< நியாயாதிபதிகள் 14 >

1 சிம்சோன் திம்னாவுக்குப் போனான். அங்கே பெலிஸ்திய இளம்பெண் ஒருத்தியைக் கண்டான்.
சிம்சோன் திம்னாத் என்னும் ஊருக்கு போய், திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்து,
2 அவன் திரும்பி வந்தவுடன், தன் தாய் தந்தையிடம், “நான் திம்னாவில் ஒரு பெலிஸ்திய பெண்ணைக் கண்டேன். அவளை எனக்கு மனைவியாக்கித் தாருங்கள்” எனக் கட்டாயப்படுத்திக் கேட்டான்.
திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
3 அதற்கு அவனுடைய தகப்பனும் தாயும் அவனிடம், “உன் உறவினரிடத்திலோ அல்லது எங்கள் மக்கள் மத்தியிலோ உனக்குப் பொருத்தமான ஒரு பெண் இல்லையா? விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியரிடத்திலா நீ உனக்கு மனைவியைத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கேட்டனர். ஆனால் சிம்சோன் அவன் தகப்பனிடம், “அவளே எனக்குச் சரியானவள்; அவளையே எனக்குத் திருமணம் செய்துதாருங்கள்” என்றான்.
அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
4 இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று அவனுடைய பெற்றோர் அறியாதிருந்தனர். அந்நாட்களில் பெலிஸ்தியர் இஸ்ரயேலரை ஆட்சிசெய்தபடியால், பெலிஸ்தியரை எதிர்ப்பதற்கு யெகோவா ஒரு தருணம் தேடிக்கொண்டிருந்தார்.
அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது யெகோவாவின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
5 சிம்சோன் தன் தாய் தந்தையுடன் திம்னா பட்டணத்திற்குப் போனான்; அவர்கள் திம்னாவில் இருக்கும் திராட்சைத் தோட்டங்களை நெருங்குகையில், திடீரென ஒரு இளம் சிங்கம் கர்ஜித்துக்கொண்டு அவனை நோக்கி வந்தது.
அப்படியே சிம்சோனும் அவனுடைய தாயும் தகப்பனும் திம்னாத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சைத் தோட்டங்கள் வரை வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற இளம் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
6 அவ்வேளையில் யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினதால், அவன் தன் வெறும் கைகளினால் அச்சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுவதுபோல் கிழித்துப்போட்டான். ஆனால் அவன் தான் செய்ததை தன் தகப்பனுக்கோ தாய்க்கோ சொல்லவில்லை.
அப்பொழுது யெகோவாவுடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன்னுடைய கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன்னுடைய தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
7 பின்பு அவன் போய் அந்தப் பெண்ணுடன் பேசினான். அவளை அவன் விரும்பினான்.
அவன் போய் அந்தப் பெண்ணோடு பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
8 சில நாட்களின்பின் அவளை திருமணம் செய்வதற்காக அவன் திரும்பி வரும்போது, தான் கொலைசெய்த சிங்கத்தின் உடல் கிடந்த இடத்தைப் பார்ப்பதற்காக வழிவிலகிப்போனான். அந்த உடலின் உள்ளே தேனீக்கூட்டமும், கொஞ்சம் தேனும் இருந்தது.
சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
9 அவன் தேனைத் தன் கையினால் தோண்டி எடுத்துத் தான் போகும் வழியில் சாப்பிட்டுக்கொண்டே போனான். அவன் தன் பெற்றோரிடம் திரும்பிவந்து சேர்ந்துகொண்டபோது, அதை அவர்களுக்கும் கொடுத்தான். அவர்களும் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால் அவன் அந்தத் தேனை சிங்கத்தின் உடலில் இருந்து எடுத்ததாக அவர்களுக்குச் சொல்லவில்லை.
அவன் அதைத் தன்னுடைய கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன்னுடைய தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.
10 அவனுடைய தகப்பன் அந்தப் பெண்ணைப் பார்க்கப்போனான். சிம்சோன் மணமகன் செய்யும் வழக்கப்படி ஒரு விருந்து வைத்தான்.
௧0அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.
11 சிம்சோன் அங்கு வந்ததும் அவனோடிருக்க முப்பது தோழர்கள் கொடுக்கப்பட்டனர்.
௧௧அவர்கள் அவனைப் பார்த்தபோது, அவனோடு இருக்கும்படி முப்பது நண்பர்களை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
12 அப்பொழுது சிம்சோன் அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்வேன். இந்த விருந்து நடக்கும் ஏழு நாட்களுக்குள்ளே அதன் பதிலை நீங்கள் சொல்லவேண்டும். அப்படி நீங்கள் சொன்னால் நான் உங்களுக்கு முப்பது பஞ்சுநூல் மேலாடைகளையும், முப்பது உடைகளையும் தருவேன்.
௧௨சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்து சாப்பிடுகிற ஏழுநாட்களுக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுப்பேன்.
13 அப்படி உங்களால் பதிலைச் சொல்ல முடியாவிட்டால் எனக்கு நீங்கள் முப்பது பஞ்சுநூல் மேலாடைகளையும், முப்பது உடைகளையும் தரவேண்டும்” என்றான். அப்பொழுது அவர்கள், “நீ உன் விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கிறோம்” என்றார்கள்.
௧௩அதை எனக்கு விடுவிக்காமல் போனால், நீங்கள் எனக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கிறோம் என்றார்கள்.
14 அதற்கு சிம்சோன் சொன்னான்: “உண்பவனிடம் இருந்து உண்பதற்கு உணவு வந்தது, வல்லவனிடம் இருந்து இனியது வந்தது.” ஆனால் மூன்று நாட்களாகியும் அதை அவர்களால் விடுவிக்க முடியவில்லை.
௧௪அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாட்கள்வரை விடுவிக்கமுடியாமற்போனது.
15 நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “எங்களைக் கொள்ளையிடுவதற்காகவா இங்கு எங்களை அழைத்தாய்? இப்பொழுது நீ உனது கணவனுடன் அன்பாகப் பேசி, எங்களுக்கு அந்த விடுகதையை விளக்கும்படி இணங்க வை; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும், உன் தகப்பன் வீட்டாரையும் எரித்து சாகடிப்போம்” என்றார்கள்.
௧௫ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் மனைவியைப் பார்த்து: உன்னுடைய கணவன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படி நீ அவனை வசப்படுத்து; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் அக்கினியால் எரித்துப்போடுவோம்; எங்களுடையவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.
16 அப்பொழுது சிம்சோனின் மனைவி, தனது கணவனிடம் சென்று அழுது, “நீர் என்னை வெறுக்கிறீர்; உண்மையாக நீர் என்னில் அன்பு செலுத்தவில்லை. நீர் என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையை சொல்லியிருக்கிறீர். ஆனால் அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லவில்லை” என்றாள். அதற்கு அவன், “நான் என் தகப்பனுக்கும், தாய்க்கும்கூட அதன் விளக்கத்தைச் சொல்லவில்லையே. அப்படியிருக்க ஏன் அதை உனக்குச் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
௧௬அப்பொழுது சிம்சோனின் மனைவி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசிக்காமல் என்னைப் பகைக்கிறாய், என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என்னுடைய தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
17 அவள் அந்த விருந்து நடந்த ஏழு நாட்கள் முடியும்வரை அழுதாள். தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்ததால் கடைசி ஏழாவது நாளிலே அவன் அவளுக்கு விளக்கத்தைச் சொன்னான். அப்பொழுது அவளும் தன் மக்களுக்கு விடுகதையின் விளக்கத்தைப் போய்ச் சொன்னாள்.
௧௭விருந்து சாப்பிடுகிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை தொல்லை செய்துகொண்டிருந்ததினால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன்னுடைய மக்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
18 எனவே ஏழாம்நாள் சூரியன் மறையுமுன் பட்டணத்து மனிதர் வந்து சிம்சோனிடம் சொன்னதாவது: “தேனிலும் இனியது என்ன? சிங்கத்திலும் வலியது என்ன?” சிம்சோன் அவர்களிடம் பதிலளித்துச் சொன்னது: “நீங்கள் எனது இளம் பசுவுடன் உழுதிராவிட்டால் என் விடுகதையை விடுவித்திருக்கமாட்டீர்கள்.”
௧௮ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனிதர்கள் அவனைப் பார்த்து: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என்னுடைய விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
19 அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அவன் அஸ்கலோனுக்குப் போய் அங்குள்ளவர்களில் முப்பது மனிதரை அடித்து வீழ்த்தி, அவர்களின் உடைகள் எல்லாவற்றையும் உரித்துக்கொண்டுவந்து விடுகதையைச் சொன்னவர்களிடம் கொடுத்தான். பின்னர் அவன் பற்றியெரியும் கோபத்துடன் அவ்விடத்தைவிட்டு தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
௧௯யெகோவாவுடைய ஆவி அவன்மேல் இறங்கியதானால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அந்த ஊர் மக்களில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று ஆடைகளைக் கொடுத்து, கோபம் வந்தவனாகப் புறப்பட்டு, தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய்விட்டான்.
20 சிம்சோனின் மனைவியோ திருமணத்திற்கு வந்திருந்த அவனுடைய சிநேகிதன் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
௨0சிம்சோனின் மனைவியோ, அவனுடைய நண்பர்களில் அவனோடு சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

< நியாயாதிபதிகள் 14 >