< யோசுவா 23 >

1 யெகோவா இஸ்ரயேலரைச் சுற்றியிருந்த அவர்களுடைய பகைவரிடமிருந்து அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்த நீண்டகாலத்திற்குபின், யோசுவா வயதுசென்று முதியவனாய் இருந்தான்.
யெகோவா இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா எதிரிகளாலும் யுத்தமில்லாதபடி ஓய்ந்திருக்கச்செய்து அநேகநாட்கள் சென்றபின்பு, யோசுவா முதிர்வயதானபோது,
2 அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரின் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகிய எல்லோரையும் அழைத்து கூறியதாவது: “நான் வயதுசென்று முதியவனாகிவிட்டேன்.
யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன்.
3 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் நிமித்தம் இந்த நாடுகளுக்குச் செய்த எல்லாவற்றையும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் புரிந்தவர்.
உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக இந்த எல்லா தேசங்களுக்கும் செய்த எல்லாவற்றையும் நீங்கள் பார்த்தீர்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவாவே உங்களுக்காக யுத்தம்செய்தார்.
4 வெற்றியடையாமல் மீதியாயிருக்கும் நாடுகளின் நாட்டை நான் உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் எப்படி, சொத்துரிமையாகப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேற்கே மத்திய தரைக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் இடையே நான் வெற்றிகொண்ட நாடுகளின் நாட்டைப் பிரித்துக் கொடுத்ததுபோலவே, இதையும் நான் கொடுத்திருக்கிறேன்.
பாருங்கள், யோர்தான் நதி முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கில் உள்ள மத்திய தரைக் கடல் வரைக்கும் இன்னும் மீதியாக இருக்கிறவைகளுமான எல்லா தேசங்களையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி, சொந்தமாகப் பங்கிட்டேன்.
5 உங்கள் இறைவனாகிய யெகோவா தாமே அவர்களை உங்கள் வழியிலிருந்து துரத்திவிடுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அவர்களை துரத்தி, உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்களுடைய பார்வையிலிருந்து அகற்றிப்போடுவார்.
6 “மிகவும் பலங்கொண்டிருங்கள்; இடப்புறமோ வலப்புறமோ சாயாமல், மோசேயினால் சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள்.
ஆகவே, மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறதை விட்டுவிட்டு, வலதுபுறமாவது இடதுபுறமாவது விலகிப்போகாமல், அதையெல்லாம் கடைபிடிக்கவும், செய்யவும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
7 உங்கள் மத்தியில் மீதியாயிருக்கும் இந்த பிற நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து உறவுகொள்ளாதிருங்கள். அவர்களின் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடவோ, ஆணையிடவோ வேண்டாம். நீங்கள் அவற்றுக்குச் சேவை செய்யவோ, வணங்கவோ கூடாது.
உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த தேசங்களோடு சேராமலும், அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை நினைக்காமலும், அவைகளைக்கொண்டு சத்தியம்செய்யாமலும், அவைகளைத் தொழுதுகொள்ளாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள்.
8 இன்றுவரை நீங்கள் செய்ததுபோலவே உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள்.
இந்த நாள்வரைக்கும் நீங்கள் செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்டிருங்கள்.
9 “இதன் நிமித்தமே யெகோவா பெரிதும் வல்லமையுள்ளதுமான நாடுகளை உங்கள் முன்பாகத் துரத்தியடித்துள்ளார். இன்றுவரை ஒருவராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியவில்லை.
யெகோவா உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான தேசங்களைத் துரத்தியிருக்கிறார்; இந்த நாள்வரைக்கும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.
10 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான்.
௧0உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார்.
11 ஆதலால் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூருவதில் மிகக் கவனமாயிருங்கள்.
௧௧ஆகவே, உங்களுடைய தேவனாகிய யெகோவா விடம் அன்புசெலுத்தும்படி, உங்களுடைய ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
12 “ஆனால் நீங்கள் வழிவிலகி, உங்கள் மத்தியில் வசிக்கும் பிற நாடுகளுக்குள் தப்பியவர்களுடன், நட்புகொண்டு, அவர்களுடன் கலப்புத்திருமணம் செய்யவோ, அவர்களுடன் உறவுகொள்ளவோ வேண்டாம்.
௧௨நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால்,
13 அப்படிச் செய்தால் உங்கள் இறைவனாகிய யெகோவா இனி ஒருபோதும் இந்த நாடுகளை உங்கள்முன் துரத்திவிடமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையும், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியாகவும், பொறியாகவும், உங்கள் முதுகுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களில் முட்களாகவும் இருப்பார்கள்.
௧௩உங்களுடைய தேவனாகிய யெகோவா இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள்.
14 “இதோ, பூமியின் மனிதர் எல்லோரும் போகும் வழியில் நானும் போகப்போகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றாகிலும் தவறவில்லை என்று நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அறிவீர்கள். அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. ஒன்றாயினும் தவறவில்லை.
௧௪இதோ, இன்று நான் பூலோகத்தார்கள் எல்லோரும் போகிற வழியிலே போகிறேன்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்காகச் சொன்ன நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்களுடைய முழு இருதயத்தாலும், முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறினது, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.
15 உங்கள் இறைவனாகிய யெகோவாவின் நல்வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் உண்மையாய் நிறைவேறியது போலவே, அவர் உங்களுக்கு அளித்த இந்த நல்ல நாட்டிலிருந்து உங்களை அவர் அழித்துப்போடும்வரை, உங்கள்மேல் வருமென அவர் அச்சுறுத்திய தீமைகள் எல்லாவற்றையும் வரப்பண்ணுவார்.
௧௫இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களிடம் சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களுக்கு எப்படி நிறைவேறியதோ, அப்படியே, உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு, அவைகளைப் பணிந்துகொள்ளும் காலத்தில்,
16 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறிப்போய் வேறு தெய்வங்களுக்குச் சேவைசெய்து, அவற்றை வணங்கினால், அவை எல்லாம் உங்கள்மேல் வரும். அப்பொழுது யெகோவாவின் கடுங்கோபம் உங்களுக்கு விரோதமாய் பற்றியெரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் விரைவில் அழிந்துபோவீர்கள்” என்றான்.
௧௬உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழிக்கும்வரைக்கும், யெகோவா உங்கள்மேல் எல்லாத் தீமையான காரியங்களையும் வரச்செய்வார்; யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள் என்றான்.

< யோசுவா 23 >