< நியாயாதிபதிகள் 3 >
1 கானானில் எந்த யுத்தங்களிலும் அனுபவமில்லாத இஸ்ரயேல் மக்களை சோதிப்பதற்கென, யெகோவா விட்டுவைத்த நாடுகளாவன:
௧கானான் தேசத்தில் நடந்த எல்லா யுத்தங்களையும் அறியாமலிருந்த இஸ்ரவேலர்களாகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
2 யுத்தத்தில் முன்னனுபவமில்லாத இஸ்ரயேலரின் சந்ததிகளுக்கு யுத்த முறையைக் கற்றுக்கொடுக்கவே அவர் இவ்வாறு செய்தார்.
௨இஸ்ரவேலின் புதிய சந்ததியாரும், அதற்கு முன்பு யுத்தம் செய்ய அறியாமலிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் யெகோவா விட்டுவைத்தவர்கள் யாரென்றால்:
3 அந்த நாடுகளாவன: ஐந்து பெலிஸ்திய ஆளுநர்கள், எல்லா கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலை தொடங்கி ஆமாத் வரைக்கும் உள்ள லெபனோன் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோரே.
௩பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால் எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியர்களுமே.
4 மோசேயின் மூலம் இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு யெகோவா கொடுத்த அவருடைய கட்டளைகளுக்கு, இஸ்ரயேலர் கீழ்ப்படிகிறார்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே இவர்கள் விட்டுவைக்கப்பட்டனர்.
௪யெகோவா மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
5 இதன்படியே இஸ்ரயேலர் கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்கள் மத்தியில் வாழ்ந்துவந்தனர்.
௫இப்படி இஸ்ரவேல் மக்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களாகிய இவர்களின் நடுவே குடியிருந்து,
6 இஸ்ரயேலர் அவர்களுடைய மகள்களைத் தாங்கள் திருமணம் செய்து, தங்கள் மகன்களை அவர்களுடைய மகள்களுக்குத் திருமணம் செய்துகொடுத்து, அவர்களுடைய தெய்வங்களுக்குப் பணிசெய்தார்கள்.
௬அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
7 இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவற்றைச் செய்தார்கள். அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, பாகாலுக்கும், அசேரா தெய்வத்திற்கும் பணிசெய்தார்கள்.
௭இப்படி இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது,
8 இஸ்ரயேலருக்கு எதிராக யெகோவா கோபமடைந்தார். அதனால் அவர் அவர்களை ஆராம் நகராயீமின் அரசன் கூசான் ரிஷாதாயீமின் கையில் விற்றுப்போட்டார். இஸ்ரயேலர் எட்டு வருடங்கள் அவனுக்குக்கீழ் அடங்கி இருந்தனர்.
௮யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம் கொண்டு அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் மக்கள் கூசான்ரிஷதாயீமை எட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
9 ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதபோது, அவர் அவர்களை விடுவிப்பதற்காக விடுதலைவீரனை எழுப்பினார். கேனாசின் மகனும் காலேபின் தம்பியுமான ஒத்னியேலே அவன். அவனே அவர்களை விடுவித்தான்.
௯இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா இஸ்ரவேல் மக்களை காப்பாற்றும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய மகனான ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பச்செய்தார்.
10 யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வந்தார். அதனால் அவன் இஸ்ரயேலருக்கு நீதிபதியாகி யுத்தத்திற்குப் போனான். யெகோவா மெசொப்பொத்தோமியாவின் அரசன் கூசான் ரிஷாத்தாவை ஒத்னியேல் கையில் கொடுத்தார். ஒத்னியேல் அவனைத் தோற்கடித்தான்.
௧0அவன்மேல் யெகோவாவுடைய ஆவி வந்து அவனை பெலப்படுத்தியதால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்செய்யப் புறப்பட்டான்; யெகோவா மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவனுடைய கை கூசான்ரிஷதாயீமின்மேல் பெலங்கொண்டது.
11 கேனாசின் மகன் ஒத்னியேல் இறக்கும்வரை நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாக இருந்தது.
௧௧தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான்.
12 திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள், அவர்கள் இந்தத் தீமையைச் செய்ததால் யெகோவா மோவாப்பின் அரசன் எக்லோனை இஸ்ரயேலருக்கு மேலாக பலக்கச் செய்தார்.
௧௨இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அவர்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தபடியால், யெகோவா எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு எதிராக பெலனடையச் செய்தார்.
13 எக்லோன் அம்மோனியரையும், அமலேக்கியரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டுவந்து இஸ்ரயேலரைத் தாக்கினான். அவர்கள் பேரீச்சமரங்களின் பட்டணத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.
௧௩அவன் அம்மோனிய மக்களையும் அமலேக்கியர்களையும் அழைத்துக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறியடித்தான்; பேரீச்சை மரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
14 இஸ்ரயேலர்கள் பதினெட்டு வருடங்களாக மோவாப் அரசன் எக்லோனுக்குக்கீழ் அடங்கி இருந்தனர்.
௧௪இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருடங்கள் பணிந்துகொண்டார்கள்.
15 திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதனர். அவர் அவர்களுக்கு ஏகூத் என்னும் ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இடதுகை பழக்கமுடைய இவன் பென்யமீனியனான கேராவின் மகன். இஸ்ரயேலர் மோவாப் அரசன் எக்லோனுக்கு கப்பம் கொடுக்கும்படி அவனை அனுப்பியிருந்தார்கள்.
௧௫இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பச்செய்தார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தான்; அவனுடைய கையிலே இஸ்ரவேல் மக்கள் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
16 ஏகூர் இருபக்கமும் கூர்மையுடைய ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு வாளைச்செய்து தனது வலது தொடையில் அதைக் கட்டி, தனது உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்தான்.
௧௬ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு,
17 அவன் மோவாப் அரசன் எக்லோனுக்கு கப்பத்தைக் கொடுத்தான். எக்லோன் மிகவும் பருத்த மனிதன்.
௧௭காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் பருமனான மனிதனாக இருந்தான்.
18 ஏகூத் கப்பத்தைக் கொடுத்தபின் அதைச் சுமந்துவந்த தன் மனிதர்களை அவர்களுடைய வழியில் அனுப்பிவிட்டான்.
௧௮அவன் காணிக்கையைச் செலுத்தி முடிந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த மக்களை அனுப்பிவிட்டான்.
19 கில்காலில் இருந்த விக்கிரகங்கள் இருந்த இடம்வரை சென்ற அவன் திரும்பிவந்து, “அரசனே, உம்மிடம் சொல்லவேண்டிய ஒரு இரகசிய செய்தி என்னிடம் உண்டு” என்றான். அதற்கு அரசன்: “அமைதி” என்றவுடன், அவனுடைய வேலையாட்கள் அவனைவிட்டுப் போனார்கள்.
௧௯அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற அனைவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள்.
20 தனது அரண்மனையின் குளிர்ச்சியான மேலறையில் தனிமையாக உட்கார்ந்துகொண்டிருந்த அவனிடம் ஏகூத் கிட்டவந்து, “என்னிடம், உமக்குக் கொடுக்கவேண்டிய இறைவனிடமிருந்து பெற்ற ஒரு செய்தி இருக்கிறது” என்றான். அரசன் தனது நாற்காலியிலிருந்து எழுந்தபோது,
௨0ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.
21 ஏகூத் தனது இடதுகையை நீட்டி, தனது வலது தொடையில் கட்டியிருந்த வாளை உருவி, அதனால் அரசனின் வயிற்றில் குத்தினான்.
௨௧உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான்.
22 வாளுடன்கூட கைப்பிடியும் அவன் வயிற்றில் புகுந்தது. வாளின் முனை அவன் முதுகினால் வெளியே வந்தது. ஏகூத் அந்த வாளை வெளியே இழுக்கமுடியாத அளவுக்கு கொழுப்பு அதை மூடிக்கொண்டது.
௨௨கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; கத்தி முனை பின்புறமாக வந்தது.
23 பின்பு ஏகூத் புறப்பட்டு, மேலறையின் கதவுகளைத் தனக்குப் பின்னாகப் பூட்டிக்கொண்டு மண்டபத்துக்குப் போனான்.
௨௩ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
24 அவன் போனபின் பணியாட்கள் வந்து மேலறையின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள், “அவர் வீட்டினுள்ளறையில் மலசலம் கழிக்கும்படி போயிருக்கலாம்” என்று எண்ணினார்கள்.
௨௪அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.
25 அவர்கள் அதிக நேரம் காத்திருந்தார்கள். அரசன் அறையின் கதவுகளைத் திறக்காததால் அவர்கள் ஒரு திறவுகோலை எடுத்து கதவுகளைத் திறந்தார்கள். அங்கே தங்கள் தலைவன் இறந்து தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள்.
௨௫அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல்வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே செத்துக்கிடந்தான்.
26 அவர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையிலேயே ஏகூத் தப்பியோடிவிட்டான். அவன் விக்கிரகங்களுள்ள இடத்தைக் கடந்துபோய் சேயீருக்குத் தப்பியோடினான்.
௨௬அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
27 அவன் அங்கே போனபோது, எப்பிராயீம் மலைநாட்டில் ஒரு எக்காளத்தை ஊதினான். இஸ்ரயேலர் மலைகளிலிருந்து இறங்கி அவனுடன் போனார்கள். அவன் அவர்களை யுத்தத்திற்கு வழிநடத்திச் சென்றான்.
௨௭அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் அவனோடு மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
28 அவன் இஸ்ரயேலரைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்” என உத்தரவிட்டு, “உங்கள் எதிரியான மோவாபை யெகோவா இன்று உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்றான். எனவே அவர்கள் ஏகூத்தைப் பின்பற்றிப்போய் மோவாப்புக்கு எதிரேயுள்ள யோர்தானின் துறைமுகத்தைக் கைப்பற்றினர். அவர்கள் ஒருவனையும் கடந்து தப்பியோட விடவில்லை.
௨௮என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; யெகோவா உங்கள் எதிரிகளாகிய மோவாபியர்களை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைமுகத்தைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவிடாமல்,
29 அந்த நாளில் அவர்கள் மோவாபியரில் கிட்டத்தட்ட பத்தாயிரம்பேரை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் ஆற்றலும், வலிமையும் நிறைந்தவர்கள். ஒரு மனிதன்கூட தப்பிப் போகவில்லை.
௨௯அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் 10,000 பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
30 அந்த நாளிலே மோவாப் இஸ்ரயேலின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டது. எண்பது வருடங்களாக நாட்டில் சமாதானம் நிலவியது.
௩0இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் 80 வருடங்கள் அமைதலாக இருந்தது.
31 ஏகூத்துக்குப் பின், ஆனாத்தின் மகன் சம்கார் நீதிபதியாக வந்தான். அவன் மாட்டை அடிக்கும் கம்பினால் அறுநூறு பெலிஸ்தியரை அடித்து வீழ்த்தினான். அவனும் இஸ்ரயேலைக் காப்பாற்றினான்.
௩௧அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான்.