< யோனா 1 >
1 அமித்தாயின் மகனாகிய யோனாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.
௧அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
2 “நீ பெரிய பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம்பண்ணு. ஏனெனில், அதன் கொடுமை எனக்கு முன்பாக வந்திருக்கிறது.”
௨நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார்.
3 ஆனால் யோனாவோ, யெகோவாவைவிட்டு ஓடி மறுதிசையிலிருக்கும் தர்ஷீசுக்குப் போகப் புறப்பட்டான். அவன் யோப்பாவுக்குப் போய் அங்கே தர்ஷீஸ் துறைமுகத்துக்குப் போகும் ஒரு கப்பலைக் கண்டான். அவன் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலேறி, யெகோவாவிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக தர்ஷீசுக்குப் பயணமானான்.
௩அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
4 அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று.
௪யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது.
5 கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான்.
௫அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
6 அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.”
௬அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
7 அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது.
௭அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது.
8 எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள்.
௮அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
9 அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான்.
௯அதற்கு அவன்: நான் எபிரெயன்; கடலையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன் என்றான்.
10 அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள்.
௧0அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
11 கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடலின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த, நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என அவனைக் கேட்டார்கள்.
௧௧பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
12 “என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான்.
௧௨அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
13 ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது.
௧௩அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது.
14 அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள்.
௧௪அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
15 அதன்பின் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கப்பலைவிட்டு கடலுக்குள் எறிந்தார்கள். அப்பொழுது கொந்தளித்த கடல் அமைதியானது.
௧௫யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது.
16 இதைக் கண்ட அம்மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, அவருக்கு பலியைச் செலுத்தினார்கள்; அவருக்கு நேர்த்திக்கடன்களையும் செய்தார்கள்.
௧௬அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள்.
17 ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான்.
௧௭யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.