< நியாயாதிபதிகள் 2 >

1 யெகோவாவின் தூதனானவர் கில்காலில் இருந்து போகீமுக்குப் போய் சொன்னதாவது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவேன் என்று நான் வாக்களித்த நாட்டிற்கு, நான் உங்களை வழிநடத்தி வந்தேன். நான் உங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறமாட்டேன் என்றும்,
யெகோவாவுடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
2 இந்நாட்டு மக்களோடு எந்த உடன்படிக்கையையும் நீங்கள் செய்யவேண்டாம் என்றும், அவர்களுடைய பலிபீடங்களை உடைத்துப்போடும்படியும் நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்களோ அதற்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?
நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3 அதனால் இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்கு முன்பாக நான் அவர்களைத் துரத்தமாட்டேன்; அவர்கள் உங்கள் விலாக்களுக்கு, குத்தும் முள்ளாக இருப்பார்கள். அவர்களின் தெய்வங்கள் உங்களுக்கு கண்ணியாகவும் இருக்கும்.”
ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
4 யெகோவாவின் தூதனானவர் இவற்றை எல்லா இஸ்ரயேலர்களிடமும் சொன்னபோது மக்கள் சத்தமிட்டு அழுதார்கள்.
யெகோவாவுடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
5 அவர்கள் அந்த இடத்தை போகீம் என்று அழைத்தார்கள். அங்கேயே அவர்கள் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள்.
6 முன்பு யோசுவா இஸ்ரயேலரைப் போக அனுமதித்தபோது, அவர்கள் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி போனார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உரிமைச்சொத்தைப் பெறும்படி போனார்கள்.
யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
7 மக்கள் யோசுவாவின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்குப் பணிசெய்தனர். யெகோவா இஸ்ரயேலருக்காகச் செய்த எல்லாப் பெரிய செயல்களையும் கண்டிருந்த, யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த சபைத்தலைவர்களின் காலத்திலும் மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள்.
யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள்.
8 யெகோவாவின் அடியவனும், நூனின் மகனுமான யோசுவா நூற்றுப்பத்து வயதில் இறந்தான்.
நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான்.
9 அவர்கள் திம்னாத் ஏரேஸில் அவனுடைய உரிமைச்சொத்தான நிலத்தில் அவனுடைய உடலை அடக்கம்பண்ணினார்கள். இது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைநாட்டில் இருக்கிறது.
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
10 அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது.
௧0அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
11 அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, பாகால் தெய்வங்களுக்குப் பணிசெய்தனர்.
௧௧அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,
12 அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் முற்பிதாக்களின் யெகோவாவாகிய இறைவனை கைவிட்டார்கள். தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பலவிதமான தெய்வங்களைப் பின்பற்றி வணங்கினார்கள். யெகோவாவுக்கு கோபமூட்டினார்கள்.
௧௨தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்.
13 அவர்கள் யெகோவாவைக் கைவிட்டு பாகாலுக்கும், அஸ்தரோத்துக்கும் பணிசெய்ததினாலேயே யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்.
௧௩அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள்.
14 இஸ்ரயேலருக்கு விரோதமாக யெகோவா கோபங்கொண்டு அவர் அவர்களைக் கொள்ளைக்காரரிடத்தில் ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தார்கள். அவர் அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களுடைய பகைவர்களுக்கு விற்றுப்போட்டார், அந்தப் பகைவர்களைத் தொடர்ந்து அவர்களால் எதிர்க்க முடியவில்லை.
௧௪அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
15 இஸ்ரயேலர் சண்டையிடப் போகும்போதெல்லாம், யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டபடி யெகோவாவின் கரம் அவர்களுக்கெதிராக இருந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள்.
௧௫யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
16 அக்காலத்தில் யெகோவா நீதிபதிகளை நியமித்தார். அவர்கள் இஸ்ரயேல் மக்களை கொள்ளையரின் கைகளிலிருந்து மீட்டுக்கொண்டார்கள்.
௧௬யெகோவா நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.
17 ஆயினும் அவர்கள் அந்த நீதிபதிகளுக்கு செவிகொடுக்க மறுத்து, அந்நிய தெய்வங்களை வணங்கி விபசாரம் செய்தார்கள். யெகோவாவின் கட்டளைக்கு கீழ்படிந்த அவர்களின் முன்னோரின் வழியில் நடக்காமல், அவர்கள் விரைவில் வழிவிலகினார்கள்.
௧௭அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
18 யெகோவா அவர்களுக்காக நீதிபதியை நியமித்தபோதெல்லாம், அவர் அந்த நீதிபதியோடுகூட இருந்து, அவர்களுடைய எதிரிகளிடமிருந்து நீதிபதியின் வாழ்நாளெல்லாம் அவர்களைப் பாதுகாத்தார். அவர்கள் தங்கள் பகைவர்களினால் ஒடுக்கப்பட்ட வேதனைக் குரலைக் கேட்டு யெகோவா அவர்களுக்கு இரங்கினார்.
௧௮யெகோவா அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, யெகோவா நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, யெகோவா துக்கப்படுவார்.
19 ஆனால் அந்த நீதிபதி இறந்தவுடன், இஸ்ரயேல் மக்கள் திரும்பவும் தங்கள் முன்னோரைவிட தூய்மையற்ற வழியில் நடந்தார்கள். அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி வணங்கி அதற்கு சேவை செய்தார்கள். அவர்கள் இப்படி தங்கள் தீய நடத்தைகளிலிருந்தும் பிடிவாதமான வழிகளிலிருந்தும் விடுபட மறுத்தார்கள்.
௧௯நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள்.
20 அப்பொழுது யெகோவா இஸ்ரயேலின்மேல் கோபம் மூண்டவராகி, “இந்த மக்கள் நான் அவர்களின் முற்பிதாக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். எனக்குச் செவிகொடுக்கவில்லை.
௨0ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால்,
21 அதனால் யோசுவா இறக்கும்போது, அழிக்காமல் விட்டுச்சென்ற எந்த நாட்டையும் இவர்களுக்கு முன்பாக துரத்திவிடமாட்டேன்.
௨௧யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
22 ஆனால் நான் இவர்களைக்கொண்டு இஸ்ரயேலர்கள் தங்கள் முற்பிதாக்கள் நடந்ததுபோல, யெகோவாவின் வழியைக் கைக்கொண்டு அதில் நடக்கிறார்களோ, இல்லையோ என இஸ்ரயேலரைச் சோதிப்பேன்” என்றார்.
௨௨அவர்களுடைய பிதாக்கள் யெகோவாவின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
23 எனவே யெகோவா அந்த நாடுகளை அப்படியே தொடர்ந்து இருக்க விட்டிருந்தார்; அவர்களை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடுக்கவோ, உடனே துரத்திவிடவோ இல்லை.
௨௩அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

< நியாயாதிபதிகள் 2 >