< புலம்பல் 5 >

1 யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
2 எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன. எங்கள் வீடுகள் பிறநாட்டவருக்குக் கொடுக்கப்பட்டன.
எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
3 நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை. எங்கள் தாய்மார்கள் விதவைகளைப் போலிருக்கிறார்கள்.
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
4 நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; எங்கள் விறகும் பணத்திற்கே வாங்கப்படுகிறது.
எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது.
5 எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்; நாங்கள் களைத்துப்போனோம். ஆனால் எங்களுக்கு ஓய்வு இல்லை.
பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.
6 நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும், அசீரியாவுக்குக் கீழும் அடங்கிப்போனோம்.
உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம்.
7 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்; நாங்களோ அவர்களுடைய தண்டனைகளைச் சுமக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
8 அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள், அவர்களுடைய கையிலிருந்து எங்களை விடுவிக்க யாருமேயில்லை.
அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை.
9 பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம், எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே, எங்கள் உணவைத் தேடுகிறோம்.
வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால், எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம்.
10 பசியின் கொடுமையினால், காய்ச்சல் வந்து எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போயிற்று.
௧0பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
11 பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும் மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.
௧௧சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
12 இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்; முதியோருக்கு மரியாதை காட்டப்படுவதுமில்லை.
௧௨தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை.
13 இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்; சிறுவர்கள் பாரமான மரங்களைச் சுமந்து தள்ளாடுகிறார்கள்.
௧௩வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.
14 முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்; வாலிபர் தாங்கள் இசை மீட்பதை நிறுத்திவிட்டார்கள்.
௧௪முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது.
15 எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது; எங்கள் நடனம் புலம்பலாக மாறிற்று.
௧௫எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.
16 எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது. நாங்கள் பாவம் செய்தோமே; எங்களுக்கு ஐயோ கேடு!
௧௬எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.
17 இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று, இவைகளினால் எங்கள் கண்கள் மங்கிப்போகின்றன;
௧௭அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின.
18 ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது; அங்கே நரிகள் இரைதேடித் திரிகின்றன.
௧௮பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
19 யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்; உமது சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
௧௯யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
20 ஏன் எங்களை நீர் தொடர்ந்து மறந்துவிடுகிறீர்? ஏன் எங்களை நெடுங்காலமாய் கைவிடுகிறீர்?
௨0தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?
21 யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்; எங்கள் நாட்களை முந்திய நாட்களைப்போல் புதிதாக்கும்.
௨௧யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
22 அப்படியில்லாவிட்டால், நீர் எங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவீரோ? எங்கள்மேல் கடுங்கோபம் கொண்டிருக்கிறீரே!
௨௨எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே!

< புலம்பல் 5 >