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
30 ஆசாரியன் அந்தப் புண்ணைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலைவிட ஆழமாகக் காணப்பட்டு, அதிலுள்ள உரோமம் மஞ்சள் நிறமாகவும், மெல்லியதாகவும் இருந்தால், அவர்களை அசுத்தமானவர் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அது ஒரு சொறி. தலையிலும், நாடியிலும் உண்டாகிய ஒரு தொற்று வியாதி.
௩0ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே முடி பொன் நிறமும் மிருதுவாகவும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிதொழுநோய்.
31 ஆனாலும் ஆசாரியன் இந்த விதமான புண்ணை சோதிக்கும்போது, அது தோலைவிட ஆழமில்லாமலும், கருப்பு உரோமம் அவ்விடத்தில் இல்லாமலும் இருந்தால், ஆசாரியன் அந்த நோயுற்றவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும்.
௩௧ஆசாரியன் அந்தச் சொறிதொழுநோயைப் பார்க்கும்போது, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இல்லாமலும், அதிலே கறுத்தமுடி இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
32 ஏழாம் நாளிலே ஆசாரியன் திரும்பவும் அந்தப் புண்ணைப் பார்வையிட வேண்டும். அந்த சொறி தோலில் பரவாமலும், மஞ்சள் நிறமான உரோமம் காணப்படாமலும், தோலைவிட ஆழமாகக் காணப்படாமலும் இருந்தால்,
௩௨ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்ப்பானாக; அந்தச் சொறி படராமலும், அதிலே பொன்நிறமுடி இல்லாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால்,
33 அவன் சொறியுள்ள பகுதி தவிர மற்றப்பகுதிகளை எல்லாம் சிரைத்துக்கொள்ள வேண்டும். பின் ஆசாரியன் பரிசோதனைக்காக இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமைப்படுத்த வேண்டும்.
௩௩அந்தச் சொறியுள்ள இடம்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளவேண்டும்; பின்பு, ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
34 ஏழாம் நாளிலே ஆசாரியன் அந்த சொறியைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலில் பரவாமலும், தோலைவிட ஆழமில்லாமலும் காணப்பட்டால், ஆசாரியன் அவனை சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் சுத்தமாயிருப்பான்.
௩௪ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி, தோலில் பரவாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் தன் உடைகளைத் துவைத்தபின் சுத்தமாக இருப்பான்.
35 ஆனாலும் அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட்ட பின்னும் சொறி தோலில் பரவினால்,
௩௫அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால்,
36 ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தால், ஆசாரியன் மஞ்சள் நிற உரோமத்தைத் தேடிப்பார்க்க வேண்டியதில்லை. அந்த ஆள் அசுத்தமானவனே.
௩௬ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் பரவியிருந்தால், அப்பொழுது முடி பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
37 ஆனாலும் ஆசாரியன் பார்க்கும்போது, அவனுடைய எண்ணப்படி சொறி மாற்றமடையாமல் அவ்விடத்தில் கருப்பு உரோமம் வளர்ந்திருந்தால், அந்த சொறி குணமாயிற்று. அவன் சுத்தமாய் இருக்கிறான். அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
௩௭அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமுடி முளைத்ததேயாகில், சொறி குணமாகிவிட்டது; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
38 “ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுடைய தோலில் வெண்மையான புள்ளிகள் இருக்கிறபோது,
௩௮“ஒரு ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் அவர்கள் உடலின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
39 ஆசாரியன் அவர்களைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அப்புள்ளிகளின் நிறம், மங்கிய வெள்ளையாய் இருந்தால் அது தோலில் உண்டான ஒரு தீங்கற்ற ஒரு சிரங்கு வியாதியாகும். அவன் சுத்தமாய் இருக்கிறான்.
௩௯ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய உடலிலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
40 “ஒரு மனிதன் தலைமயிரை இழந்து மொட்டையாய் இருக்கும்போது அவன் சுத்தமானவன்.
௪0“ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான்.
41 அவனுடைய உச்சந்தலையின் முன் பகுதியிலிருந்து மயிர் உதிர்ந்தால், அவனுக்கு இருப்பது மொட்டையான முன்னந்தலை. அவன் சுத்தமானவன்.
௪௧அவனுடைய முன்னந்தலை முடி உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாக இருக்கிறான்.
42 ஆனால் அவனுடைய மொட்டைத்தலையில் அல்லது நெற்றியில் வெண்சிவப்பான புண் இருந்தால், அது அவனுடைய தலையில் அல்லது நெற்றியில் உண்டான தொற்று வியாதியாகும்.
௪௨மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் ஏற்படுகிற தொழுநோய்.
43 ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அவனுடைய தலையிலோ நெற்றியிலோ உள்ள வீங்கிய புண், ஒரு தொற்றும் தோல்வியாதிபோல் வெண்சிவப்பு நிறமாக இருந்தால்,
௪௩ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,
44 அவன் நோயுற்று அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய புண்ணின் நிமித்தம் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
௪௪அவன் தொழுநோயாளி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45 “அப்படிப்பட்ட தொற்று வியாதியுடைய ஆள், கிழிந்த உடைகளை உடுத்தவேண்டும். அவன் தன் தலைமயிரைக் குழப்பி, தன் முகத்தின் கீழ்ப்பகுதியை மூடிக்கொண்டு, ‘அசுத்தம், அசுத்தம்’ என சத்தமிடவேண்டும்.
௪௫“அந்த வியாதி உண்டாயிருக்கிற தொழுநோயாளி உடை கிழிந்தவனாகவும், தன் தலையை மூடாதவனாகவும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, தீட்டு, தீட்டு என்று சத்தமிடவேண்டும்.
46 அந்தத் தொற்று வியாதி அவனுக்கு இருக்குமட்டும் அவன் அசுத்தமானவனாய் இருப்பான். அவன் தனிமையாய் வாழவேண்டும். முகாமுக்கு வெளியே வசிக்கவேண்டும்.
௪௬அந்த வியாதி அவனில் இருக்கும் நாட்கள்வரை தீட்டுள்ளவனாக கருதப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவனுடைய குடியிருப்பு, முகாமிற்கு வெளியே இருப்பதாக.
47 “ஏதாவது பூஞ்சணத்தினால் உடை கறைப்பட்டால், அதாவது கம்பளியாவது, மென்பட்டு உடையாவது,
௪௭“ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது,
48 மென்பட்டினாலோ கம்பளியினாலோ நெய்யப்பட்ட உடையாவது, தோலாவது, தோலினால் செய்யப்பட்ட ஏதாவது பொருளாவது கறைப்பட்டிருந்தால்,
௪௮பஞ்சுநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,
49 அந்த உடையிலோ, தோலிலோ, நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலினால் செய்யப்பட்ட பொருளிலோ, உள்ள கறை பச்சையாகவோ, சிவப்பாகவோ இருந்தால் அது பரவும் பூஞ்சணமாகும். அதை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும்.
௪௯உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது தொழுநோயாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
50 ஆசாரியன் அந்த பூஞ்சணத்தைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பொருட்களை ஏழுநாட்களுக்குப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.
௫0ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
51 ஏழாம்நாளில் அவன் அதைப் பரிசோதிக்க வேண்டும். உடையிலோ, நெய்யப்பட்ட துணியிலோ, தோலினால் செய்யப்பட்ட பொருட்களிலோ, தோலிலோ அவை எதற்கு பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் பூஞ்சணம் படர்ந்திருந்தால், அது அழிவை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அப்பொருள் அசுத்தமானது.
௫௧ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; உடையிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது அது பரவியிருந்தால், அது அரிக்கிற தொழுநோய்; அது தீட்டாயிருக்கும்.
52 எனவே ஆசாரியன் கறைப்பட்ட உடையையோ, கம்பளியினால் அல்லது மென்பட்டினால் நெய்யப்பட்டதையோ அல்லது பின்னப்பட்ட உடையையோ, தோல் பொருட்களோ அவைகளை எரிக்கவேண்டும். ஏனெனில், அந்த பூஞ்சணம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே அப்பொருள்கள் எரிக்கப்படவேண்டும்.
௫௨அந்த பூசணம் இருக்கிற ஆட்டுரோமத்தினாலும் பஞ்சுநூலினாலும் செய்யப்பட்ட உடையையும், நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளையும், தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற தொழுநோய்; ஆகையால் நெருப்பில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
53 “ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, உடையிலோ அல்லது நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலிலோ பூஞ்சணம் படராதிருந்தால்,
௫௩“உடையின் நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது, அந்தப் பூசணம் பரவவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
54 கறைபட்ட அப்பொருள் கழுவப்படும்படி ஆசாரியன் உத்தரவு கொடுக்கவேண்டும். அதன்பின் இன்னும் ஏழுநாட்களுக்கு அவன் அதைப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.
௫௪அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாவதுமுறை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
55 பாதிக்கப்பட்ட பொருள் கழுவப்பட்ட பின், ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்த பூஞ்சணம் படராதிருந்தாலும், அதனுடைய தோற்றத்தில் மாற்றமடையாதிருந்தால் அது அசுத்தமானதே. அந்த பூஞ்சணம் எந்த ஒரு பக்கத்தைப் பாதித்திருந்தாலும், அது நெருப்பினால் எரிக்கப்படவேண்டும்.
௫௫அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் பூசணம் பரவாமல் இருந்தாலும், அது நிறம் மாறாததாக இருந்தால் தீட்டாயிருக்கும்; தீயில் அதை எரித்துவிடவேண்டும்; அது அந்த உடையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஆழமாக அரிக்கும்.
56 ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அப்பொருள் கழுவப்பட்ட பின்பு பூஞ்சணம் மங்கியிருந்தால், அது காணப்பட்ட அந்த இடத்தை தோல் பொருளிலிருந்தோ, உடையிலிருந்தோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியிலிருந்தோ அவன் அதை கிழித்தெடுக்க வேண்டும்.
௫௬கழுவப்பட்டபின்பு அது குறைந்ததென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது இல்லாதபடி எடுத்துப்போடவேண்டும்.
57 ஆனால் அந்தப் பூஞ்சணம் உடையிலோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட பொருளிலோ, அல்லது தோல் பொருளிலோ திரும்பவும் தோன்றினால், அது படருகின்றது. எனவே பூஞ்சணம் பிடித்த எதுவும் நெருப்பினால் எரிக்கப்படவேண்டும்.
௫௭அது இன்னும் உடையிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது காணப்பட்டால், அது படருகிற பூசணம்; ஆகையினால் அது உள்ளதை தீயில் எரித்துவிடவேண்டும்.
58 உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ, தோல் பொருளோ கழுவப்பட்டுப் பூஞ்சணம் நீக்கப்பட்டதாயிருந்தால், அது திரும்பவும் கழுவப்பட வேண்டும். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.”
௫௮ஆடையின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளாவது கழுவப்பட்டபின்பு, அந்தப் பூசணம் அதை விட்டுப் போயிற்றேயானால், இரண்டாவதுமுறை கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருக்கும்”.
59 கம்பளியினால் அல்லது மென்பட்டினாலான உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ அல்லது ஏதாவது ஒரு தோல் பொருளோ பூஞ்சணத்தினால் கறைப்பிடித்திருந்தால், அவை சுத்தமோ, அசுத்தமோ என தீர்மானிப்பதற்கான விதிமுறைகள் இவைகளே என்றார்.
௫௯ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்திற்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.