< யோவேல் 1 >

1 பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை:
பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்.
2 முதியோரே, இதைக் கேளுங்கள்; நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள். உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ, இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ?
முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?
3 இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும்.
இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.
4 பச்சைப்புழு விட்டதை, இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன.
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
5 குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.
6 வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு.
எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
7 அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது. அது அவற்றின் பட்டைகளை உரித்து எறிந்தது, அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது.
அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.
8 தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.
தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும்.
9 தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின. யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள் புலம்பி அழுகிறார்கள்.
உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள்.
10 வயல்வெளிகள் பாழாயின, நிலமும் உலர்ந்துபோயிற்று; தானியம் அழிந்தது, புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று; எண்ணெயும் குறைவுபடுகிறது.
௧0வயல்வெளி பாழானது, பூமி துக்கம் கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது.
11 விவசாயிகளே, கலங்குங்கள், திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று.
௧௧பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது.
12 திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, அத்திமரம் வாடிப்போயிற்று. மாதுளையும், பேரீச்சையும், ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின் எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று; மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று.
௧௨திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது.
13 ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
௧௩ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
14 பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். முதியோரையும், நாட்டில் வாழும் அனைவரையும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து, யெகோவாவை நோக்கிக் கதறுங்கள்.
௧௪பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள்.
15 அது எவ்வளவு பயங்கரமான நாள், யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது; அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும்.
௧௫அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது.
16 எங்கள் கண்களுக்கு முன்பாகவே உணவும், நம் இறைவனின் ஆலயத்திலிருந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ?
௧௬நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?
17 மண்கட்டிகளின் அடியில் விதைகள் காய்ந்து போயிருக்கின்றன. தானியம் அற்றுப்போனதால் பண்டகசாலைகள் பாழாகி, தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின.
௧௭விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது.
18 வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன; மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி கலங்குகின்றன; செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன.
௧௮மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.
19 யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது; வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன.
௧௯யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
20 காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; நீரோடைகள் வற்றிப்போய்விட்டன, வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது.
௨0வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.

< யோவேல் 1 >