< நியாயாதிபதிகள் 19 >
1 அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. அக்காலத்தில் எப்பிராயீம் மலைநாட்டின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் லேவியன் ஒருவன் நெடுங்காலமாகக் குடியிருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருந்தான்.
2 ஆனால் அவளோ அவனுக்குத் துரோகம்செய்து அவனைவிட்டுப் பிரிந்து, யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குத் தன் தகப்பன் வீட்டுக்குப்போய் நான்கு மாதம் அங்கே தங்கியிருந்தாள்.
3 அதன்பின் அவளது கணவன் அவளை இணங்கப்பண்ணி மீண்டும் அழைத்து வருவதற்காக அவளிடத்திற்குப் போனான். அவன் தனது வேலைக்காரனோடும், இரண்டு கழுதைகளோடும் போனான். அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அவள் தகப்பன் அவனைக் கண்டபோது, மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
4 அப்பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனைத் தங்களுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். எனவே அவன் மூன்று நாட்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து, நித்திரை செய்தான்.
5 அவர்கள் நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தார்கள். அவன் பிரயாணத்திற்கு ஆயத்தமானான். ஆனால் பெண்ணின் தகப்பன் தன் மருமகனிடம், “நீ கொஞ்சம் உணவு சாப்பிட்டபின் போகலாமே” என்றான்.
6 எனவே இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் குடித்தார்கள். பின்பு அப்பெண்ணின் தகப்பன், “தயவுசெய்து இன்றிரவும் நீ இங்கே தங்கி மகிழ்ந்திரு” எனக் கேட்டுக்கொண்டான்.
7 திரும்பவும் அவன் எழுந்து புறப்படுகையில் அவனுடைய மாமன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் அன்று இரவும் அங்கு தங்கினான்.
8 ஐந்தாம் நாள் காலையில் அவன் புறப்படுகையில் அந்தப் பெண்ணின் தகப்பன், “நீ உணவு சாப்பிட்டு மத்தியானத்திற்குப்பின் போகலாம்” என்று சொன்னான். எனவே இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.
9 பின்பு அவன் தனது வைப்பாட்டியுடனும், வேலைக்காரனுடனும் எழுந்து புறப்பட்டான்; அப்பொழுது பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனிடம், “இப்பொழுது சாயங்காலமாயிற்று; இந்த நாளும் முடியப்போகிறது. எனவே இன்றிரவும் இங்கேயே தங்கி மகிழ்ந்திரு. நாளை அதிகாலையில் எழுந்து நீ வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னான்.
10 ஆனால் அவன் அந்த இரவும் அங்கு தங்கியிருக்க விரும்பாததால், தன் பொதி ஏற்றிய இரண்டு கழுதைகளுடனும், வைப்பாட்டியுடனும் எருசலேம் என அழைக்கப்பட்ட எபூசுக்குப் போனான்.
11 அவர்கள் எபூசுவை நெருங்கிக் கொண்டிருக்கையில், இருட்டிக் கொண்டிருந்ததினால் வேலைக்காரன் தன் தலைவனிடம், “வாரும், எபூசியர் இருக்கும் இந்தப் பட்டணத்தில் தங்கி இந்த இரவைக் கழிப்போம்” என்று சொன்னான்.
12 அதற்கு அவன் தலைவன், “இல்லை; இவர்கள் இஸ்ரயேலர் அல்லாததால் இவர்களின் பட்டணத்திற்குள் நாம் போகக்கூடாது. நாம் கிபியா பட்டணத்திற்குப் போவோம்” என்று சொன்னான்.
13 மேலும் அவன், “வாருங்கள் நாங்கள் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ போய்ச் சேர்ந்து அவை ஒன்றில் இன்றிரவைக் கழிப்போம்” என்றான்.
14 எனவே அவர்கள் போனார்கள். அவர்கள் செல்கையில் பென்யமீனிலுள்ள கிபியாவை நெருங்கியதும் சூரியன் மறைந்துவிட்டது.
15 எனவே அவர்கள் இரவைக் கழிப்பதற்காக, அப்பட்டணச் சதுக்கத்திற்குப் போயிருந்தார்கள். ஆனால் யாருமே அவர்களைத் தங்கள் வீட்டிற்கு இரவு தங்கும்படி அழைக்கவில்லை.
16 அன்று மாலை நேரத்தில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த, கிபியாவில் வாழும் ஒரு வயது முதிர்ந்தவன் தன் வயல் வேலையை முடித்துவிட்டு வந்தான். அவ்விடத்திலுள்ள மனிதர்கள் பென்யமீனியர்.
17 பட்டணத்து சதுக்கத்தில் வழிப்போக்கர் இருப்பதைக் கண்ட அந்த முதியவன் அவர்களிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
18 அதற்கு அவன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள எங்கள் இருப்பிடத்திற்குப் போக வந்தோம். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குப் போனேன். இப்பொழுது யெகோவாவின் ஆலயத்திற்குப் போகிறேன். என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார் எவருமில்லை.
19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும், தீனியும் எங்களிடம் உண்டு. உமது அடியவர்களான எனக்கும், அடியாளுக்கும், எங்களோடிருக்கும் வாலிபனுக்கும் தேவையான உணவும், திராட்சை இரசமும் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” எனப் பதிலளித்தான்.
20 அதற்கு அந்த முதியவன், “உங்களை என் வீட்டிற்கு வரவேற்கிறேன். உங்களுக்குத் தேவையானவற்றை நான் தருகிறேன். ஆனால் இந்தப் பொது சதுக்கத்தில் மட்டும் இரவிலே தங்கவேண்டாம்” எனச் சொன்னான்.
21 அவ்வாறே அவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவனுடைய கழுதைகளுக்குத் தீனி போட்டான். அவர்கள் தங்கள் கால்களைக் கழுவியபின் அவர்களுக்குச் சாப்பிட உணவும் குடிக்க பானமும் கொடுத்தான்.
22 இவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருக்கையில், பட்டணத்திலுள்ள கொடுமையான மனிதர்கள் சிலர் முதியவனின் வீட்டைச் சுற்றிவளைத்தனர். அவர்கள் கதவைப் பலமாக அடித்து, வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் சத்தமாக, “உன்னிடம் வந்த அந்த மனிதனை வெளியே கொண்டுவா; நாங்கள் அவனுடன் பாலுறவு கொள்ளவேண்டும்” எனக் கூப்பிட்டுச் சொன்னார்கள்.
23 வீட்டின் சொந்தக்காரன் வெளியே போய் அவர்களிடம், “இல்லை! என் நண்பர்களே இழிவான இச்செயலை செய்யவேண்டாம். இவன் எனது விருந்தினன். ஆகையால் வெட்கக்கேடான இதைச் செய்யாதீர்கள்.
24 இங்கே கன்னிகையான எனது மகளும், அந்த மனிதனின் வைப்பாட்டியும் இருக்கிறார்கள். இப்பொழுது நான் அவர்களை வெளியே உங்களிடம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களை உங்களுக்கு விருப்பமானபடி செய்யுங்கள். ஆனால் இந்த மனிதனுக்கு இந்த வெட்கக்கேடானதைச் செய்யவேண்டாம்” என்று சொன்னான்.
25 அவன் சொன்னவற்றை அந்த மனிதர்கள் கேட்கவில்லை. எனவே அந்த லேவியன் தனது வைப்பாட்டியைப் பிடித்து வெளியே நின்ற அவர்களிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் இரவு முழுவதும் அவளைக் கற்பழித்து கடுமையாக இம்சைப்படுத்தியபின், அதிகாலையில் அவளைப் போகவிட்டனர்.
26 பொழுது விடியும் நேரத்தில் அப்பெண் லேவியன் இருந்த வீட்டிற்குப்போய் விடியும்வரை அங்கே வாயிற்படியில் விழுந்துகிடந்தாள்.
27 அந்த லேவியன் காலையில் எழுந்து தன் வழியே போவதற்காக வீட்டின் கதவைத் திறந்தான். அப்போது அவனுடைய வைப்பாட்டி வழியின் படியில் தன் இரண்டு கைகளையும் வைத்தவளாக விழுந்து கிடந்ததைக் கண்டான்.
28 அவன் அவளிடம், “எழுந்திரு போவோம்” என்றான். ஆனால் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. எனவே இறந்துபோன அவளது உடலைத் தூக்கித் தன் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனான்.
29 அவன் வீட்டிற்குப் போனவுடனே கத்தியை எடுத்துத் தன் வைப்பாட்டியின் உடலைப் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் எல்லா பகுதிகளுக்கும் ஒவ்வொரு துண்டுவீதம் அனுப்பினான்.
30 அதைக்கண்ட எல்லோரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்த காலந்தொடங்கி இப்படியான செயலைக் கண்டதோ கேட்டதோ கிடையாது. எனவே இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; யோசித்து என்ன செய்யவேண்டுமென்று எங்களுக்குச் சொல்லுங்கள்” எனக் கேட்டனர்.