< யோபு 37 >

1 “அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி, அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது.
“இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
2 இறைவனுடைய குரலின் கர்ஜனையையும், அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.
தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள்.
3 வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து, அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார்.
அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
4 பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது, அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்; அவருடைய சத்தம் தொனிக்கும்போது அவர் ஒன்றையும் அடக்குவதில்லை.
அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
5 இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது; அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார்.
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
6 அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும், மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார்.
அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
7 அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி, ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார்.
தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று, அவர் எல்லா மனிதருடைய கைகளையும் முடக்கிப்போடுகிறார்.
8 காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று, தங்கள் கெபிகளில் தங்குகின்றன.
அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
9 தெற்கிலிருந்து சூறாவளியும், வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
10 இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது; அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.
௧0தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும்.
11 அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி, தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.
௧௧அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார்.
12 அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன; அவை பூமியின் மேற்பரப்பெங்கும் அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன.
௧௨அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியவைக்கிறார்.
13 மனிதரைத் தண்டிப்பதற்கோ, அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.
௧௩ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார்.
14 “யோபுவே, இதைக் கேளும்; சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும்.
௧௪யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
15 இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?
௧௫தேவன் அவைகளைத் திட்டமிட்டு, தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ?
16 அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும், பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?
௧௬மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
17 தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது, உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?
௧௭தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ?
18 வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற, கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?
௧௮செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ?
19 “அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்; இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.
௧௯அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம்.
20 ‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ? தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ?
௨0நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிக்கப்பட்டுப்போவானே.
21 காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின், சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே! ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.
௨௧இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
22 வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்; திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.
௨௨ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
23 எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.
௨௩சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
24 ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்; ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.”
௨௪ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.

< யோபு 37 >